கடந்த 23ம் திகதி மதியம் 12 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இவ் ஆர்ப்பாட்டப் போராட்டம் ஐக்கிய அமெரிக்கத் தூதரகம் அமைந்துள்ள வீதியினை மறித்துக் காலைவரையின்றித் தொடர்கின்றது.
தொடர்ச்சியாக தூதரகம் அமைந்துள்ள ரொறன்ரோவின் முக்கிய வீதியினை மறித்து மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டத்தில் நேற்றைய தினம் மீண்டும் காவற்றுறையினர் தாக்குதலினை மேற்கொண்டிருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் மக்களினை அவ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்துவதற்கு காவற்றுறையினரிற்கும் ஆர்ப்பார்ட்டக் காரர்களிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அனைத்துக் காவற்றுறைப் பிரிவினரையும் பயன்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களின் மீது காவற்றுறையினர் தடியடிப் பிரயோகம் மேற்கொண்டிருந்தனர்.
இதில் காவற்றுறையினரின் குதிரையால் தாக்கப்பட்டதில் 16 வயதுடைய சிறுமி ஒருவர் உட்பட இருவர் காயங்களிற்கு உட்பட்டு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படனர்.
இதைத் தொடர்ந்து மாலையில் காவற்றுறையினர் வலுக்கட்டாயமாக வீதியினைத் திறப்பதற்கு முற்பட்டவேளையில் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களிற்கும் காவற்றுறையினரிற்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. வீதியைத் திறக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வீதியின் தொடக்கத்திற்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வந்து உட்காந்திருந்தனர்.
இச் சம்பவத்தின் போது 15 தமிழ் இளையோர்கள் காவற்றுறையினரால் கைது செய்யப்பட்டனர்.
இச்சம்பவத்தினைக் கேள்வியுற்ற கனடியத் தமிழ் மக்கள் பெருந்தொகையில் ஒன்றுசேர்ந்தனர்.
தொடர்ச்சியாக, இரவு மீண்டும் வீதியினைத் திறப்பதற்கு காவற்றுறையினர் முயற்சி எடுத்தவேளையில் பெருந்திரளில் மக்கள் கூடினர். இதைத் தொடர்ந்து வீதியினைத் திறக்கும் தங்கள் முயற்சியினைக் காவற்றுறையினர் கைவிட்டனர்.
சிறிலங்கா அரசினால் தங்கள் உறவுகள் கொத்துக் கொத்தாகப் பறிக்கப்படுவது நிறுத்தப்படவேண்டும்.
உடனடிப் போர் நிறுத்தம் ஒன்றினை மேற்கொள்வதற்கு அனைத்துலக சமூகம் சிறிலங்கா அரசிற்கு தங்கள் முழு அளவிலான அழுத்தத்தினைப் பிரயோகிக்க வேண்டும்.
இக் கோரிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படும் வரை காலவரையின்றி இப் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனக் கனடியத் தமிழ் மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
Comments