உலகின் 21 நாடுகளில் வசிக்கும் 45 பிரதிநிகள் கலந்துகொண்ட இந்த மாநாட்டின் சிறப்புப் பேச்சாளர்களாக அமெரிக்காவின் பிரபல மனித உரிமைவாதி வணக்கத்திற்குரிய ஜெசி ஜக்சன் (Rev. Jesse Jackson), இலங்கை பிரச்சினைக்காக பிரித்தானியப் பிரதமர் கோர்டன் பிறவுனால நியமிக்கப்பட்டுள்ள சிறப்புத் தூதுவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டெஸ் பிறவுண் (Rt. Hon. Des Browne MP), பல்கொனர் பிரபு (Lord Falconer), நாடாளுமன்ற உறுப்பினர் சியோபன் மக்டொனாஹ் (Siobhan McDonagh MP), நாடாளுமன்ற உறுப்பினர் சைமன் கியூஸ் (Simon Hughes MP), நாடாளுமன்ற உறுப்பினர் கீத் வாஸ் (Keith Vaz MP), மற்றும் கலாநிதி ஜிம்மி சவில்லி (Sir Jimmy Saville) ஆகியோர் கலந்துகொண்டனர்.
மாநாட்டில் உரையாற்றிய அமெரிக்காவின் பிரபல மனித உரிமைவாதி வணக்கத்திற்குரிய ஜெசி ஜக்சன் (Rev. Jesse Jackson), படுகொலைகள் நிறுத்தப்பட வேண்டும் எனவும், இலங்கையின் இனப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட வேண்டிய அவசியம் பற்றி வலியுறுத்தினார்.
அத்துடன், தமிழனப் படுகொலையை தடுத்து நிறுத்த அனைத்துலக சமூகம் முன்வர வேண்டும் எனவும் அழைப்பு விடுத்த அவர், தமிழ் மக்களின் பிரச்சினை அனைத்துலக மயப்படுப்பட வேண்டிய அவசியம் பற்றியும் எடுத்துரைத்தார்.
இலங்கை பிரச்சினைக்காக பிரித்தானியப் பிரதமர் கோர்டன் பிறவுனால் நியமிக்கப்பட்டுள்ள சிறப்புத் தூதுவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டெஸ் பிறவுண் உரையாற்றும்போது, இனப்பிரச்சினையில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும், தற்பொழுது போர்ப் பிரதேசங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அகப்பட்டு பாரிய மனித அவலம் தோற்றுவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
போர் பிரதேசத்தில் இருந்து வெளியேறும் சுதந்திரம் பொதுமக்களுக்கு இருப்பதைச் சுட்டிக்காட்டிய டெஸ் பிறவுண், அரசால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயத்தில் பலர் கொல்லப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டினார்.
பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு கடுமையான கண்டனம் வெளியிட்ட அவர், ஒவ்வொரு பொதுமகனின் உயிரிழப்பு பற்றி சிறீலங்கா அரசு விசாரணை நடத்த வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.
கடந்த ஜனவரியில் பிரித்தானியப் பிரதமர் கூறியது போன்று இலங்கையில் அமைதியை ஏற்படுத்த பிரித்தானிய அரசு முடிந்தளவு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.
பிரித்தானியப் பிரதமர் தன்னை சிறப்புத் தூதுவராக நியமித்தபோது சிறீலங்கா அரச தரப்பில் இருந்து எழுந்த எதிர்ப்பலைகளையும் சுட்டிக்காட்டிய பிறவுண், இதனால் பிரித்தானிய அரசு ஏமாற்றம் அடைந்ததாகவும் குறிப்பிட்டார்.
பிரித்தானிய அரசு தீர்வை முன்வைக்காது எனவும், அது முற்றிலும் இலங்கை மக்களைப் பொறுத்தது என்று கூறிய டெஸ் பிறவுண், ஆனால் வட அயர்லாந்து போன்று அரசியல் தீர்வே பொருத்தமானவும் என்றும், படைத்துறைதை் தீர்வு அல்ல என்றும் சுட்டிக்காட்டினார்.
• சிறீலங்கா அரசு தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையை மேற்கொண்டு வருகின்றது,
• தமது வழ்வுரிமையை தாமாக நிலைநாட்டும் உரிமை தமிழர்களுக்கு உண்டு,
• சுதந்திரமும், தன்னாட்சி அதிகாரமும் உள்ள தமிழீழத் தனியரசை உருவாக்குவதே இறுதித்தீர்வாக அமையும்,
• தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழ் மக்கள் ஏக பிரதிநிதிகள்
போன்ற தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
\
இந்த தீர்மானங்களுக்கு அமைவாக....
1. தமிழ் பொதுமக்கள் மீதான சிறீலங்கா அரசின் தாக்குதல்களும், கொலைகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்,
2. வன்னி மக்களுக்கான மனிதாபிமான நடவடிக்கைகள் அனுமதிக்கப்பட வேண்டும்
3. ஐக்கிய நாடுகள் சபை, அனைத்துலக அரச சார்பற்ற மனிதநேய அமைப்புக்கள், அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் என்பன வன்னி செல்ல அனுமதிக்கப்படுவதுடன், அவை அங்கு நிரந்தர அலுவலகங்களை அமைப்பு பணி புரியவும் அனுமதி வழங்கப்பட வேண்டும்.
4. உடனடி போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும்
5. போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து, தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அரசியல் பேச்சுக்கள் உடன் ஆரம்பிக்கப்பட வேண்டும்
போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு, பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
Comments