'மக்கள் காப்பு வலயம்' மீது சிறிலங்கா படைகள் இன்று கொலைவெறித் தாக்குதல்: 322 தமிழர்கள் கோரக் கொலை

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு வட்டார 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதியில் வாழும் மக்கள் மீது இன்று சிறிலங்கா படையினர் நடத்திய கனரக துப்பாக்கிச் சூடு மற்றும் எறிகணைத் தாக்குதல்களில் 322 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 300-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிக்குள் ஊடுருவ முயற்சித்த சிறிலங்கா படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலைத் தொடர்ந்து, பின்வாங்கிச் சென்ற சிறிலங்கா படையினர் இன்று வியாழக்கிழமை காலை 5:00 மணி தொடக்கம் மாலை 6:00 மணிவரை கனரக துப்பாக்கிச் சூடு மற்றும் எறிகணைத் தாக்குதல்களை மக்களை இலக்கு வைத்து அகோரமாக நடத்தினர்.

'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிக்குள் உள்ள அம்பலவன்பொக்கணை, இடைக்காடு மற்றும் மாத்தளன் பகுதிகளை நோக்கியே சிறிலங்கா படையினர் இத்தாக்குதல்களை நடத்தினர்.

இதில் 322 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 300-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். அம்பலவன்பொக்கணை மற்றும் இடைக்காடு ஆகிய பகுதிகளில் மட்டும் 212 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்டவர்களின் உடலங்களை அந்த அந்த இடங்களில் புதைத்து விட்டும் சிலர் கைவிட்டு விட்டும் பாதுகாப்பு இடங்களை நோக்கி சிதறி ஓடினர்.

இதேவேளையில் 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகள் மீது தாக்குதல் நடத்துவதில்லை என அனைத்துலக ஊடகங்களுக்கு சிறிலங்கா கூறியிருந்த நிலையில் மீண்டும் இப்பகுதியை நோக்கி அது தாக்குதலை நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Comments