10 நாட்கள் கஞ்சி குடித்தே உயிர் வாழ்ந்தேன் - பதின்மூன்று வயதுச் சிறுவனின் பரிதாப நிலை

10 நாட்களாக எனது குடும்பம் கஞ்சி குடித்தே உயிர் பிழைத்துள்ளது என 13 அகவையுடைய வைத்திலிங்கம் ரவிவர்மன் என்ற சிறுவன் தெரிவித்துள்ளார். அவலவாழ்வு குறித்த அச்சிறுவன் மேலும் தெரிவிக்கையில்:

1997ம் ஆண்டு தொடக்கம் மல்லாவி தேறாங்கண்டல் பிரதேசத்தில் வசித்து வந்தோம். அங்கிருக்கும் போதே எனது அம்மா மூளை மலேரியாக் காய்சலில் இறந்துவிட்டார். எனக்கு அம்மாவைத் தெரியாது. அதன்பின்னர் எங்களை அப்பாவே எங்களை வளர்த்தவர்.

அப்பா தேறாங்கண்டல் காட்டில் விறகு வெட்டும்போது தடி குத்தியதால் ஒரு கண் பார்வையை இழந்துள்ளார். எனது அண்ணா 2006ம் ஆண்டு குளத்தில் குளிக்கும் போது வலி வந்து இறந்துவிட்டார்.

தற்போது அப்பாவும் அக்காவும் தான் உள்ளார்கள். அக்கா திருமணம் செய்தபின் கணவர் இல்லை. ஒரு குழந்தை இருக்கு. நாங்கள் நிவாரணங்கள் எடுத்தனாங்கள். அதுவும் முடிந்துவிட்டது. தற்போது அப்பாவுக்கு அம்மை வருத்தம் வந்துள்ளதால் இடம்பெயர்ந்து வாழும் வீட்டிலேயே இருக்க வேண்டியநிலை.

நான் மூன்று நேரமும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினால் வழங்கப்படும் கஞ்சியையே குடிக்கின்றேன். அதனை அப்பாவுக்கும் அக்காவுக்கும் கொண்டு போய்க் கொடுப்பேன்.

தற்போது என்னால் கதைக்க முடியாது உள்ளது. அப்பாவுக்கு 55 வயது. அவரால் இனிமேல் வேலை செய்ய முடியாது. எங்கது கஸ்ர நிலையால் அப்பாவை புதுமுறிப்பு மகாதேவ ஆச்சிரமத்தில் சேர்த்துவிட்டேன்.

நான் ஆண்டு 8-வரை படித்திருக்கிறேன். கணக்குப் பார்க்கவும், எழுதவும் தெரிந்திருந்தால் மட்டும் போது என்ற அடிப்படையிலேயே படித்துள்ளேன். எப்படி என்குடும்பத்தைக் காப்பாற்றப் போகிறேன் எனத் தெரியாத நிலையில் இருக்கின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.

Comments