இலங்கையில் போர் நிறுத்தம் கோரி தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு பெண்கள், சென்னையில், மதிமுக தலைமைக் கழக அலுவலகமான தாயகத்தில் கடந்த ஐந்து நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
இவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த நிலையில் இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், நடிகர் சத்யராஜ், கவிஞர் அறிவுமதி உள்ளிட்ட திரையுலகினர் அங்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் பாரதிராஜா உள்ளிட்டோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பாரதிராஜாவும், சத்யராஜும் உணர்ச்சிகரமாக பேசினார்.
அப்போது பாரதிராஜா பேசுகையில்,
இங்கே உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள், 20ஆம் தேதி சென்னைக்கு வரும் சோனியா காந்தியை சந்தித்து இலங்கை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்பட வலியுறுத்துவோம் என்று தெரிவித்துள்ளனர்.
தேர்தல் நேரத்தில் பிரச்சாரத்துக்காக தமிழகத்துக்கு வரும் சோனியா காந்தி, இலங்கையில் போரை நிறுத்தி விட்டேன் என்று சொல்லிவிட்டுதான் சென்னையில் காலடி வைக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு இழவு வீட்டிற்கு வந்து வாக்குக் கேட்கக் கூடாது.
போர் நிறுத்தம் அறிவிக்காவிட்டால், 21ஆம் தேதி தமிழ் திரையுலகம் சார்பில் சென்னையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும். உண்ணாவிரதம் நடக்கும் இடம் இன்னும் முடிவு செய்யவில்லை. இந்த உண்ணாவிரதத்தில் சின்னத்திரை கலைஞர்கள், திரையுலகில் இருக்கும் அனைத்து சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பார்கள்.
உண்ணாவிரதத்தின் நோக்கம் மற்றும் ஈழத்தமிழர்களின் பிரச்சனையில் தமிழ் திரையுலகின் அடுத்தக் கட்ட நடவடிக்கை உள்ளிட்ட முடிவுகளை நாங்கள் 21ஆம் தேதி அறிவிப்போம் என்றார்.
சத்யராஜ் கூறுகையில்,
கடந்த 5 நாட்களாக ஈழத்தமிழர்களுக்காக 100 பெண்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் 3 பேரின் உடல்நிலை சரியில்லாமல் உள்ளது. அவர்களை பேட்டி காணுங்கள். அவர்கள் சொல்லுவதை ஊடகங்களில் போடுங்கள்.
தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அரசியல் கட்சியினர், யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் ஒரு சிறிய வேண்டுகோள். இலங்கை தமிழர் பிரச்சனையில் எல்லோரும் ஓரணியில் நின்று போராடுவோம் என்றார் உருக்கமாக.
Comments