மக்கள் பாதுகாப்பு வலயத்தின் மீது இராணுவம் தொடர்ந்து தாக்குதல் - மனித உரிமை கண்காணிப்பகம்

வன்னியில் இலங்கை அரசாங்கம் பிரகடனம் செய்த மக்கள் பாதுகாப்பு வலயத்தின் மீது இராணுவம் தொடர்ந்து எறிகணை மற்றும் விமானத் தாக்குதல் நடாத்திவருவதாக மனித உரிமை கண்காணிப்பகம் குற்றச்சாட்டியுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களில் சுமார் 2700 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள புதுமாத்தளன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் மக்களது எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து புதுமாத்தளன் வைத்தியசாலை வைத்தியருடன் தொலைபேசியில் உரையாடியதாகவும் அருகில் எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்ததாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்தியப் பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.

எனினும் மக்கள் நிலைகள் மீது எறிகணைத் தாக்குதல் நடத்தப்படுவதில்லை என அரசாங்கம் மறுப்புத் தெரிவித்து வருகின்ற ஆனால் மோதல் தவிர்ப்பு வலயத்தில் இடம்பெறும் சேதங்கள் அதிகரித்து வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கைக்கு நிதியுதவி அளிக்கும் பேச்சுவார்த்தைகளின் போது மனித உரிமை மீறல்கள் மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு குறித்து சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் வலியுறுத்த வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளதாக ஏ.எப்.பி செய்திஸ்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.

Comments