முள்ளிவாய்க்காலில் இடம்பெயர்ந்த மக்கள் குடியிருப்புக்கள் மீது குண்டுத் தாக்குதல்: 174 தமிழர்கள் இன்று படுகொலை
முள்ளிவாய்க்காலில் இடம்பெயர்ந்த மக்கள் வாழ்ந்துவந்த குடியிருப்புக்கள் மீது இன்று சனிக்கிழமை பிற்பகல் 2:15 நிமிடமளவில் சிறிலங்கா வான்படையின் மிக், கிபீர், எஃப்-7 ரக வானூர்திகள் இணைந்து குண்டுத் தாக்குதலை நடத்தின.
20 நிமிடம் வரை நடத்தப்பட்ட இக்குண்டுத் தாக்குதலின் போது 16 குண்டுகளை சிறிலங்கா வான்படை வீசியுள்ளது.
இதில் மக்களின் 18 கூடாரங்கள் எரிந்து நாசமாகியுள்ளதுடன் ஆழிப்பேரலை மீளமைப்பின் போது கட்டிக்கொடுக்கப்பட்ட 6 வீடுகளும் முற்றாக அழிந்துள்ளன.
இத்தாக்குதலில் 126 தமிழர்கள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளதுடன் 134-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனா்.
கொல்லப்பட்டவர்களில் அதிகமானோர் காப்பகழிகள் பல மூடப்பட்டதனால் உயிரிழந்திருப்பதாக புதினத்தின் வன்னிச் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இதே பகுதியில் மீண்டும் சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளன.
பிற்பகல் 4:00 மணியளவில் 12 குண்டுகளையும் 4:50 நிமிடத்துக்கு 8 குண்டுகளையும் சிறிலங்கா வான்படை வீசியுள்ளது.
இதில் 48 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 78 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதேவேளையில் அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் பகுதி மக்கள் வாழ்விடங்கள் மீது சிறிலங்கா படையினர் இன்று அதிகாலை தொடக்கம் எறிகணை, துப்பாக்கி மற்றும் குறிசூட்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இதில் பல தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் பெருமளவிலானோர் படுகாயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 'ஈழநாதம்' மக்கள் நாளேட்டின் பணியாளரான 28 வயதுடைய சுகந்தன் என்பவரும் அடங்குவார்.
அதேவேளையில் கரையோரப் பகுதிகளை நோக்கி சிறிலங்கா படையினர் இன்று மாலை 6:00 மணியளவில் செறிவான பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இதில் இரண்டு கரைவலைப் படகுகள், தொழில் உபகரணங்கள் ஆகியன அழிந்துள்ளன.
இத்தாக்குதலின் போது இரண்டு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் உட்பட பலர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
Comments