நேற்று திங்கட்கிழமை காலை 10:00 மணிக்கு பேராசிரியர் சரஸ்வதி தலைமையில் 100 பெண்கள் முத்துக்குமாரின் உடலம் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த கொளத்தூரில் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தினை தொடங்கியிருக்கின்றனர்.
இதில் மாணவிகள், வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், உழைக்கும் பெண்கள் உள்ளிட்ட என பல தரப்பினரும் கலந்து கொண்டனர்.
நேற்று போராட்டத்தை தொடங்கிய போது காவல்துறை அவர்களின் போராட்டத்தை தொடர விடாமல் இடையூறு செய்தது.
பொது இடம் என்பதால் அங்கு அமர அனுமதியில்லை என காவல்துறையினர் அறிவித்தனர். பின்னர் பலத்த போராட்டத்திற்குப் பின்னர் மாலை 6:00 மணி வரை அங்கு அமர காவல்துறையினர் அனுமதி அளித்தனர்.
மாலை 6:00 மணிக்குப் பிறகு ஒரு தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு கட்டடத்தில் தற்காலிகமாக இடம்பெயர்ந்த போராட்டக் குழுவினர், அங்கு தமது உண்ணாநிலைப் போராட்டத்தை இன்றும் இரண்டாவது நாளாகத் தொடர்கின்றனர்.
எந்தக்குறிப்பிட்ட அரசியல் கட்சி அல்லது அமைப்பின் சார்பின்றி பெண்கள் மட்டுமே முன்னெடுத்துள்ள இப்போராட்டம், போரினால் அதிகம் பாதிப்புக்குள்ளாவது பெண்கள் என்ற அடிப்படையில்,
சோனியாவே! இலங்கையில் நடைபெறும் இன அழிப்புப் போரை உடனடியாக நிறுத்து!
என்ற கோரிக்கையை முன்வைத்து இப்போரட்டத்தை இரண்டாவது நாளாகவும் நடத்தி வருகின்றனர்.
இப்போராட்டத்தினை பல்வேறு சமூக இயக்கவாதிகளின் துணையுடன் பேராசிரியர் சரஸ்வதி ஒருங்கிணைத்திருக்கின்றார்.
Comments