தனது தாக்குதல் மட்டுப்படுத்தல் அறிவிப்பை தானே முறித்துக்கொண்ட சிறிலங்கா: அதிகாலை முதல் 287 தமிழர்கள் படுகொலை; 346 பேர் படுகாயம்

புதுவருடத்தை முன்னிட்டு இன்று திங்கட்கிழமையும் நாளையும் தாக்குல் நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருக்கின்ற போதிலும் நேற்று நள்ளிரவு முதல் 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகள் மீது கடுமையான எறிகணைத் தாக்குதல்களை சிறிலங்கா படையினர் மேற்கொண்டுள்ளனர்.

நேற்று நள்ளிரவு முதல் இன்று பிற்பகல் 4:00 மணி வரையில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 287 அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 346 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

தொடர்ந்தும் எறிகணைத் தாக்குதல்களை சிறிலங்கா படையினர் நடத்தி வருவதாக புதினத்தின் வன்னி செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

தாக்குதல் நடவடிக்கைகளை மட்டுப்படுத்துமாறு சிறிலங்கா அரச தலைவர் படையினருக்கு நேரடியாகவே உத்தரவிட்டிருப்பதாக சிறிலங்கா அரச தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்ற போதிலும், நேற்று நள்ளிரவு 12:00 மணி முதல் தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்களை மக்கள் அதிகமாகவுள்ள பகுதிகளை நோக்கி சிறிலங்கா படையினர் மேற்கொண்டுள்ளனர்.

இன்று காலை முதல் புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் முன்னரண் பகுதி மீது தொடர்ச்சியான தாக்குதல்களை தொடங்கியுள்ள சிறிலங்கா படையினர், பொதுமக்கள் அடைக்கலம் புகுந்திருக்கும் பகுதிகளை நோக்கியும் வழமைபோலவே எறிகணைத் தாக்குதல்களைப் பெருமளவுக்கு மேற்கொண்டு வருகின்றனர்.

'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளான அம்பலவன்பொக்கணை, புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால், வலைஞர்மடம் மற்றும் இடைக்காட்டு ஆகிய பகுதிகளை நோக்கி நள்ளிரவு முதல் எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் பீரங்கி மற்றும் தொலைதூர துப்பாக்கி தாக்குதல்களை சிறிலங்கா படையினர் நடத்தி வருவதாக 'புதினம்' செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இன்று பிற்பகல் 4:00 மணிவரையில் நடைபெற்ற தாக்குதல்களில் 287 தமிழர்கள் பரிதாபகரமாக கொல்லப்பட்டுள்ள அதேவேளையில் 346 பேர் படுகாயமடைந்த நிலையில் அங்குள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

தாக்குதல்கள் தொடர்வதால் இந்தத் தொகை மேலும் அதிகரிக்கலாம் என புதினத்தின் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழை காரணமாக பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டுள்ள பதுங்குகுழிகள் அனைத்தும் வெள்ளக்காடாகக் காணப்படும் நிலையில் சிறிலங்கா படையினர் மேற்கொண்டுள்ள இந்த அகோர தாக்குதல்களில் இருந்து உயிர் தப்பிக்கொள்ள முடியாது மக்கள் சிதறியோடுவதைத்தான் இன்று அதிகாலையிலேயே காண முடிந்தது.

இதேவேளையில் புதுக்குடியிருப்புப் பகுதியில் உள்ள பச்சைப்புல்மோட்டைப் பகுதியில் விடுதலைப் புலிகளின் முன்னரண் பகுதியை நோக்கி படையினர் இன்று அதிகாலை முதல் கடுமையான தாக்குதல்களை நடத்தியிருக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து, விடுதலைப் புலிளும் எதிர்த்தாக்குதல்களை நடத்த மோதல்கள் தீவிரமடைந்திருக்கின்றன.

இன்று அதிகாலை முதல் தாக்குதல்கள் நிறுத்தப்படும் என சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருந்த போதிலும் களநிலைமைகளில் எவ்வித மாற்றங்களும் இல்லாமல் சிறிலங்கா படைத்தரப்பினர் தாக்குதல்களை தொடங்கியிருப்பது தாக்குதல்களை நிறுத்திக்கொள்வதற்கு அவர்கள் தயாராக இல்லை என்பதைத்தான் காட்டுவதாக உள்ளது.

Comments