இன்றும் எறிகணைத் தாக்குதல்: 197 தமிழர்கள் படுகொலை; காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல முடியாத நிலை
வலைஞர்மடத்தில் தங்கியிருக்கும் மக்கள் வாழ்விடங்கள் மீது இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் அகோர எறிகணைத் தாக்குதல்களை் சிறிலங்கா படையினரால் நடத்தப்பட்டுள்ளது.
அதிகளவில் கொத்துக்குண்டுகள் மக்கள் மத்தியில் வீழ்ந்து வெடித்தன. வலைஞர்மடம் மாதா கோவில் பகுதிகளிலேயே எறிகணைகள் செறிவாக வீழ்ந்து வெடித்துள்ளன.
காயமடைந்தவர்களில் 228 போரை மாத்திரமே வலைஞர்மடத்தில் இருந்து உடனடியாக முள்ளிவாய்க்கால் மருத்துவமனைக்கு கொண்டுவர முடிந்தது.
சிறிலங்கா படையினரின் அகோரமான தாக்குதல்களைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால், வட்டுவாகல் பகுதிகளை நோக்கி வலைஞர்மடம் பகுதிகளில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்து கொண்டிருக்கின்றனர்.
உண்ண உணவின்றி - குடிக்க குடிநீர் இன்றி - உரிய ஆடைகள் இன்றி - அவதிப்படும் மக்கள் கடும் வெய்யிலுக்கு மத்தியிலும் மீண்டும் மீண்டும் இடம்பெர்ந்து வருவதாக புதினத்தின் வன்னிச் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இதேவேளையில் சிறிலங்கா கடற்படையினர் இன்று கடலில் இருந்து கரையை நோக்கி பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
மாலை 6:00 மணி தொடக்கம் முள்ளிவாய்க்கால் மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா படையினர் செறிவான பீரங்கித் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இத்தாக்குதல்களில் 12 பேர் காயமடைந்துள்ளனர். மக்களின் நான்கு வீடுகள் அழிந்தும் சேதமாகியும் உள்ளன.
இன்று காலை 9:10 நிமிடத்துக்கும் பின்னர் 10:20 நிமிடத்திற்கும் சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் வட்டுவாகல் பகுதியில் மக்கள் வாழ்விடம் மீது குண்டுத் தாக்குதல்களை நடத்தின.
இதில் மூன்று தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் நான்கு பேர் காயமடைந்துள்ளனர் என புதினம் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
Comments