20ம் திகதிக்குமுன் அறிவிக்க வேண்டும்: சோனியாவுக்கு காலக்கெடு - பாரதிராஜா

இலங்கையுடனான உறவை வருகிற 20ம் தேதிக்குள் துண்டிப்பதாக சோனியா காந்தி அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் 23ம் தேதி முதல் தொடர் போராட்டங்களில் குதிப்போம் என இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார்.

பாரதிராஜா நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அவருடன் சத்யராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

அப்போது பாரதிராஜா கூறுகையில், இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தினோம். உலக நாடுகள் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது.

போரை நிறுத்த வேண்டும் என்று தமிழக அரசு கேட்டது, அனைத்து கட்சிகள் கேட்டன, பல்வேறு சங்கங்கள், அமைப்புகள், வக்கீல்கள், மாணவர்கள் என பலதரப்பினரும் போராடினார்கள். பலர் தீக்குளித்து மாண்டனர்.

ஆனால் மத்திய அரசு நினைத்திருந்தால் உடனடியாக போரை நிறுத்த முடியும். அதனால் திரையுலகின் பல சங்கங்கள் இணைந்து ஒரு கோரிக்கையை சோனியா காந்திக்கு வேண்டுகோளாக வைக்கிறோம். அவர் முயற்சித்தால் இலங்கையில் செத்து மடியும் உயிர்களை காப்பாற்ற முடியும்.

திரையுலக தமிழ் ஈழ ஆதரவு இயக்கம் மற்றும் தமிழ் இன உணர்வுள்ள பல்வேறு அமைப்புகள் எங்கள் இயக்கத்தில் அங்கம் வகிப்பார்கள்.

சோனியா காந்தி, தமிழ்நாட்டுக்கு வாருங்கள், வாருங்கள் என்று இருகரம் கூப்பி வரவேற்கிறோம். எங்கள் சொந்தங்கள் இன்னலில் இருந்து விடுபட, உயிர்கள் காப்பாற்றப்பட உத்தரவிட்டுவிட்டு வாருங்கள். இல்லை என்றால் உங்களை எதிர்த்து எதிர்ப்பு குரல் கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவோம்.

மத்திய அரசு 5 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தது தமிழ்நாட்டின் தயவில் தான். 40 தொகுதிகளையும் வென்று 100 சதவீத வெற்றியை அளித்தோம். எங்கள் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறோம்.

இலங்கை ராணுவத்தை போர் நிறுத்தம் செய்ய ஆணையிட வேண்டும். இலங்கையுடன் தூதரக உறவு உள்பட அனைத்து உறவுகளையும் துண்டித்துவிட்டு வாக்கு கேட்க தமிழ்நாட்டுக்கு வாருங்கள்.

இந்த அறிவிப்பை 20-ந் தேதிக்குள் அறிவிக்காவிட்டால், 23-ந் தேதி முதல் எங்கள் இயக்கம் சார்பில் தொடர் முழக்க கண்டன போராட்டம் நடைபெறும். அன்று மாலை அடுத்தகட்ட நிலைப்பாட்டை அறிவிப்போம்.

எவ்வளவோ போராடி விட்டோம், நெருக்கடி நேரத்தில் தான் விடிவு பிறக்கும் என்பதால் தான் தேர்தல் நேரத்தில் இந்த அறிவிப்பை வெளியிடுகிறோம். இனி மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழன் இனத்தால் ஒன்றுபடுவான், சாதிப்பான் என்பதை புரிந்து கொள்ளும் விதத்தில் எங்கள் போராட்டம் இருக்கும். வரப்போகிற மத்திய அரசு தமிழன் சொன்னால் செவி சாய்க்கும்.

சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தது தவறு என்று ஐகோர்ட்டு கூறிவிட்டது. அவர் விடுதலையாகி வரும்போது சிறப்பான வரவேற்பு கொடுக்கப்படும் என்றார்.

உடன் இருந்த சத்யராஜ் கூறுகையில், தமிழர்களை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தான் இந்த போராட்டம் நடத்தப்படுகிறதே தவிர, கட்சி தொடங்க வேண்டும், முதல்-அமைச்சர் ஆக வேண்டும் என்ற ஆசை எல்லாம் எங்களுக்கு இல்லை என்றார்.

இயக்குநர்கள் மனோபாலா, மணிவண்ணன் உள்ளிட்டோரும் பேட்டியின்போது உடன் இருந்தனர்.

Comments