2 வருடங்களில் 77 ஆயிரம் தமிழர்கள் படுகொலை?!: இரண்டரை லட்சம் பேரை கொல்ல அரசு திட்டம்?!: நா.உ. அச்சம்!!

வன்னிப்பெரு நிலப்பரப்பில் இருந்த 77 ஆயிரம் தமிழர்களை கடந்த இரண்டு வருடங்களில் தமது ஆக்கிரமிப்பு நடவடிக்கையின் போது சிறிலங்கா படையினர் கொன்று குவித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினம் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களில் வன்னிப் பகுதிகளை ஆக்கிரமித்தபோது சிறிலங்கா படையினர் ஒரு லட்சத்து 40 ஆயிரம் தமிழர்களை பிடித்தனர்.

அவர்களில் 63 ஆயிரம் தமிழர்கள் மாத்திரமே வவுனியால் மகிந்த அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது என சுட்டிக்காட்டியுள்ள அவர், மிகுதி 77 ஆயிரம் பேரும் எங்கே என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இடம்பெயர்ந்துள்ள தனது வன்னி மாவட்ட தொகுதி மக்களுடன் பல சிரமங்கள் இன்னல்களின் மத்தியில் அங்கு தங்கியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினம் வன்னிப்பெரு நிலப்பரப்பில் நீண்ட காலமாக வாழ்ந்த மக்களின் புள்ளி விபரம் ஒன்றை சுட்டிக்காட்டி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த அபாயகரமான தகவலை வெளியிட்டுள்ளார்.

வன்னிப்பெரு நிலப்பரப்பில் 4 லட்சத்து 70 ஆயிரம் மக்கள் வாழ்ந்து வந்திருந்தனர். சிறிலங்கா படையினரின் நில ஆக்கிரமிப்பை அடுத்து வன்னியில் 3 லட்சத்து 30 ஆயிரம் மக்கள் இடம்பெயர்ந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலேயே வாழ்ந்து வருகின்றனர் என்று தற்போதைய புள்ளி விபரம் ஒன்றைக் காண்பித்த அவர், ஒரு லட்சத்து 40 ஆயிரம் மக்கள் வன்னியில் தற்போது வன்னியில் இல்லை என்றும் கூறியுள்ளார்.

மன்னார் தொடக்கம் முல்லைத்தீவு வரை மகிந்த அரசாங்கம் நடத்திய நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளின் போது, கடந்த இரண்டு வருடங்களில் சிறிலங்கா படையினரால் அந்த ஒரு லட்சத்து 40 ஆயிரம் மக்கள் பிடிக்கப்பட்டுள்ளனர்.

அவ்வாறு பிடிபட்டவர்களில் 63 ஆயிரம் பொதுமக்கள் மாத்திரமே தமது நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என சிறிலங்கா அரசு தெரிவிக்கின்றது.

அப்படியானால், மிகுதி 77 ஆயிரம் பொதுமக்களுக்கு என்ன நடந்தது? அவர்கள் எங்கே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்? அல்லது கொலை செய்யப்பட்டுள்ளனரா? என்ற அபாயகரமான கேள்வியை நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினம் தனது அறிக்கையில் எழுப்பியுள்ளார்.

ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட மிகுதி 77 ஆயிரம் பொதுமக்களும் சிறிலங்கா படையினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்ற சந்தேகத்தையும் அச்சத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

சிறிலங்கா படையினர் வன்னிப்பெரு நிலப்பரப்பில் ஆக்கிரமித்த பல இடங்களில் ஏராளமான மனிதப் புதைகுழிகள் இருப்பதாக படையினரிடம் இருந்து மீண்டும் விடுதலைப் புலிகளின் பகுதிகளுக்கு தப்பி வந்தவர்கள் தன்னிடம் கூறியதை மேற்கோள் காட்டியே மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்ற தனது சந்தேகத்தையும் அச்சத்தையும் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினம் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள 3 லட்சத்து 30 ஆயிரம் மக்களை தவிர எஞ்சிய ஆயிரம் தமிழர்களுக்கு என்ன நடந்தது என்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் பதில் கூற வேண்டும் என மனித உரிமை சட்டத்தரணிகள் கேள்வி எழுப்ப வேண்டும் எனவும் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினம் பகிரங்கமாக வெளியிட்டுள்ளார்.

மேலும் -

தற்போது வன்னியில் 70 ஆயிரம் மக்கள் தான் உள்ளனர் என்று சிறிலங்கா அரசாங்கம் முற்று முழுதான பொய்யான தகவலை கூறுகின்றது. அப்படியானால், தற்போது இங்கே உள்ள 3 லட்சத்து 30 ஆயிரம் மக்களும் நாளை படையினரின் கையில் அகப்பட்டால், அவர்களில் இரண்டரை லட்சம் வரையானோரை படுகொலை செய்வது தான் அரசின் நோக்கம் போல உள்ளது எனவும் அவர் அச்சம் வெளியிட்டார்.

இதேவேளையில் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று முன்நாள் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கும் பிரேரணை மீதான விவாதத்தில் உரை நிகழ்த்திய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு பிரதித் தலைவரும் யாழ். மாவட்ட உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, வன்னியில் பல்லாயிரக்கணக்கான மக்களை காணவில்லை என்ற அச்சத்தை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளையில் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரட்னம் எந்தவிதமான தொடர்புகளும் இன்றி வன்னியில் உள்ளதாகவும் அவர் தொடர்பாக தகவல்களை அறிய முடியாமல் இருப்பதாகவும் இன்று வியாழக்கிழமை கொழும்பில் வெளியான ஆங்கில நாளேடு ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

Comments