முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு மா.க. ஈழவேந்தன் அவர்கள் தன்னுடைய உண்ணாநோன்பை இரண்டவாது நாளாக தென்னாபிரிக்க டேர்பன் நகரில் அமைந்துள்ள மாரியம்மன் ஆலயத்தில் தொடர்ந்துகொண்டிருக்கின்றார்.
தன்னுடைய கோரிக்கைகளை சர்வதேச சமூகம் பரிசீலிக்கும் வரைக்கும் தான் இந்தப் போராட்டத்தைத் தொடரப்போவதாகத் தெரிவித்தார்.
"எமது மக்கள் அனுபவிக்கும் சொல்லனாத் துன்பங்களுடன் ஒப்பிடுகையில் நான் தற்பொழுது அனுபவிக்கும் வேதனை ஒன்றும் மிகையானதல்ல" எனக் குறிப்பிடும் திரு ஈழவேந்தன் உலகத் தமிழர்களையும் ஒன்று திரண்டு செயற்படுமாறு தெரிவித்தார்.
"ஈழத்தில் தமிழ் மக்களும் பட்டினிச் சாவை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றார்கள். உணவுக்காக மட்டுமல்லாமல், சுயகௌரவம், சமாதானம் மற்றும் விடுதலைக்காக அவர்கள் ஏங்கிக்கொண்டிருக்கின்றார்கள்.
அவர்கள் வறுமையின் காரணமாக ஏங்கவில்லை. மாறாக, அவர்களுடைய தாயகபூமி அவர்களுடைய சுதந்திரம் மீண்டும் மீண்டும் கொள்ளையடிக்கப்படுவதால் அவர்கள் ஏங்கிக்கொண்டிருக்கின்றார்கள்".
கடந்த அறுபது ஆண்டுகாலமாக தமிழ்மக்களின் அபிலாசைகளுக்காகப் போராடிவரும் திரு ஈழவேந்தன், "சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்களில் அபிலாசைகளை தீர்ப்பதற்கு அரசியல் வழிமுறைகைளைத் தேர்ந்தெடுக்காமல் இராணுவ வழிமுறைகளில் நாட்டம் கொண்டிருப்பமை, எம்மைப் போன்றவர்களையும் தற்பொழுது மாற்று வழிகளில் ஈடுபட நிர்ப்பந்தித்துள்ளது.
ஆகவே தான் நான் தற்பொழுது உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன்" எனக் குறிப்பிட்டார்.
தன்னுடைய கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் வகையில், தென்னாபிரிக்க அரசியல் தலைவர்கள் திரு நெல்சன் மண்டேலா, திரு ஜக்கப் சூமா மற்றும் மதகுருத் தலைவர் டெஸ்மன் டுற்று ஆகியோர் ஆதரவு தரும் வகையில் செயற்படவேண்டும் எனக் குறிப்பிட்டார்.
அவருடைய அவசரமானதும் முக்கியமான கோரிக்கை சிறிலங்கா அரசாங்கம் உடனடியாக நிரந்தரமான யுத்த நிறுத்தத்தை மேற்கொள்ளவேண்டும் என்பதே. அத்துடன், சர்வதேச மனிதாபிமான அமைப்புக்களுடைய மேற்பார்வையின் கீழ் உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படவேண்டும் எனபதும், அனைத்து அமைப்புக்களும் சிறிலங்கா அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் தடுப்பு முகாம்களுக்கு அனுமதிக்கப்படவேண்டும் என்பதும் அவருடைய சில கோரிக்கைகளாகும்.
இவ்வாறான கோரிக்கைகளை முன்வைத்து பிரித்தானியா, கனடா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் தமிழ் இளைஞர்கள் உண்ணாவிரதப் பேராட்டத்தில் குதித்துள்ளனர். தொடர்ந்தும் மற்ற நாடுகளில் மக்கள் இவ்வாறான போராட்டங்களில் ஈடுபடவேண்டும் என சர்வதேசச் தமிழ்ச் சொந்தங்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறார்.
Comments