கடந்த 7ம் திகதி ஆரம்பமான இந்தப் போராட்டம், 48 மணித்தியாலங்களைக் கடந்துவிட்ட வேளையிலும், அனைத்து மக்களும் ஒன்றுபட்ட ஒரே குரலில் ஒட்டாவா நகரில் திரண்டு புதிய களங்களை விரிவுபடுத்தி வருகின்றனர். நகரின் பிரதான ஜந்து வீதிகளை கடந்த இரண்டு தினங்களாக முற்றாக முற்றுகை இடப்பட்டு, வாகனப் போக்குவரத்தும் தடைசெய்யப்பட்டன. கனடிய மற்றும் தமிழீழத் தேசியக் கொடிகளை ஆயிரக் கணக்கில் தமிழர்கள் தாங்கியவாறு, வீதிகளில் நின்று சிறிலங்கா இனப்படுகொலைகளை விபரிக்கும் ஆங்கிலப் பிரசுரங்களை விநியோகித்து வருகின்றனர்
கனடியப் பிரசைகளும், பல வேற்றின மக்களும் இப்பிரசுரங்களை வாசித்த பின்னர் தாமும் இந்தப் போராட்டத்தில் பங்குபற்றி அனைவரையும் உற்சாகப்படுத்திய நிகழவுகள் இரண்டாம் நாள் இடம்பெற்றது.
பல்வேறு பல்கலைக்கழகங்களின் வேற்றின மாணவர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் இதில் பங்குபற்றி உரையாற்றி உற்சாகம் வழங்கி வருகின்றனர். கனடியப் பொலிசார் இந்தப் பேரெழுச்சியுடன் கூடிய உறுதிப்போராட்டத்துக்கு தம்மாலான ஒத்துழைப்பு வழங்கி, சட்டம் ஒழுங்கை பேணிவருவது குறிப்பிடத்தக்கது.
ஒட்டாவா, மொன்றியல் வாழ் தமிழ் மக்களும், ரொறன்ரோ பெரும்பாகத் தமிழ் மக்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர். ரொறன்ரோவிலுருந்து தினமும் காலை,மாலை என்று பேருந்துகள் விசேடமாக ஏற்பாடு செய்யப்பட்டு மக்களை ஏற்றிச்செல்கின்றன.
எட்டாம் திகதியான இரண்டாம் நாள் மூன்று தமழ் மூத்தோர் இங்கு தங்களின் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தனர். இவர்களுக்கு ஆதரவாக மேலும் பலர் சுழற்சி முறையில் இணைந்துள்ளனர். மழை, வெய்யில், பனி, குளிர் என்று அடிக்கடி மாறிவரும் காலநிலையையும் பொருட்படுத்தாது, இரவு-பகல் என்றும் பாராமல் ஆயிரக்கணக்கானவர்கள் நாடாளுமன்ற முகப்பில் கூடாரம் அடித்துத் தங்கியுள்ளனர்.
வன்னிக் களநிலவரம் சம்பந்தமான உடனடிச்செய்திகள் விசேட ஒலிபரப்பு வசதிகள் ஊடாக ஒலிபரப்பப்பட்டு வருகின்றது. கனடாவின் சகல ஆங்கிலப் பத்திரிககளும், தொலைக்காட்சிச் சேவைகளும் இந்தப் போராட்டத்துக்கு முக்கிய இடமளித்து வருவதைக் கவனிக்கக் கூடியதாகவுள்ளது. அடுத்துவரும் நான்கு நாட்களான 10ம் திகதி முதல் 13ம் திகதி வரை அரசாங்க விடுமுறை நாட்களாதலால், பல்லாயிரக்கணக்கான மக்கள் இதில் பங்கேற்பர் என்று எதிர்பாக்கப்படுகின்றது.
Comments