மரபுவழியிலான படை நடவடிக்கைகளில் கூட சிறப்பு படையணிகளின் பங்களிப்புக்கள் அவசியமானவை. இந்த அணிகள் எங்கு எப்போது தாக்குதலை நடத்தும் என்பதை எதிர்த்தரப்பு அறிய முடியாததனால் சிறப்பு படையணிகளின் நடவடிக்கை பாரிய உளவியல் தாக்கங்களையும் எதிர்த்தரப்புக்கு ஏற்படுத்துவதுண்டு.
இந்த தாக்குதல் உத்திகளை கருத்தில் கொண்டே சிறீலங்கா இராணுவம் 2006 ஆம் ஆண்டு நாலாம்கட்ட ஈழப்போர் உக்கிரமடைந்த போது ஆழஊடுருவும் சிறப்பு தாக்குதல் அணிகள் பலவற்றை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளில் நடவடிக்கையில் ஈடுபடுத்த முற்பட்டிருந்தது.
இவ்வாறு ஊடுருவிய ஆழ ஊடுருவும் படையணிகளின் தாக்குதல்களினால் கடந்த வருடங்களில் வன்னி பகுதியில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், விடுதலைப்புலிகளும் சில உறுப்பினர்களை இழந்திருந்தனர். ஆரம்பத்தில் விடுதலைப்புலிகள் வசம் இருந்த ஏறத்தாள 15,000 சதுரகிலோமீற்றர் பரப்பளவுள்ள பகுதிகளில் சிறீலங்கா இராணுவத்தின் 8 தொடக்கம் 12 பேர் கொண்ட ஆழ ஊருவும் படையணிகளை கண்டறிவது சிரமமானது.
எனினும் விடுதலைப்புலிகள் அங்கு வசித்த 400,000 மக்களின் துணையுடன் சிறீலங்கா இராணுவத்தின் ஆழஊடுருவும் படையணியின் பல நடவடிக்கைகளை முறியடித்திருந்தனர். கடந்த வருடத்தின் இறுதிப்பகுதியில் சிறீலங்கா இராணுவத்தின் ஆழஊடுருவும் படை நடவடிக்கைகளை வழிநடத்தி வந்த லெப். கேணல் லலித் ஜெயசிங்காவும் விடுதலைப்புலிகளின் தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தார்.
தற்போது விடுதலைப்புலிகளையும், ஏறத்தாள 250,000 மக்களையும் 50 சதுரகிலோமீற்றர் பரப்பினுள் முடக்கிவிட்டதாக படைத்தரப்பு தெரிவித்து வருகின்றது. அதாவது 15,000 சதுரகி.மீ பரப்பளவில் இருந்து விடுதலைப்புலிகளின் பிரதேசம் 50 சதுரகி.மீ ஆக குறைந்துள்ளது என படைத்தரப்பு தெரிவித்துள்ளது. எனவே படைத்தரப்பு 14,950 சதுரகி.மீ பரப்பளிவினுள் மேலதிகமாக நிலைகொண்டுள்ளது என்பதே அதன் பொருள்.
ஆனால் பெருமளவில் காடுகளையும், குளங்களையும், கிராமங்களையும், ஆறுகளையும் கொண்ட இந்த பாரிய பிரதேசத்தை தக்கவைக்க தேவைப்படும் படை பலம் அதிகம். விடுதலைப்புலிகளின் அணிகள் இராணுவ நிலைகளுக்குள் ஆழ ஊடுருவி தாக்குதல்களை ஆரம்பிக்கும் வரையிலும் இராணுவம் இந்த யாதார்த்தத்தை உணர்ந்து கொள்ளவில்லை. இவ்வாறான தாக்குதல்களை படைத்தரப்பு உணர்ந்து கொள்ளும் போது அதனை எதிர்கொள்வதும் படைத்தரப்பினால் முடியாத காரியம்.
அம்பாறையில் இருந்து மொனராகல காடு வரையிலும் ஆழ ஊடுருவி தாக்குதல்கைளை மேற்கொண்டு வரும் விடுதலைப்புலிகளுக்கு வன்னியில் ஊடுருவுவது அதிக சிரமமமானது அல்ல. அது அவர்களுக்கு நன்கு பரீட்சயமான பகுதி. மேலும் விடுதலைப்புலிகள் வசம் ஆழஊடுருவும் திறன் கொண்ட பல சிறப்பு அணிகளும் உள்ளன. தற்போது புதிதாக லெப். கேணல் அறிவு ஆழ ஊடுருவும் படையணி ஒன்றையும் உருவாக்கி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது விடுதலைப்புலிகளின் சிறப்புத்தாக்குதல் அணிகள் பல இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட பகுதிகளுக்குள் ஆழஊடுருவி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு ஊடுருவிய அணிகள் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட பல பகுதிகளில் கடந்த வாரம் தாக்குதல்களை நடத்தியுள்ளன. ஒட்டுசுட்டான், இரணைமடு சந்தி பகுதி ஆகியவற்றில் கிளைமோர் தாக்குதல்கள் நடத்தப்பட்டதுடன், முல்லைத்தீவு பகுதியில் நேரடி மோதல்களும் நடைபெற்றுள்ளன.
இரணைமடு சந்தி பகுதியில் படையினரை எற்றி சென்ற பேரூந்து ஒன்றின் மீது கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்ட போதும், கவசத்தகடு பொருத்தப்பட்ட பேரூந்துகளை படையினர் பயன்படுத்தி வருவதனால் பெரும் அனர்த்தம் தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இருந்த போதும் முள்ளியவளை பகுதிக்குள் ஊடுருவிய விடுதலைப்புலிகளின் விக்டர் கவச எதிர்ப்பு சிறப்பு படையணியினர் ரீ-55 ரக டாங்கி ஒன்றை தகர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேசமயம் முல்லைத்தீவுக்குள் ஊடுருவிய விடுதலைப்புலிகளின் 15 பேர் கொண்ட அணி ஒன்று கடந்த வாரம் 59 ஆவது படையணியின் 1 ஆவது சிங்கறெஜிமென்ட் படையினரை எதிர்கொண்ட போது கடுமையான சமர் வெடித்திருந்தது. 1 ஆவது சிங்க றெஜிமென்டை சேர்ந்த பல கொம்பனி இராணுவத்தினர் மேஜர் ரட்ணப்பிரியா பண்டு தலைமையில் விடுதலைப்புலிகளின் சிறப்பு அணிகளை தேடிய போது மீண்டும் அங்கு மோதல்கள் இடம்பெற்றதுடன், இந்த படையணியின் டெல்ற்றா கொம்பனியின் கட்டளை அதிகாரி கப்டன் தேவபிரியா உட்பட 7 படையினர் கொல்லப்பட்டதாகவும், மேலும் 7 பேர் காயமடைந்துள்ளதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த மோதல்களின் போது காயமடைந்த படையினரை மீட்பதற்கு முயன்ற கேணல் லக்சிறீ வடுகேயின் வாகனமும் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்ததுடன், 59 ஆவது படையணியின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் நந்தன உடுவததவும் இந்த தாக்குதலில் சிக்கி கொண்டார். நிலமையின் விபரீதத்தை புரிந்து கொண்ட இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேக்கா 57-4 ஆவது பிரிகேட்டை அந்த பகுதிக்கு நகர்த்தியதுடன், சிறப்பு படையணியின் கட்டளை அதிகாரியாக பணியாற்றிய பிரிகேடியர் சாகி கலகேயும் 59 ஆவது படையணியிருக்கு உதவும் பொருட்டு அங்கு அனுப்பப்பட்டிருந்தார்.
ஊடுருவிய விடுதலைப்புலிகளின் சிறப்பு படையணிகளை படைத்தரப்பு அதிக வளங்களை பயன்படுத்தி தேடிக்கொண்டிருந்த போது, முல்லைத்தீவு பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு அண்மையாக பயணித்து கொண்டிருந்த ஜீப் வாகனத்தின் மீதும் தாக்குதல் ஒன்று நடைபெற்றுள்ளது. 11 ஆவது கெமுனுவோச் பற்றலியனின் கட்டளை அதிகாரி மேஜர் திஸந்த பெர்னாண்டோவின் அந்த வாகனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அதன் சாரதி கொல்லப்பட்டதுடன், வாகனமும் கடுமையாக சேதமடைந்துள்ளது.
அதிகாரியை இறக்கிவிட்டு வாகனம் திரும்பி வந்த போது இந்த தாக்குதல் நடைபெற்றதனால் அவர் உயிர் தப்பியுள்ளார். விடுதலைப்புலிகளின் சிறப்பு அணிகள் கிளைமோர் குண்டுகள், தற்கொலை அங்கிகள், கனரக ஆயுதங்கள் சகிதம் இராணுவத்தின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் அதிகளவில் ஊடுருவியுள்ளதாக படையினரின் புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது. வன்னியில் இருந்து மதவாச்சி வரையிலுமான பகுதிகளில் தாக்குதல்களை மேற்கொள்வதே இவர்களின் நோக்கம் என அவை மேலும் தெரிவித்துள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (01) மீண்டும் விடுதலைப்புலிகளின் சிறப்பு அணிகள் கோணமுறிப்பு பகுதியில் தாக்குதலை மேற்கொண்டுள்ளன. இராணுவத்தினாரின் பாதுகாப்பு நிலைகளுக்கு விநியோக பொருட்களை எடுத்து சென்ற யுனிகோன் ரகத்தை சேர்ந்த துருப்புக்காவி வாகனம் கிளைமோர் குண்டு மற்றும் துப்பாக்கி தாக்குதலுக்கு இலக்காகியதுடன், அதில் இருந்த 3 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருந்தனர்.
இதனை தொடர்ந்து மறுநாள் திங்கட்கிழமை காலை ஆனையிறவுக்கு கிழக்கேயுள்ள வண்ணாண்குளம் பகுதியில் தற்கொலை தாக்குதல் ஒன்று நிகழ்ந்துள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
விடுதலைப்புலிகளின் அணி ஒன்று ஆனையிறவுக்கு கிழக்காகவும் வெத்திலைக்கேணிக்கு தெற்காகாகவும் உள்ள கெவில் பகுதிக்குள் ஊடுருவியிருந்ததாகவும், அந்த அணியில் இருந்த ஒரு பெண் கரும்புலி உறுப்பினர் 55 ஆவது படையணியினர் மீது கரும்புலித்தாக்குதலை நிகழ்த்தியதாகவும் அவை மேலும் தெரிவித்துள்ளன.
எனினும் இந்த தாக்குதலின் இழப்புக்கள் குறித்து படைத்தரப்பு தகவல் எதனையும் வெளியிடாத போதும், வெத்திலைக்கேணிக்கு அண்மையாக விடுதலைப்புலிகளுக்கும் இராணுவத்தின் 55 ஆவது டிவிசன் படையினருக்கும் இடையில் திங்கட்கிழமை கடும் சமர் இடம்பெற்றதாக இணையத்தளம் ஒன்று தகவல் வெளியிட்டிருந்தது. விடுதலைப்புலிகள் 55 ஆவது படையணியின் பின்னனி விநியோக தளத்தை தாக்கியதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
விடுதலைப்புலிகளின் சிறப்பு அணிகள் படையினாரின் பின்னனி நிலைகளுக்குள் பெருமளவில் ஊடுருவியுள்ளதை தொடர்ந்து படைத்தரப்பு தமது பின்னனி நிலைகளை தக்கவைப்பதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏறத்தாள 15,000 இற்கு மேற்பட்ட விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களாலும், பெருமளவான மக்கள் பாதுகாப்பு படையினராலும் பாதுகாக்கப்பட்டு வந்த 15,000 சதுர கி.மீ பரப்பளவான நிலத்தை தற்போது படையினர் பாதுகாக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். விடுதலைப்புலிகள் இந்த பகுதிகளை நிர்வகித்த காலப்பகுதியில் அங்கு ஏறத்தாள 400,000 மக்களும் வாழந்து வந்தனர். ஆனால் தற்போது மக்கள் முற்றுமுழுதாக வெளியேறிய நிலையில் இந்த பிரதேசங்களின் பாதுகாப்புக்களை பேணுவது என்பது இயலாத காரியம்.
படைத்தரப்பை பொறுத்தவரை தன்னிடம் உள்ள படை வளங்களை பயன்படுத்தி முக்கியமான நெடுஞ்சாலைகளையே பாதுகாக்க முயன்று வருகின்றது. ஓமந்தையில் இருந்து புளியங்குளம் வரையிலான பகுதிகளின் பாதுகாப்புக்களுக்கு ஏறத்தாள 2500 வான்படையினரையும், சிறப்பு அதிரடிப்படையினரையும் நிறுத்தியுள்ள அரசு முல்லைத்தீவு மற்றும் மணலாறு பகுதிகளுக்கு ஊர்காவல் படையினரை நகர்த்தியுள்ளது. 26 ஆவது தேசிய பாதுகாப்பு படைப்பிரிவு முல்லைத்தீவு பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
கட்டுநாயக்கா அனைத்துலக விமானநிலையத்தை கொழும்புடன் இணைக்கும் நெடுஞ்சாலை, அம்பாறை மாவட்டம், பொலநறுவை மாவட்டம் போன்றவற்றின் பாதுகாப்புக்களும் ஊர்காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கட்டுநாயக்கா அனைத்துலக விமானநிலையத்தை கொழும்புடன் இணைக்கும் நெடுஞ்சாலையின் பாதுகாப்புக்களை பேணிவரும் ஊர்காவல் படையினரின் வத்தளை பகுதியில் உள்ள தலைமை அலுவலகத்தில் கடந்த வருடம் குண்டு வெடிப்பு ஒன்று நிகழ்ந்ததும் நாம் அறிந்தவையே.
வான்படையினருக்கும், கடற்படையினருக்கும் என படையினரை சேர்க்கும் அரசு அவர்களை களமுனைகளில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தி வருகின்றது. அதிக அனுபவம் வாய்ந்த படையினரை களமுனையில் இழந்து வரும் படைத்தரப்பு தனது பின்னனி நிலைகளை அனுபவமற்ற படையினரையும், ஊhகாவல்படையினரையும் கொண்டு ஈடுசெய்ய முயற்சித்து வருகின்றது. ஆனால் படையினரின் இந்த முயற்சியானது படைத்துறை ரீதியாக பேரழிவுக்கே வழிவகுக்கும் என்பதை வருங்கால மோதல்கள் எடுத்துக்காட்டும்.
வேல்ஸ் இல் இருந்து அருஷ்
நன்றி: ஈழமுரசு (07.03.2009)
Comments