பிரித்தானியாவில் 2 ஆவது நாளாக தொடரும் தமிழர்களின் போராட்டம்: காவல்துறையின் அடக்குமுறையையும் மீறி மக்கள் பேரெழுச்சி
பிரித்தானியாவின் வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தை குறுக்கே வழி மறித்து நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் தொடங்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் 7 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர்.
இரவு இரவாக நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தொடர்ந்தும் பிரித்தானியாவின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
[படம்: த சண்]
[படம்: ரொய்ட்டர்ஸ்]
பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு முன்பாக உள்ள வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தின் ஊடான போக்குவரத்தை தமிழர்கள் வழிமறித்தனால் பிரித்தானியா நாடாளுமன்ற செயற்பாடுகள் முற்றாக செயலிழந்ததுடன், போக்குவரத்தும் பெரும் நெரிசல் ஏற்பட்டிருக்கின்றது.
"சிறிலங்கா அரசே இனப்படுகொலையை நிறுத்து"
"தாய்மார்களையும் சிறுவர்களையும் குழந்தைகளையும் படுகொலை செய்வதனை நிறுத்து"
"எமக்கு தேவை தமிழீழமே"
"எமது தலைவர் பிரபாகரனே"
என உரத்த குரலில் உணர்வுபூர்வமாக முழக்கமிட்டு வரும் தமிழர்கள் தமது கைகளில் தமிழீழத் தேசியக் கொடியையும் தமிழீழ தேசியத் தலைவரின் படத்தையும் கைகளில் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு வருகின்றனர்.
பிரித்தானிய பிரதமர் கோடன் பிறவுண், இலங்கை பிரச்சினையில் உடனடியாக தலையிட வேண்டி வலியுறுத்தியும் அவருடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்யுமாறும் தமிழர்கள் வலியுறுத்தி வருவதாக பிரித்தானிய காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இலங்கை பிரச்சினையில் நடவடிக்கை எடுப்பதாக பிரித்தானியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழர்களிடம் உறுதிமொழி வழங்கிய போதும் அதனை நிராகரித்த தமிழர்கள், தமக்கு உடனடி நடவடிக்கை வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
[படம்: ரொய்ட்டர்ஸ்]
[படம்: ரொய்ட்டர்ஸ்]
இந்த தொடர் போராட்டத்தினால் பிரித்தானியாவின் முக்கிய தொடருந்து நிலையமான வெஸ்ட்மினிஸ்டர் நிலையத்தின் சேவைகள் நேற்று இரவுடன் முற்றாக நிறுத்தப்பட்டு ஒலிபெருக்கிகளில் மாற்று வழிப்பாதைகளை பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு காவல்துறையினர் அறிவித்தல் விடுத்து வருகின்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழர்களை அடக்குவதற்காக கலகம் அடக்கும் காவல்துறையினர் கொண்டு வரப்பட்ட போதும் ஆர்ப்பாட்டத்தில் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் என பலதரப்பட்டவர்களும் கலந்து கொண்டதால் கலகம் அடக்கும் காவல்துறையினரால் அவர்களை அடக்க முடியவில்லை என காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.
இந்த ஆர்ப்பாட்டம் குறித்து மேற்படி பகுதிக்குரிய காவல்துறை பேச்சாளர் தெரிவிக்கையில்,
தமிழர்களின் இந்த திடீர் போராட்டம் எமக்கு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. எனினும் அமைதியான வழியில் போராட்டம் நடைபெற்று வருகின்றது. எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்த ஆர்ப்பாட்டத்தினை தடுத்து நிறுத்து நோக்கம் எமக்கு இல்லை.
அத்துடன், இந்த போராட்டத்துக்கு மேலதிகமாக மக்கள் வந்தவண்ணம் உள்ளனர். அவர்களை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள நாம் எந்தவித இடையூறும் விளைவிக்கவில்லை என்றார்.
[படம்: ரொய்ட்டர்ஸ்]
எனினும், தமிழீழத் தேசியக் கொடியை கையில் ஏந்தியிருந்த நான்கு தமிழ் இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்து கொண்டு சென்றுள்ளனர்.
மேலும் பலரை கைது செய்ய முற்பட்ட போது அங்கிருந்த மக்களுக்கும் காவல்துறையினருக்கும் வாக்குவாதம் எற்பட்டு இறுதியில் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையை காவல்துறையினர் கைவிட்டுள்ளனர்.
இதனால், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் தமிழீழத் தேசியக் கொடியை குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் கைகளில் ஏந்தியிருக்குமாறு கொடுத்துள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாணவியான ஜெயந்தி பரஞ்சோதி கருத்து தெரிவிக்கையில்,
பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அல்லது பிரதமர் கோடன் பிறவுண் இங்கு வந்து தாயகத்தில் இடம்பெற்று வரும் தமிழினப் படுகொலைக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரைக்கும் இங்கிருந்து நாம் வெளியேறப் போவதும் இல்லை. எமக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறுதிமொழிகள் தேவையில்லை என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சைமன்ட் கூச் தெரிவிக்கையில்,
தமிழர்களின் 25 வருட கால போராட்டத்துக்கு நான் முழுமையான ஆதரவு வழங்குகின்றேன். தற்போது தான் சரியான தருணம். பிரித்தானிய அரசாங்கம் இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழர்கள் இங்கு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது. அதற்கு நானும் முழுமையான ஆதரவு வழங்குகின்றேன் என்றார்.
தேம்ஸ் நதிக்குள் குதித்து இருவர் தற்கொலை முயற்சி
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழர்கள் இருவர், நேற்று இரவு தேம்ஸ் நதிக்குள் குதித்து தற்கொலை செய்ய முயற்சித்ததால் அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
எனினும், காவல்துறையினர் படகுகளில் சென்று அவர்களை உடனடியாக மீட்டதுடன், மேலும் பலர் தேம்ஸ் நதிக்குள் குதிக்கலாம் என அச்சத்தில் படகுகளுடன் முழு விழிப்பு நிலையில் உள்ளனர்.
அத்துடன், கலகம் அடக்கும் காவல்துறையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, போக்குவரத்து நெரிசல்களை தவிர்க்கும் நோக்கில் பிரித்தானிய காவல்துறையினர் செயற்பட்டு வருகின்ற போதிலும் இன்று மாலை அப்பகுதியில் மேலதிகமான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
சந்திப்புக்கு இன்று மாலை ஏற்பாடு
இதேவேளையில் பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் முக்கிய சந்திப்பு ஒன்றை நடத்துவதற்கான அனுமதியை பிரித்தானிய தமிழர் பேரவை பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் பிரித்தானிய பிரதமர் கோடன் பிறவுண் அல்லது பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் மில்பான்ட் கலந்து கொள்வார் என்றும் பிரித்தானிய தமிழர் பேரவையின் சார்பில் 10 பேர் அடங்கிய குழு கலந்து கொள்ளும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சந்திப்பு நடைபெற்றாலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் பிரித்தானிய இளையோர் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் தொடர்ந்தும் நடைபெற்று வருவதால் இரவு தங்குவதற்கு வேண்டிய குளிர்தாங்க வல்ல ஆடைகள் மற்றும் உணவுப் பொருட்களுடன் மக்கள் ஆர்ப்பாட்ட இடத்துக்கு சென்று கொண்டிருக்கின்றனர்.
அதேவேளையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு தேவையான உணவுப்பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
பிரித்தானிய வரலாற்றில் இத்தகைய போராட்டம் தமிழர்களால் நடத்தப்படுவது இதுவே முதற்தடவை ஆகும்.
Comments