எட்டாவது இடப்பெயர்வாக முல்லைத்தீவு இரட்டைவாய்க்கால் பகுதியில் துன்பத்துடன் வாழும் நா.தயாபரன் என்பவர் எழுதியுள்ள கடிதம் ஒன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்கடிதத்தின் முழுமையான விபரம் வருமாறு:
நா.தயாபரன்.
இரட்டைவாய்க்கால்,
முல்லைத்தீவு.
26.03.2009
எங்கள் உணர்வுகளுக்கும் மதிப்புக்கொடுங்கள்
அன்புடையீர்!
சர்வதேச நாடுகளும் அமைப்புக்களும் ஏனைய செய்தி ஊடகங்களும் எம் தொடர்பாக வெளியிடும் செய்திகளையும் கருத்துக்களையும் செயற்பாடுகளையும் கேட்கும்போது ஆடு வெட்டுபவனின் முன்னால் நிற்கும் ஆட்டின் மனநிலையில் துடிக்கின்றோம். எமது உணர்வுகளை புரிந்துகொள்ள யாரும் இல்லையா?
எனது மனது எமது உண்மை நிலையை அவர்களுக்கு தெரியப்படுத்த வேணும் எனத் துடிக்கும். ஆனால் எந்த வழியும் இல்லை. அதனால் மன ஆறுதலுக்காக எழுதிவிட்டு கிழித்தெறிவேன். இதையும் கடும் மனப்பாரத்துடன் எழுத ஆரம்பிக்கின்றேன். யாருடைய காலைப்பிடித்தென்றாலும் இதை எந்த வழியிலாவது அனுப்ப வேணும் என்ற உறுதியுடன் எல்லாம் வல்ல ஆண்டவரை மனதில் இருத்தி தொடர்கிறேன்.
கிளிநொச்சியில் அச்சகம் வைத்திருந்து படு பிசியாக இருந்த நான் குறைந்தது நாற்பது லட்சம் பெறுமதியான அச்சகத்தை உடையார்கட்டுடன் விட்டுவிட்டு இன்று எட்டாவது இடம்பெயர்வாக இரட்டைவாய்க்கால் எனும் ஊரின் வெளியில் தரப்பால் கொட்டகையில் வெயிலிலும் மழையிலும் வர்ணிக்க முடியாத துன்பத்தை அனுபவிக்கிறோம். இந்த துன்ப இருளிலிருந்து நிரந்தரமான விடியலை எதிர்பார்க்கின்றோம். இதனைக்கூட எழுதும் போது மேலே கிபிர் அருகிலெங்கேயோ தாக்குதல் நடத்துகின்றது. பங்கருக்குள்ளேயே வாழ்க்கை.
எல்லா ஊடகங்களின் செய்திகளையும் உள்வாங்கக்கூடியதாக இருந்தும் எமது மன உணர்வுகளை, பிரச்சினைகளை சர்வதேசம் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் எந்த ஊடகங்களும் எம்மிடையே இல்லை. இங்குள்ள ஊடகங்களை சர்வதேசம் நம்புவதாகவும் இல்லை. சர்வதேசமும் தாம் நம்பக்கூடிய ஊடகங்களையோ அமைப்புக்களையோ இங்கு அனுப்புவதற்கு போதிய முயற்சி எடுக்கவில்லை.
மாறாக சிங்களம் சொல்பவற்றையும் காட்டுபவற்றையும் மட்டும் கருத்தில் கொண்டு பக்கச்சார்பாகவும் ஒருதலைப்பட்சமாகவும் செய்திகளையும் அறிக்கைகளையும் விடுகின்றது. களத்தில் அடிபடும் மக்களாகிய நாம் இந்த அறிக்கைகளையும் செய்திகளையும் கேட்டு வெந்த புண்ணில் வேல் பாய்வதாக துடிக்கின்றோம்.
எமது பிரதேசத்தின் உண்மை நிலைகள் வெளிவந்து விடும் என்பதற்காக இங்கு செயற்பட்ட வெளிநாட்டு நிறுவனங்களையும் அமைப்புக்களையும் சிங்களம் வெளியேற்றும் போது எவரும் கண்டுகொள்ளாதது போல இருந்துவிட்டு இன்று இங்கு வெளியாகும் செய்தியின் உண்மைத் தன்மையை சந்தேகிக்கிறார்கள். இது எந்தளவு பெரிய நாடகம்.
பரந்து விரிந்த வன்னிப்பெரு நிலப்பரப்பில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் வாழ்ந்தோம். இன்றும் அவர்களின் கட்டுப்பாட்டில் இராணுவ நடவடிக்கை காரணமாக வாழ்விடங்கள், சொத்துக்கள், சொந்தங்களையெல்லாம் சிதறவிட்டு, திடீரென இராணுவம் ஏவும் எறிகணைக்கும் கிபிர் தாக்குதலுக்கும் சிக்குப்பட்டு உயிருக்கு உத்தரவாதமற்ற வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றோம்.
ஏற்படுத்தப்பட்டுள்ள உணவுத் தட்டுபாடும் மருந்துத் தட்டுப்பாடும் அடுத்துவரும் நாட்களில் எப்படியிருக்கப் போகின்றது என்பதை நினைக்கும் போது பயங்கரமாக உள்ளது. எமது இக்கட்டான அவலநிலை தெரிந்திருந்தும் சிங்களத்தின் கபட அரசியலில் சர்வதேசம் அடிபட்டுவிட்டதா? அல்லது ஏதோ ஒரு காரணத்திற்காக சர்வதேசமும் எமது அழிவை விரும்புகின்றதா? என்று புரியவில்லை.
எம்மை விடுதலைப் புலிகளிடமிருந்து பிரித்து எடுப்பதாக அரசும் சர்வதேசத்தின் சில நாடுகளும் பல தந்திரோபாயங்களைக் கையாள்கின்றது. அரசின் கட்டுப்பாட்டில் வாழ விரும்பியிருந்தால் சமாதான காலத்திலேயே நாம் வெளியேறியிருக்க முடியும். போரின் மூலம் எமது தொண்டைக்குழியை நெரித்தவாறு நீ இராணுவத்திடம் போ அல்லது சாகடிக்கப்படுவாய் என்று எமது உணர்வுகளுக்கு சிறையிட சிங்களமும் சர்வதேசமும் கங்கணம் கட்டி நிற்கின்றன.
சிங்களம் காலம் காலமாக தமிழினத்தை எவ்வாறெல்லாம் ஏமாற்றி அடக்கி வருகின்றது என்பதை நடுநிலையாக இருந்து மனச்சுத்தியுடன் பகுத்தாய்வு செய்தால் தெரியும். அதன் மூலம் தமிழினம் சிங்களத்துடன் இணைந்து வாழ முடியாது என்பதை உணர்ந்து கொள்ளமுடியும். இன்றும் எமது உரிமையை மறுத்து அனைத்து சிங்களவர்களும் ஆதரவாக உள்ளார்கள்.
அடிப்படையிலேயே சுயநலமும் பச்சோந்தி மனநிலையும் பதவி வெறியும் உள்ள எமது இனத்திற்காகப் போராட பலர் புறப்பட்டனர். பல நெருக்கடிக்கடிகளையும் துரோகங்களையும் எதிர்கொண்டு இன்றுவரை கொள்கை மாறாது இருப்பவர் வே.பிரபாகரன் மட்டுமே.
ஏனையோர் தமது சுயநலன்களுக்காக தமிழ் மக்களின் உரிமைகளை விற்கவும் துணிந்து விட்டனர். இலங்கையில் இனப்பிரச்சினை ஒன்று உள்ளது என்பதை உலகு திரும்பிப்பார்ப்பதற்கு வே.பிரபாகரனே காரணம். எமது இனத்தின் பச்சோந்தி தலைவர்களைக் கொண்டு போராட்டத்தை நசுக்குவதற்கு பல தந்திரோபாயங்களை சிங்களம் கையாள்கின்றது. இப்பச்சோந்தித் தலைவர்களின் இருப்பு பிரபாகரனின் இருப்பிலேயே தங்கியுள்ளது என்பதை பிற்போக்கானவர்கள் இன்னும் உணரவில்லை.
1958-1983 வரை பல இனக்கலவரங்களை தூண்டி எமது இனத்தை சிங்களம் அழித்து வந்தது. 1983 இல் பிரபாகரன் வலுப்பெற்ற பின்னர் வெளிப்படையாக தொடர முடியாமல் இருக்கிறது.
1958-1983 வரை இடம்பெற்ற கலவரத்தை எந்த நாடுகளும் கண்டித்து இங்குள்ள பிரச்சினைகளைத் தீர்க்க முன்வரவில்லை. இன்றும் அதே நிலைக்கு எம்மை கொண்டுவர சர்வதேசம் முயற்சிக்கிறது. எந்தவித உரிமைகளையும் தர மறுக்கும் சிங்கள பேரினவாதத்தின் தந்திரோபாயத்தில் சர்வதேசமும் எடுபட்டு எல்ரீரீஈ ஆயுதங்களை கையளிக்கச் சொல்வதும் நாங்கள் வாழ விரும்பும் இடத்தை விட்டு சிங்களத்தின் சிறைக்கு எங்களை எடுக்க முயற்சிப்பதும் எமது இனத்தை 1983 இற்கு முற்பட்ட காலப் பகுதிக்கு கொண்டு சென்று எம்மை அழிக்க சர்வதேசம் முன்வந்துள்ளது.
நான் எல்ரீரீஈ செய்வதெல்லாம் சரி என அவர்களுக்காக வாதாட வரவில்லை. அவர்களுடைய இலட்சியம் சரியானது. அதனை நோக்கிச் செல்லும்போது சில பிழைகளை விட்டிருக்கிறார்கள்தான். பிழைகளை நியாயப்படுத்த மாட்டேன். எமக்கான ஒரு ஜனநாயக ஆட்சி வரும்போது ஒரு சிறந்த நீதியான ஆட்சியை அவர்கள் அமைப்பார்கள் என்பதில் எமக்கு ஐயமில்லை.
இந்தத் தலைமுறையுடன் எமக்கு உரிமைகள் தரப்படாமல் ஒருவேளை போராட்டம் பின்னடைவைச் சந்தித்தாலும் அடுத்த அடுத்த தலைமுறையினர் உரிமையைப் பெறுவதற்கான போராட்டத்தைத் தொடர்வார்கள்.
நியாயமான ஒரு விடுதலைப் போராட்டத்தை அழிக்க சர்வதேசத்தின் பல பக்க உதவிகளுடன் சிங்கள அரசு மும்முரமாக செயற்படுகின்றது. இதில் பல உண்மைகள், உயிர்கள் புதைக்கப்படுகின்றன. சிங்களம் எமது நிலை தொடர்பாக படுபாதகமாக பொய்சொல்லி சர்வதேசத்தையும் செய்தி நிறுவனங்களையும் முட்டாளாக்குகின்றது. தளத்தில் உள்ள நாங்கள் சிங்களத்தின் உண்மைத் தன்மையை ஆராயாது சர்வதேசமும் செய்தி நிறுவனங்களும் எடுபடுவதை அவதானிக்கும் போது அவற்றின் நேர்மைத்தன்மையிலும் ஆற்றலிலும் சந்தேகத்தை தோற்றுவிக்கின்றது.
இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் செல்லும் எமது பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம்? அங்கு நடைபெறும் கொலைகள், பாலியல் வல்லுறவுகள், அடிமைத்தனங்கள் எத்தனையோ வெளிவராமல் உள்ளது என்பதை உலகு அறியுமா? பாலியல் சித்திரவதைக்கு உள்ளான எல்லோரும் அதனை வெளியிட்டு தனது எதிர்கால அவமானத்தை தாங்கிக்கொள்ள விரும்பமாட்டார்கள். அதேபோலதான் பல செய்திகள் அமுக்கப்படுகின்றன.
பிபிசி தமிழ் ஒலிபரப்புக்கூட எமது பிரச்சினை தொடர்பாக ஆய்வாளராக பேட்டிக்குத் தெரிவு செய்யப்படுபவர்களில் பெரும்பாலானவர்கள் கொள்கைப் பற்றற்ற பச்சோந்தி தமிழர்களாகவே இருப்பார்கள். அவர்கள் ஒவ்வொருவரின் பின்னணியும் பல கதைகளைச் சொல்லும்.
தயவுசெய்து எமது உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். எமது பிரச்சினையை ஆராய்ந்து பாருங்கள். ஒருபக்க செய்திகளை மட்டும் கொண்டு பக்கசார்பாக முடிவெடுக்காதீர்கள். எங்களிடமும் நேரில் வாருங்கள். எங்களிடம் கருத்துக்கள் கேளுங்கள்.
நன்றி.
நா.தயாபரன்.
Comments