'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளான வலைஞர்மடம், அம்பலவன்பொக்கணை பகுதிகளில் சிறிலங்கா படையினர் இன்று வெள்ளிக்கிழமை காலை தொடக்கம் இரவு வரை ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களை அகோரமாக நடத்தினர்.
இதில் 102 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 156-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
மேற்படி பகுதிகளில் உள்ள மூன்று மருத்துவ சிகிச்சை நிலையங்களில் காயமடைந்த மக்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்படுகின்றது.
அத்துடன், திலீபன் மருத்துவ சேவைப்பிரிவினரும் காயமடைந்த மக்களுக்கு சிகிச்சை வழங்கினர்.
இதேவேளையில் முள்ளிவாய்க்கால் பகுதி இடம்பெயர்ந்த மக்கள் வாழ்விடங்கள் மீதும் சிறிலங்கா படையினர் இன்று செறிவான எறிகணைத் தாக்குதல்களை நடத்தினர்.
அதேவேளையில் மாத்தளன் பகுதி மீதும் சிறிலங்கா படையினர் செறிவான துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களையும் நடத்தினர்.
இத்தாக்குதல்களில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
Comments