ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பை ஏற்று இலங்கைக்கான தமது இரண்டாவது விஜயத்தை அண்மையில் மேற்கொண்ட ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான பிரதி செயலாளர் ஜோன் ஹோம்ஸ் வன்னிப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த நிலையில் வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருப்பவர்களை பார்வையிட்டிருக்கின்றார்.
உள்ளக இடப்பெயர்விற்குள்ளான நிலையில் வவுனியா மற்றும் அதனைச் சூழ உள்ள பகுதிகளில் 13இற்கும் மேற்பட்ட இடங்களில் மக்கள் தங்கவைக்கப்பட்டிக்கின்றபோதும் அனைத்து முகாம்களும் ஐ.நா.வின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான பிரதிப் பொதுச் செயலாளர் நாயகத்திற்கு காண்பிக்கப்பட்டதாக தெரியவில்லை. அமைச்சர்களும், படைத்தரப்பும், முன்கூட்டியே தயார்ப்படுத்திவைத்திருந்த முகாம் பகுதிக்கே அழைத்துச் சென்று காண்பித்திருக்கின்றனர்.
கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினுள் உள்நுழையும் மக்கள் எதுவித குறைகளும் இன்றி திருப்திகரமாக இருக்கின்றார்கள் என்பதையும் இடம்பெயர்ந்தோர் மட்டில் மனித உரிமைகள் சரிவரப் பின்பற்றப்படுகின்றன என்பதையும் காட்டவேண்டியதேவை அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருக்கின்றது. ஆனால் மணல்வீடு கட்டி விளையாட்டுக் காட்டும் சிறுபிள்ளைத்தனத்தை தெளிவாக அறிந்து கொண்டதால்தான் வவுனியா முகாம்களில் மக்கள் சுதந்திரமின்றி அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை தனது நேரடி விஜயத்தின் அனுபவ பகிர்வாக ஜோன்ஹோம்ஸ் வெளிப்படுத்தியிருக்கின்றார். சுயாதீன அமைப்பொன்றின் பொறுப்புவாய்ந்த உயர் பதவியை வகிக்கும் ஜோன்ஹோம்ஸின் கருத்துக்கள் சர்வதேசத்திற்கு இடைத்தங்கல் முகாம்களின் உண்மை நிலைமையை வெளிப்படையாக தெளிவுபடுத்தியிருக்கின்ற அதேவேளை அரசாங்க தரப்பை சற்றேனும் சங்கடத்திற்கு உட்படுத்தாமல் இருக்கும் என எதிர்பார்க்கவும் முடியாது.
மாடு சொன்னால் கேட்காது. மணிகட்டிய மாடு சொன்னால்தான் கேட்கும் என்ற நிலை ஜோன்ஹோம்ஸின் வவுனியா விஜயத்தின் ஊடாக சர்வதேசத்திற்கு மட்டுமல்ல, உள்நாட்டிற்கும் தகுந்த பாடமாகவே கற்பிக்கப்பட்டி ருக்கின்றது.
வன்னிப்பிரதேசத்தில் எழுப்பப்படும் மரண ஓலங்கள் விண்ணை கிழிக்கத்தொடங்கியிருக்கின்றதே தவிர பொறுப்புவாய்ந்த சர்வதேச சமூகத்தின் காத்திரமான, செயல்திறன் மிக்க பங்களிப்பை இதுவரை தன் பக்கம் சுண்டி இழுத்திருப்பதாக தெரியவில்லை. இந்நிலையில் தொடர்ந்தும் கட்டுப்பாடற்ற பகுதிகளில் இடம்பெற்றுவரும் யுத்த சூழ்நிலையிலிருந்து தப்பி அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் தம் உறவுகளை நம்பி வந்தவர்கள் முட்கம்பி வலயங்களால் முற்றுøகயிடப்பட்டிருக்கின்றமை ஜோன் ஹோம்ஸை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கத்தான் செய்கின்றது. இதனையே அவர் வவுனியாவிற்கான தமது விஜயம் குறித்த ஊடகவியலாளர்கள் மாநாட்டில் வெளிப்படையாகத் தெரிவித்திருக்கின்றார். இலங்கையின் வடக்கே யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் பிரதேசங்களில் இருந்து இதுவரையில் இடம்பெயர்ந்த மக்கள் வவுனியாப்பகுதியில் சுதந்திரமின்றி அடைக்கப்பட்டவர்கள் போன்றே முகாம்களுக்குள் வாழ்ந்து வருகின்றனர் எனவும் முகாம்களில் முடங்கியிருப்பவர்களில் இயல்பு வாழ்க்கையை காணமுடிவில்லை எனவும் ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான பிரதி செயலாளர் ஜோன்ஹோம்ஸ் தெரிவித்திருக்கின்றார். இலங்கைக்கு தாம் மேற்கொண்ட முதலாவது விஜயத்தின்போது இருந்த நிலைமைக்கும் தற்போதைய இரண்டாவது தடவையாக மேற்கொண்ட விஜயத்தின் போதான இலங்கையின் நிலைமைக்கும் இடையே பாரிய மாற்றங்கள் இருப்பதை அவதானிக்க முடிந்திருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின்பேரில் இலங்கைக்கு வருகை தந்த ஜோன்ஹோம்ஸ் கடந்த 20 ஆம் திகதி வவுனியாவிற்குச் சென்று அங்கு இடம்பெயர்ந்த நிலையில் தங்கியுள்ள மக்களை பார்வையிட்டு பின் அது தொடர்பில் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது தமது கருத்துக்களை தெரிவித்திருக்கின்றார்.
வன்னிப்பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்த நிலையில் வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் மக்கள் சுதந்திரமின்றி அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், அங்குள்ள மக்களுடன் சுதந்திரமாக கலந்துரையாடக்கூடியதான சூழ்நிலை அங்கு இருக்கவில்லை . இடம்பெயர்ந்த மக்களை சந்திக்கச் சென்றபோது அமைச்சர்களும், அரச அதிகாரிகளும், படைத்தரப்பினரும் குழுமியிருந்தமையால் மக்களுடன் சுதந்திரமான முறையில் அவர்களது நலன்கள் மற்றும் தேவைகள் குறித்து கலந்துரையாட முடியவில்லை எனவும் ஹோம்ஸ் தனது கவலையை வெளிப்படுத்தியிருக்கின்றார். இடைத்தங்கல் முகாம்களை பார்வையிட்ட ஹோம்ஸ் வவுனியா அரசாங்க அதிபர், ஐக்கிய நாடுகள் பணியாளர்கள், அரசசார்பற்ற நிறுவன ஊழியர்கள், சர்வதேச அரச சார்பற்ற நிறுவன ஊழியர்கள் என பலதரப்பட்டவர்களுடன் இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பாக பேசியிருப்பதோடு இறுதியாக இது தொடர்பாக ஜனாதிபதியுடனும் பேசியிருக்கின்றார்.
யுத்தம் நடைபெற்றுவரும் பகுதிகளை அண்டிய பிரதேசங்களில் எறிகணை வீச்சுக்கள் மற்றும் விமானத்தாக்குதல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதனால் நாள்தோறும் மக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டு வருவதால் மக்களது பாதுகாப்பிற்கான உத்தரவாதத்தையும் வலியுறுத்தியிருக்கின்றார். வவுனியாவில் இடம்பெயர்ந்த நிலையில் நெருக்கடிகளுக்குள் வாழும் மக்களின் நிவாரணப் பணிக்காக இலங்கை அரசாங்கத்திற்கு பத்து மில்லியன் அமெரிக்க டொலர்களையும் வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இடம்பெயர்ந்த மக்களுக்கான நிவாரண பணிகளுக்கென அரசாங்கத்திடம் வழங்கப்பட்ட உதவித் தொகைகள் முழுøமயாக மக்களை சென்று அடையவில்லை எனும் பரவலான குற்றச்சாட்டுக்கள் பல்வேறு மட்டங்களில் எழுந்திருக்கும் நிலையில் ஜோன் ஹோம்ஸினால் வழங்கப்பட்டிருக்கும் மேற்படி நிதியுதவி அவரது நேரடி விஜயத்தின் மூலம் பெற்றுக் கொண்ட அனுபவத்திற்கு எதிர்மாறானதாகவே இருப்பதாக விமர்சிக்கப்படுகின்றது. வவுனியா நலன்புரி முகாம்களில் சுகாதார மற்றும் அத்தியாவசிய அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் நடவடிக்கைகளை ஒருசில அரசசார்பற்ற நிறுவனங்களே முன்னெடுத்து வருகின்றன.
அரசசார்பற்ற நிறுவனங்களும் முகாம்களுக்குள் உள்நுழைவதற்கான அனுமதிப்பத்திரம் பெறப்பட வேண்டும் என்ற நிபந்தனை முன்வைக்கப்பட்டிருப்பதாக தெரிகின் றது. இந்நிலையிலேயே வவுனியா முகாம்களின் முகாøமத்துவ பொறுப்பை ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக்கொள்ள வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜோன்ஹோம்ஸிடம் வலியுறுத்தியுள்ளனர். வன்னிப்பகுதியில் இருந்து வெளியேறும் மக்களை வவுனியாவில் உள்ள முகாம்களில் அடைத்து வைத்திருப்பதை எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அவர்களை உறவினர்களோ, நண்பர்களோ, நாடாளுமன்ற உறுப்பினர் களோ சென்று பார்க்கமுடியாத நிலை ஏற்பட்டிருப்பதால் வவுனியாவில் உள்ள இடைத்தங்கல் முகாம்களின் முகாமைத்துவ பொறுப்பை ஐக்கிய நாடுகள் சபை ஏற்க வேண்டும் என்றும், அப்போதுதான் இடம்பெயர்ந்து வரும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினர் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை விவகாரங்களுக்கான பிரதிப் பொதுச் செயலாளர் நாயகம் ஜோன்ஹோம்ஸிடம் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சிவசக்தி ஆனந்தன், மற்றும் இரா.சம்பந்தன் ஆகியோர் ஜோன்ஹோம்ஸை கடந்த மாதம் 21ஆம் திகதி சந்தித்த போதே மேற்படி கருத்துகளை முன்øவத்திருக்கின்றார்கள். இது இவ்வாறிருக்க வன்னிப்பகுதியில் இருந்து இடம்பெயரும் மக்களை வவுனியாவிற்கு அழைத்துவருவதை தவிர்த்து வன்னியில் படையினரால் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் வைத்து பராமரிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் இடைத்தங்கல் முகாம்களில் உள்ளவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஐக்கிய நாடுகள் அதற்கான பொறுப்பை ஏற்கவேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை விவகாரங்களுக்கான பிரதிப் பொதுச் செயலாளர் நாயகம் ஜோன்ஹோம்ஸிடம் கேட்டிருக்கின்றார். தமிழ் மக்கள் பாதுகாப்பு வலையங்கள் எனும் போர்வையுள் உள்வாங்கப்பட்டு திட்டமிடப்பட்டு கொல்லப்படுவதோடு, அவர்களின் கலை, கலாசாரம், மதம் என்பனவும் திட்டமிடப்பட்டே அழிக்கப்படுவதை இனச் சுத்திரிகரிப்பு நடவடிக்கையாகவே தாம் கருதுவதõகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் ஜோன்ஹோம்ஸிடம் கவலை வெளியிட்டிருக்கின்றார்.
தொடருகின்ற யுத்தத்தின் விளைவாக முழு நாட்டினதும் பொருளாதாரம், மனித உரிமைகள், அடிப்படை வாழ்வாதாரங்கள், என்று அனைத்துமே சிதைந்து சின்னாபின்னமாகின்ற நிலை நீடித்துக் கொண்டே செல்கின்றது.
Comments