பாதுகாப்பு வலயம் மீது இன்றும் சிறிலங்கா வான்படை குண்டுத் தாக்குதல்: 32 தமிழர்கள் படுகொலை

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள பாதுகாப்பு வலயத்தின் மீது சிறிலங்காவின் வான்படையின் வானூர்திகள் இன்று நடத்திய குண்டுத் தாக்குதல்களில் 32 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 48 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

பாதுகாப்பு வலய பகுதி மீது இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7:00 மணிக்கும் பின்னர் 10:15 நிமிடத்துக்கும் மீண்டும் 11:00 மணிக்கும் சிறிலங்கா வான்படையினர் குண்டுத் தாக்குதல்களை நடத்தினர்.

முற்பகல் 11:00 மணிவரை சிறிலங்கா வான்படை 38 குண்டுகளை வீசியுள்ளது. மிக், கிபீர் மற்றும் எஃப்-7 ரக வானூர்திகள் மாறி, மாறி வந்து குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளன.

இத்தாக்குதல்களில் 32 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 48-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். பெருமளவிலான மக்களின் கூடாரங்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.

மக்கள் வாழ்விடங்கள் மீது சிறிலங்கா வான்படை தொடர்ச்சியாக குண்டுகளை வீசி வருவதால் மக்கள் பேரவலத்துக்குள் தள்ளப்பட்டுள்ளனர் என புதினத்தின் வன்னிச் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

Comments