பள்ளியில் படிக்கும் போது சமூக அறிவியல் பாடத்தின் மீது தனிப்பட்ட ஒரு ஈடுபாடு இருந்தது, இந்திய உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று படிக்கும் போது ஒரு இனம்புரியாத பூரிப்பும் பெருமித உணர்வும் இருந்து வந்தது. அவை அனைத்தும் திணிக்கப்பட்ட ஒரு போலியான நம்பிக்கை என்பதையே காலம் உணர்த்தி வருகிறது.
ஜனநாயக நாட்டின் அடிப்படையான சுதந்திரம் இங்கு ஆளும் அரசுகளை கேள்வி கேட்காத வரைக்கும் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருக்கும் உணர்வென்பதை ஏற்றுக்கொள்ள சிரமமாக இருந்தாலும் உண்மை அதுவென்பதே வருத்தத்திற்கு செய்தியாகும். கருத்துச் சுதந்திரம் என்பது பரவலாக்கப்படவில்லை என்பதும் அவை கேள்வி கேட்காத மந்தைகளுக்கு மட்டுமே உரியது என்பதுமே எதார்த்தமான சூழலாக இருக்கிறது.
இந்திய தேசியக் கட்டமைப்பில் தமிழர்களின் நலன் குறித்தான பார்வை எப்படி இருக்கிறது? சந்தேகத்திற்குரிய, கூடுதலான விசாரணைக்குட்படுத்தப்பட்ட ஒரு இனமாகவே தொடர்ந்து கண்காணிப்பிலே வைக்கப்பட்டிருக்கிறது. தமிழனது சுதந்திரமான சுயமான சிந்தனைகளை பிரிவினைவாதம் என்ற ஒற்றைச் சொல்லாடலுக்குள் முடக்கும் போக்கே தொடர்ந்து நடந்து வருகிறது. தேசிய ஒருமைப்பாடை புதைத்துவிட்டு திமிருடன் நடக்கும் பல மாநிலங்களை விட மிக நேர்மையான ஈடுபாட்டோடே தமிழகம் இருந்து வந்த போதுலும் இந்த கண்காணிப்பு வளையத்தை விட்டு தமிழகமும் தமிழரும் விடுபட்டதாக தெரியவில்லை.இந்திய அரசியல் அமைப்பின் அனைத்து உறுப்புகளும் தமிழர் தொடர்பான விடயங்களில் மறைமுகமாகமான சில நேரங்களில் வெளிப்படையாகவே எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது.
இந்திய தேர்தல் ஆணையம் என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி மக்கள் தங்களுக்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க உதவும் ஒரு சுயேச்சையான அமைப்பு என்று நமக்குச் சொல்லப்பட்டிருந்தாலும் எதார்த்ததில் எவ்வாறு இருக்கிறது? நமக்குச் சொல்லப்பட்ட யாவும் போலியானதே என்பதை உறுதி செய்யும் வகையிலே இந்திய தேர்தல் ஆணையத்தின் அண்மைய சுற்றறிக்கை அமைந்து இருக்கிறது. இந்திய அரசின் பார்வையில் இலங்கைத் தமிழர் என்று அழைக்கப்படும் ஈழத்தமிழர்களுக்கு நேரும் பேரவலத்தை மக்கள் மன்றத்தின் முன் தெரிவிக்க கூடாது என்று ஆணையிட்டுருக்கிறது. இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை குறித்தான பதாகைகளோ, விளம்பரங்களையோ அச்சகங்கள் அச்சடிக்ககூடாது என்றும் அவ்வாறு செய்பவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறது. இது அப்பட்டமான அதிகார வரம்பு மீறலாகும். முழுக்க முழுக்க ஆளும் காங்கிரசு கட்சிக்கு சாதகமான ஒரு தலைப்பட்சமான அதிகார வரம்பு மீறலை அடக்குமுறையை தமிழர்களின் மீது துணிச்சலாக ஏவியிருக்கிறது.
தேர்தலை நடத்தும் சுயமான அமைப்பு எனும் நிலையிலிருந்து விலகி சோனியாவின் எண்ணத்தை நிறைவேற்றுவதற்காக தின்ற எச்சில் துண்டிற்காக நன்றி செய்யத் துடிக்கும் ஒரு எடுபிடியாக மாறி இருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் அவர்கள் சர்வாதிகாரிகளாக மாறிவிட முடியாது, மாறவும் அனுமதிக்க முடியாது. இது வன்மையாக கண்டிக்கத் தக்கது. அரசு இயந்திரங்களின் வாயிலாக அடக்குமுறைகள் தொடர்ந்து வரும் போதும் தேர்தல் சமயத்தில் தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் என்பது வானளாவியது. அவர்களை எந்த வித நீதிமன்ற விசாரணைக்கு தேர்தல் முடியும் வரை உட்படுத்த முடியாது என்ற சிறப்புச் சலுகையை ஆளும் காங்கிரசு கட்சி மிகத் தெளிவாக உபயோகிக்கிறது. மக்கள் எதைச் சிந்திக்க வேண்டும் எதைச் சிந்திக்க கூடாது என்பதை தீர்மானிக்க தேர்தல் ஆணையத்திற்கு எந்த உரிமையும் கிடையாது. மீறி அதை திணிப்பார்களேயானால் அவர்களது அதிகார ஏவல்களை, அரசியல் அமைப்பை மலம் துடைக்கும் காகிதமாக மட்டுமே பயன்படுத்த முடியும். தேர்தல் ஆணையத்தின் இந்த அடக்குமுறையை முற்றிலுமாக நிராகரித்து அவர்களின் அதிகார முகத்தில் கரியைப் பூசுவதே சரியானதாக இருக்கும்.
ஆட்சியதிகாரத்துக்கு வரும் வரைக்கும் சுத்தத் தமிழராகவும் ஆட்சிக்க வந்தவுடன் முழுமையான இந்தியனாக கூடு மாறும் வித்தையைத் தெளிவுற கற்றுணர்ந்தவர் தமிழக காங்கிரசுக் கட்சியின் புதிய செயல்தலைவரும் சோனியா காந்தியின் தமிழக காங்கிரசுப் பொறூப்பாளருமான முதல்வர் கருணாநிதி அவர்கள். திராவிட இயங்கங்களுக்குப் பங்களித்தது போதுமென்று நினைத்து விட்டு தேசிய இயக்கமான காங்கிரசுக்கு தன் சேவையைத் தொடங்கியிருக்கிறார். கலைஞர் மீது இப்படியொரு குற்றச்சாட்டை முன்வைப்பது பலருக்கு அதிர்ச்சியாக இருக்கக்கூடும் அவரது சறுக்கல்களை சகித்துக் கொண்டு அவரை ஆதரித்தவர்களையும் அவரின் செயல்பாடுகளை இந்த எல்லையை நோக்கி நகர்த்தி இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
கலைஞர் ஆட்சியிலிருப்பதால் நாம் குறைந்தப்பட்சம் போராடவாவது முடிகிறது மேலும் கலைஞர் எதிர்ப்பு என்பது நமது எதிரியான ஜெயலலிதாவிற்கு ஆதரவாகவே முடியும் என்பது வறட்டுத்தனமான சப்பைக் கட்டாகவே முடியும். ஆட்சியதிகாரத்துக்கு வந்தப்பின் அடக்குமுறையில் ஜெயலலிதாவிற்கும் கலைஞருக்கும் எந்த வேறுபாடும் இல்லை, ஜெயலலிதா தன் வன்மத்தை நேரடியாக வெளிப்படுத்துவார், கலைஞர் வார்த்தை விளையாட்டு விளையாடி அனைத்திலும் தன்னை முன்னிலைப்படுத்தி வஞ்சத்தை தீர்த்துக் கொள்வார். இதுதான் வித்தியாசம் என்ன அடக்குமுறை கொஞ்சம் ஜனநாயக முறைப்படி நடக்கும்.
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் பெரும் பணியில் இப்போது தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார். அவரது சொக்கத்தங்கமான ‘’சோனியாகாந்தி’’ அம்மையாரை நோக்கி யாரேனும் கேள்வி கேட்டால் உள்ளம் பதறித்துடித்து காவல்துறையை ஏவி அவர்களை சிறையிலடைத்து தன் சேவக விசுவாசத்தை வெளிப்படுத்தி வருகிறார். ராஜீவ் காந்தியோ, சோனியா காந்தியோ விமர்சனத்திற்க்கு அப்பாற்பட்ட புனிதர்களோ கடவுளோ கிடையாது. ராஜிவ் காந்தியின் மரணத்திற்காக ஒப்பாரி வைக்கும் காங்கிரசுகாரர்கள் எவரும் அவரோடு சேர்ந்து ஏன் மரணிக்கவில்லை? சொல்லி வைத்தாற்போல் அத்தனை பேரும் அங்கில்லாது போனது எப்படி? சுய சிந்தனை உள்ள எவனுக்கும் இந்த கேள்வி மனதில் உதிக்கும். அந்த கேள்விகள் எல்லாம் எப்படி தேச விரோதமானது? ராஜீவ் மரணம் என்பது சந்தேகத்திற்குரியது அதுகுறித்தான அனைத்து சந்தேகங்களும் பதில் சொல்லப்பட வேண்டும் இல்லை என்றால் கேள்விகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.
சீமானும், கொளத்தூர் மணியும், இன்று தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கீழ் சிறையிலடைக்கப்பட்டி இருக்கிறார்கள். அவர்கள் செய்த தேச விரோத செயல்கள் என்ன? சிந்திப்பதும் சிந்திப்பதை பேசுவதும் எப்படி தேச விரோதமாகும். தேசப் பாதுகாப்புக்கு ஊறுவிளைவிப்பதில் ஆளும் வர்க்கங்களின் தவறாக கொள்கை முடிவுகள்தான் முக்கியப்பங்கு வகிக்கிறது. இன்று இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கு இந்திய அரசாங்கம் உதவி செய்து வருவதையும், ராஜிவின் போபர்ஸ் ஆயுத ஊழலை அம்பலப்படுத்தி பேசிவந்ததால்தானே தேச விரோதமாக பார்க்கப்படுகிறது, என் இன மக்கள் அங்கு கொத்து கொத்தாக கொன்றழிக்கப்படும் போது அதற்கு இந்திய அரசும் மறைமுகமாக உதவிக்கொண்டிருப்பதை எப்படி கேள்வி கேட்காதிருக்க முடியும், குஷ்புக்காக கருத்துச் சுதந்திரத்தை காக்க கருத்துக் காவலர்களாக உதித்த கனிமொழி அம்மையார் இப்போது வேற்றுக் கிரகத்தில் இடம்பெயர்ந்து வசிக்கிறாரோ என்னவோ? தமிழர்கள் தங்கள் எதிர்ப்பைத் உக்கிரமாகத் தெரிவித்துக் கொண்டிருக்கும் போதே தமிழகம் வழியாகவே நூற்றூக்கணக்கான பீரங்கிகள் அனுப்பப்பட்டதே அது எதை உணர்த்துகிறது நீங்கள் எமது அடிமைகள் என்பதைத்தானே?
தன்னைத் தமிழினத்தலைவராக பறைசாற்றிக் கொள்ளும் முதல்வர் தமிழின அழிப்பிற்கு எதிராக செயல்பட்ட வேகத்தையும், தம் மக்களுக்காக செயல்பட்ட வேகத்தையும் நாம் கவனித்தே ஆக வேண்டும். குறைந்த பட்சம் தனது எதிர்ப்பை, தமிழக மக்களின் உணர்வை, கொந்தளிப்பை, எழுச்சியை அவர்களின் முதல்வராகவாவது அழுத்தமாக பதிவு செய்தாரா? இல்லையே .. முடிந்த வரை போராட்ட உணர்வை நீர்க்கச்செய்யும் பணியை கோட்டையிலிருந்த போதும் மருத்துவமனையில் இருந்த போதும் தொடர்ந்தாரே?? பிரணாப் முகர்ஜிக்கு தூயவர் என்று பரிவட்டம் கட்டி பூரித்தாரே? இன்னும் எம்.கே.நாரயணன், சிவ சங்கர மேனன், மகிந்த ராஜபக்சேவுக்கும் செயல்வீரர், சமாதானப் புறா, புனிதர் என்ற பட்டங்களும் உலகத்தமிழினத் தலைவர் சூடி உவகை அடைவார், தமிழுணர்வார்கள் எந்தக் கேள்வியும் கேட்காது அவருக்கு உறுதுணையாக இருப்பதுதான் நம் எதிரியான ஜெயலலிதாவை ஆட்சியதிகாரத்துக்கு வரவிடாது தடுக்கும் பெரும் பணி என்று சொல்ல இருக்கவே இருக்கிறார் வீரமணியார்.
தமிழர்களுக்கெதிரான இனப்படுகொலையை கண்டிப்பது உலகமெங்கும் மாந்த நேய உணர்வாக இருக்கும் போது இந்திய இறையாண்மைக்கும் தேசப்பாதுகாப்புக்கும் எதிரானதாக நமக்கே தெரியாமல் முதல்வருக்கும் காங்கிரசுக்காரர்களுக்கும் மட்டும் தெரிந்தவாறு அரசியலமைப்பு இந்திய இறையாண்மை பற்றியான வரையறை எப்போதிருந்து மாறியது? ஒருவேளை மாறி இருக்கலாம். மன்மோகன் என்னும் பொம்மையை வைத்து அரச பொம்மலாட்டத்தை நடத்திக் கொண்டிருக்கும் வீராங்கனையின் சாதனைகளுல் ஒன்றாகவும் அது இருக்கக்கூடும்.
பேச்சு என்னும் பேராயுதத்தைப் பயன்படுத்தி சமூக மாற்றத்தையும் புரட்சியையும் ஏற்படுத்திய பெரியாரும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிக் காட்டிய அண்ணாவின் வழிவந்தவர் ஆட்சியில் பேச்சுரிமைக்கு கல்லறை கட்டத்துடிப்பது ஏன்? தொப்புள் கொடி உறவைக் காக்க முடியாத போது எதற்கு பதவி? எதையும் செய்ய முடியாமல் இருக்கும் போது ஜெயலலிதா ஆண்டால் என்ன கலைஞர் ஆண்டால் என்ன? பழைய வரலாறுகறுகளும் சாதனைகளும் எதுவும் இன்றைய துரோகத்திற்கு அனுமதிச் சீட்டாக பயன்படுத்திக் கொள்ள எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது. கலைஞரின் எல்லாச் சாதனைகளுக்கும் முத்தாய்ப்பாய் இன்றைய துரோகம் அமைந்து விட்டது என்பதுதான் வரலாற்றுச் சோகம். பெரியார் இன்றிருந்தால் துரோக மற்றும் துரோக முன்னேற்ற கழகங்களுக்கு எதிராகத்தான் இயக்கம் கண்டிருப்பார்.
சோனியாவின் முந்தனை நுனியில், தேசிய பாதுகாப்பும் இறையாண்மையோடு தனது மஞ்சள் துண்டோடு தொங்கிக் கொண்டிருக்கிறார் உலகத் தமிழினத் தலைவர் காங்கிரசை தனது தோள்களில் சுமந்தபடி…
Comments