ஈழ ஆதரவுக் குரல்களும் வரப்போகும் இந்தியத் தேர்தலும் - ஒரு கண்ணோட்டம்

என்றுமில்லாதவாறு ஈழ ஆதரவுக்குரல்கள் உலகெங்கிலும் ஓங்கியொலித்துக் கொண்டிருக்கையில் இந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழகத்தில் ஈழவாதரவுக்குரல்களை எழுப்புவோர்களிலும் அக்குரல்களின் தொனிகளிலும் சற்று மாறுதல்கள் தெரிகிறது.

ஆரம்பத்திலிருந்தே ஈழமக்களுக்காக உரிமைக்குரல் எழுப்பிக்கொண்டிருந்த திரு.பழநெடுமாறன் திரு.வை.கோபாலசாமி ஆகியோரின் வரிசையில் தற்போது பல புதுமுகங்கள் தோன்றத்தொடங்கியுள்ளன. ஈழ ஆதரவாளர்கள் அதிகரிக்கிறார்கள் என்பது நல்லதொரு விடயந்தானாகினும் அது உண்மையான உணர்வுடன் தோற்றம் பெறவேண்டியது மிக மிக அவசியம். குறுகிய சுயநல நோக்கங்களுக்காக செயற்படுபவர்களின் குரல்கள் பயனற்றவை என்பதுடன் பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்தும் என்பதை கருத்தில் கொள்ளல் வேண்டும்.

தமிழகம் நன்கறிந்த முக்கிய அரசியல்வாதிகளான கலைஞர்.மு.கருணாநிதி மற்றும் செல்வி.ஜெயலலிதா போன்றோரின் அடிக்கடி நிலைமாறும் கருத்துக்களும் கபட நாடகங்களும் தேர்தல் வருகின்ற நிலையில் மீண்டும் அரங்கேறத் தொடங்கியுள்ளன. கலைஞர் கருணாநிதி ஒருபக்கம் ஈழத்தமிழருக்காக நீலிக்கண்ணீர் வடித்துக்கொண்டு மறுபக்கத்தில் "தேசிய பாதுகாப்புச் சட்டம்" காவல்துறை அராஐகம் என ஈழ ஆதரவாளர்களுக்கு எதிராக கொடும் அஸ்திரங்களை ஏவி வருகிறார். "ஈழத்தமிழர் என்று சொல்வதே தவறு ஈழம் என்கிற ஒரு நாடே இல்லை" என ஏகதாளத்திற்கு அறிக்கை விட்டிருந்த செல்வி.ஜெயலலிதா இப்பொழுது அப்படியே தலைகீழாய் மாறி... "ஈழத்தமிழரிற்கு சுயநிர்ணய உரிமையுள்ள தனிநாடு வேண்டும்" என கூறியுள்ளதுடன் தனது உண்ணாவிரத நாடகத்தையும் அட்டகாசமாக அரங்கேற்றி வைத்துள்ளார்.

விஜயகாந்த் சரத்குமார் என புதிதாக உருவான அரசியல் முகங்கள் இவ்வளவு நாளும் சும்மா இருந்து விட்டு தற்பொழுது தேர்தல் வருகிறதென்றதும்... தங்கள் பங்கிற்கு அறிக்கைகளை அள்ளி வீசிக்கொண்டிருக்கிறார்கள். இவை அனைத்துமே நடக்கவிருக்கும் இந்திய நாடாளுமன்ற தேர்தலுக்கான எடுப்புக்கள் தானேயொழிய உண்மையான வெளிப்பாடுகள் அல்ல. மொத்தத்தில் ஈழ ஆதரவுக்குரல்களை எழுப்புவதன் மூலம் தமிழக மக்களனைவரினதும் ஒட்டுமொத்த ஆதரவினைப் பெறலாம் என்ற ஒரே நோக்கத்துக்காக செயற்படத் தொடங்கியிருக்கிறார்கள் தமிழக அரசியல்வாதிகள்.

பேரணிகள் ஆர்ப்பாட்டங்கள் மனிதச்சங்கிலிகள் என நடந்து வந்த எழுச்சிகள் இப்பொழுது தேர்தல் பிரச்சார மேடைகளுக்குள் அடங்கத் தொடங்கியுள்ளன. இவற்றுக்கெல்லாம் ஆப்பு வைத்தாற்போல இந்திய தேர்தல் ஆணையம் "தேர்தல் பிரச்சாரங்களில் ஈழ ஆதரவு கருத்துக்களை தெரிவிப்பதற்கோ அல்லது ஈழப்பிரச்சினையைப் பற்றி பேசுவதற்கோ முடியாது" என தடை விதித்துள்ளது. இது காங்கிரஸ் கட்சியின் திட்டமிட்ட செயல் என்பது வெளிப்படையாக தெரிகின்றபோதிலும் நடுநிலையாக இருக்கவேண்டிய இந்திய தேர்தல் ஆணையம் கூட பக்கச்சார்பாக நடந்திருக்கின்றது என்பது வருந்தத்தக்க விடயம். எது எப்படி இருப்பினும் இம்முறைத் தேர்தலில் தடைகளையும் மீறி மறைமுகமாகவேனும் ஈழ ஆதரவுக் கருத்துக்கள் வெளிவரும் என்பதில் ஐயமில்லை. ஏனெனில் ஈழப்பிரச்சினை என்ற வலுவான பிரச்சார ஆயுதத்துடன்தான் இம்முறை அனைவரும் தேர்தல் களமிறங்கியிருக்கிறார்கள்.

எவர் என்ன வேடம் போட்டாலும் என்னதான் அறிக்கைகளை அள்ளி விட்டாலும் ... தமிழகமக்கள் உண்மையான உணர்வுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்... தீர்ப்பளிப்பதற்கு!!! வரப்போகும் தேர்தல்முடிவுகள் ஈழமக்களுக்கு உண்மையிலேயே விமோசனத்தை கொடுக்கக்கூடியதாக அமைய வேண்டுமென்பது தமிழக மக்கள் அனைவரினதும் உளமார்ந்த எண்ணமும் எதிர்பார்ப்புமாக இருக்கின்றது. அரசியல்வாதிகள் போல் வேடம் போடுவதற்கோ அல்லது கலைஞர்கள் நடிகர்கள் போல நடிக்கவோ இம்மக்களுக்கு தெரியாது.

ஈழத்தில் நடக்கும் கொடுமைகளைப் பார்த்து மனமுருகிச் சிந்தும் அவர்களின் ஒருதுளிக் கண்ணீரில் அவர்களின் எண்ணமும் திண்ணமும் தெளிவாகவே தெரிகிறது. வரப்போகும் தேர்தலினால் மாற்றங்கள் நிகழ்கிறதோ இல்லையோ...! தமிழ் மக்களின் உண்மையான உறுதியான ஆதரவுக்குரலினாலும் பேரெழுச்சியினாலும் பெருமாற்றங்கள் நிகழும் என்பதுவே உண்மை.

-பருத்தியன்-

Comments