தமிழ்ச் சமூகம் ஒன்று பட்டு தனது குரலை வெளிப்படுத்த வேண்டிய தருணம் இது. ஈழப் போராட்டம் முன் எப்போதையும் விட சர்வதேச பரிமாணத்தை அதிகமாகப் பெற்றிருக்கும் இந்த தருணத்தில் தமிழர்களும் சர்வதேச அளவில் தங்கள் அறப்போராட்டத்தை மேற்கொள்வது பன்னாட்டு அண்ணாத்தைகளுக்கு நெருக்கடி கொடுக்க உதவும். எனவே ஒரு குறிப்பிட்ட ஒரே நாளில் இந்தியா இலங்கை மேற்குலகம் மலேசியா சிங்கப்பூர் மொரீஷியஸ் செஷல்ஸ் தென் ஆப்பிரிக்கா ஃபிஜி கயானா உள்ளிட்ட எல்லா நாடுகளில் உள்ள தமிழர்கள் 24 மணி நேர தொடர் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை நடத்தினால் அது சர்வதேச சமூகத்தின் கவனத்தையீர்க்கும்.
எட்டு திக்கும் மதயானைகள் என ஈழத் தமிழர்களின் உலகப் பரவல் குறித்து ஒரு முறை கி பி அரவிந்தன் எழுதியிருந்தார். பிரிட்டிஷாரின் பிரெஞ்சுக்காரர்களின் கூலிகளாகப் போயிருந்தாலும் அவர்களின் சாம்ராஜ்யங்களின் வீழ்ச்சிக்குப் பிறகும் சூரியன் மறையாத உலகில் தமிழ்ச் சமூகம் வாழ்ந்துகொண்டிருக்கிறது. இதுவரை அது காணாத இனப்படுகொலையிலிருந்து மீள்வதற்கான போராட்டத்தில் உலகத் தமிழர்களின் ஒன்றுபட்ட குரல் ஒன்றுதான் இப்போதைக்குப் பலன் அளிக்கும்
தேர்தல் விளையாட்டில் இறங்கியிருக்கும் இந்தியாவிலிருந்து இனி பெரிய அளவிலிருந்து எதிர்பார்க்க முடியாத போது அந்த கடமை பிற உலகத் தமிழர்களிடம்தான் இருக்கும். இதுதான் நிதர்சனம்.இப்போதைய தேவை உலகத் தமிழின ஒற்றுமை. அதன் ஒரு அடையாளமாக ஒரே நாளில் ஃபிஜி முதல் கலிஃபோர்னியா வரை ஒரு உண்ணாநிலைப் போராட்டம். அல்லது இதுபோன்றதொரு வேறு வடிவத்தினாலான போராட்டம். இது சாத்தியமா? இது சாத்தியப்பட்டால் ஓபாமாக்களையும் சோனியாக்களையும் நெருக்கலாம்.
ஒரு வேண்டுகோள்: இந்த மின்னஞ்சலை எவ்வளவு முடியுமோ அவ்வளவு பேருக்கு மேலனுப்பிவையுங்கள்.
அன்புடன்.
Comments