மதிப்பீட்டை மீறியது!


ஓரிரு நாட்களில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப் படுவார்கள் எனக் கடந்த ஒருமாத காலத்திற்கு மேலாகக் கூறிவந்த சிறிலங்கா ஆட்சியாளர்கள் - குறிப்பாக இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத்பொன்சேகாவும், பாதுகாப்பு அமைச்சுத் தரப்பினரும் தற்பொழுது விடு தலைப் புலிகளைத் தோற்கடிப்பது குறித்தும்; யுத்தம் முடிவுறும் நாள் குறித்தும் பேசுவதனை தவிர்க்கின்றனர் அன்றிக் காலவரையறையை நீடித்துச் செல்கின்றனர்.


இந்தவகையில் யுத்தம் ஓரிரு நாட்களில் , விரைவில் முடிவிற்கு வந்துவிடுமெனக் கூறிவந்த சனாதிபதி மகிந்தவின் சகோதரரும், பாதுகாப்புச் செயலாளரும் யுத்தத்தை முன்னின்று நடத்துபவருமான கோத்தபாய ராஜபக்ச யுத்தத்தை முடிவிக்குக் கொண்டுவர - அதாவது விடுதலைப் புலிகளிடம் உள்ள பகுதிகளை மீட்கக் கால வரையறை செய்யமுடியாதெனத் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

கோத்தபாய ராஜபக்சவினால் இத்தகவல் விரும்பி வெளியிடப்பட்ட தகவலாகாது. தவிர்க்கப்படமுடியாத தொரு நிலையில் வெளியிடப்பட்ட தகவலாகவே இருக்க முடியும். ஏனெனில் யுத்தத்தில் விரைவில் வெற்றி என்ற நம்பிக்கையில் இருந்த பௌத்த-சிங்களப் பேரினவாதி களுக்கு கோத்தபாய ராஜபக்ச விருப்பத்துடன் ஏமாற்றம் அளிக்கும் தகவல் ஒன்றை வெளியிட விரும்பியிருக்க முடியாது.

அவ்வாறானால், கோத்தபாய ராஜபக்ச இத்தகவலைத் தவிர்க்கமுடியாது வெளியிடவேண்டிய நிர்ப்பந்தம்தான் ஏன் ஏற்பட்டது. அதாவது கோத்தபாயாவின் நிகழ்ச்சி நிரல் மாற்றம் காணவேண்டிவந்தது ஏன்? இதற்கு சந்தேகத்திற்கு இடமின்றி விடுதலைப் புலிகள் காட்டிவரும் உக்கிரமான எதிர்ப்பும், சிறிலங்காப் படைத்தரப்பு சந்தித்துவரும் பாரிய இழப்புக்களுமே காரணமாகும்.

சுதந்திரபுரம், வள்ளிபுனம், தேவிபுரம் பகுதிகளில் இருந்து புலிகள் வெளியேறியதும் இனி யுத்தம் நீடித்துச் செல்வதற்கான வாய்ப்பு இல்லை என்றே பொதுவாகவே கருதப்பட்டது. உலக வரலாற்று நிகழ்வுகளின் அடிப்படை யும் இதற்கு ஆதரவாகவே இருந்தது. ஆனால், கள முனையில் நிகழ்வுகள் அவ்வாறானதாக இருக்க வில்லை. சிறிலங்காவின் எதிர்பார்ப்பிற்கு மாறானதாக எதிர்வு கூறமுடியாததொன்றாகவே இருந்தது. பெரும் படையெடுப்பை எதிர்கொள்ளும் உறுதிமிக்க வீரர்களாகப் புலிகள் இருந்தனர்.

அதாவது, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறப்படும் பிரதேசத்தின் அளவு; எஞ்சி யுள்ளதாக அரச தரப்புக்கூறும் விடுதலைப் புலிகளின் எண்ணிக்கை; விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள மக்களின் எண்ணிக்கை என்பனவற்றிற்கு மாறானதாக யுத்தமானது கடுமையாக இருந்தது. இந்நிலையானது சிறிலங்கா அரச தரப்பின் யுத்தம் குறித்த மதிப்பீட்டை மாற்றி அமைக்க நிர்ப்பந்தித்துள்ளதெனலாம்.

இதைவிடுத்து கோத்தபாய ராஜபக்சவோ அரச தரப்போ கூறிக்கொள்வதுபோன்று யுத்தம் மந்தமாகவும், மெதுவாகவும் முன்னெடுக்கப்படுவதினால், காலவரை யறை செய்யமுடியாதுள்ளது என்பதல்ல. சிலவேளை களமுனைக்கு வெளியிலுள்ள மக்களுக்கு குறிப்பாக வன்னிக்கும், இலங்கைக்கும் வெளியில் உள்ளோருக்கு யுத்தத்தின் கடுமை தெரியாததாக இருக்கலாம். கோத்த பாயவின் கூற்றுக்கள் ஏற்புடையதாக இருக்கலாம்.

ஆனால், களமுனையில் நாளாந்தம் சிறிலங்கா அரசு பயன்படுத்தும் வெடி பொருட்களின் அளவு - குறிப் பாக விமானக் குண்டுவீச்சு, எறிகணை வீச்சு என்பன வற்றின் அளவில் இருந்தே யுத்தத்தின் கடுமையும், தீவிரமும் வெளிப்படக்கூடியதாகும். இந்தளவிற்கு வெடி பொருட்கள் தேவைப்படுமா? என்ற அளவிற்கு சிறிலங்கா ஆட்சியாளர்களே ஆச்சரியப்படும் அளவிற்கு யுத்த மானது கடுமையாக உள்ளது என்பதே உண்மையாகும்.

இத்தகைய களநிலையே யுத்தத்திற்கான காலவரை யறையைச் செய்யமுடியாத கட்டாயத்தை சிறிலங்கா ஆட்சியாளருக்கு ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அப்பால் தமிழ் மக்கள் மீது கொண்டுள்ள அக்கறையினாலோ, அன்றிச் சர்வதேசத்தின் அழுத்தத்தினாலோ, மனித உரிமை அமைப்புக்களின் கண்டனங்களினாலோ சிறிலங்கா ஆட்சியாளர்கள் யுத்தத்தை மெதுவாகவோ, மந்தமாகவோ நடத்த முற்பட்டுள்ளதாக இல்லை. இன்றும் ஆட்சியாளர்கள் நாளாந்தம் தமிழர்களைக் கொன்றும் காயப்படுத்தியுமே வருகின்றனர்.

நன்றி
ஈழநாதம்
24-03-2009

Comments