'பாதுகாப்பு வலயம்' மீது நள்ளிரவில் இருந்து இன்றிரவு வரை சிறிலங்கா படையினர் தாக்குதல்: 310 தமிழர்கள் படுகொலை; 542 பேர் காயம்
'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளான முள்ளிவாய்க்கால், இரட்டைவாய்க்கால், அம்பலவன்பொக்கணை, இடைக்காடு, மாத்தளன் மற்றும் வலைஞர்மடம் பகுதிகளில் உள்ள மக்கள் வாழ்விடங்கள் மீது சிறிலங்கா படையினர் நேற்று சனிக்கிழமை நள்ளிரவு தொடக்கம் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு வரை தொடர்ச்சியாக கொத்துக்குண்டு ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார், பீரங்கி மற்றும் கனரக துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களை நடத்தினர்.
குறுகிய இடைவெளியில் மக்கள் மீது இன்று காலை 6:00 மணிவரை சிறிலங்கா படையினர் நடத்திய தாக்குதல்களில் 178-க்கும் அதிகமான அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 344-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
இன்று அதிகாலை முதல் 'மக்கள் பாதுகாப்பு வலயம்' மீது பாரிய அளவில் நடத்தப்பட்ட சிறிலங்கா படையினரின் தாக்குதல்களில் முள்ளிவாய்க்கால், இரட்டைவாய்க்கால், வலயர்மடம், அம்பலவன்பொக்கணை, இடைக்காடு மற்றும் மாத்தளன் பகுதிகள் மீது இன்று மட்டும் 800 வரையான எறிகணைகள் வீசப்பட்டுள்ளன.
பல்லாயிரக்கணக்கான துப்பாக்கி ரவைகளும் பீரங்கிக் குண்டுகளும் ஏவப்பட்டன. டாங்கிகள் மூலம் 200 வரையான குண்டுகள் ஏவப்பட்டன.
இன்று காலை 8:00 மணி தொடக்கம் இன்று இரவு 7:00 மணிவரையும் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 132-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டும் 198 பேர் காயமடைந்தும் உள்ளனர்.
கடந்த 36 மணி நேரத்தில் மட்டும் 310 பேர் கொல்லப்பட்டும் 542 பேர் படுகாயமடைந்தும் உள்ளதாக வன்னியில் இருந்து 'புதினம்' செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இரட்டைவாய்க்கால், அம்பலவன்பொக்கணை, இடைக்காடு, மாத்தளன் பகுதிகளில் சிறிலங்கா படையினரால் இன்று இரவு எறிகணை, டாங்கிகளின் கனரக துப்பாக்கிச் சூடு மற்றும் ஆர்பிஜி உந்துகணைத் தாக்குதல்கள் அகோரமாக நடத்தப்பட்டுள்ளன.
கடும் மழை பெய்துவரும் நிலையில் இத்தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டடு வந்தமையினால் மக்கள் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகி அவதிப்பட்டு வருவதாகவும் 'புதினம்' செய்தியாளர் தெரிவித்தார்.
இன்று நடத்தப்பட்ட தாக்குதல்களில் மாத்தளன் மருத்துவமனையில் 52 பேரும் முள்ளிவாய்க்கால் மருத்துவ சிகிச்சை நிலையத்தில் 42 பேரும் நட்டாங்கண்டல் மருத்துவ சிகிச்சை நிலையத்தில் 54 பேரும் திலீபன் மருத்துவ சிகிச்சைப்பிரிவில் 60 பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் 'புதினம்' செய்தியாளர் மேலும் கூறியுள்ளார்.
Comments