முள்ளிவாய்க்கால் மக்கள் வாழ்விடங்கள் மீது எறிகணைத் தாக்குதல்: 36 பேலி; 43 பேர் படுகாயம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் மக்கள் வாழ்விடங்கள் மீது சிறிலங்கா படையினர் இன்று நடத்திய தாக்குதல்களில் 36 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 43 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

மக்கள் பாதுகாப்பு வலயத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் இன்று வியாழக்கிழமை காலை 8:50 நிமிடமளவில் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணைத் தாக்குதல்கள் மக்கள் வாழ்விடங்கள் மீது நடத்தப்பட்டுள்ளன.

இதில் 36 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 43 பேர் படுகாயமடைந்தனர்.

இத்தாக்குதல்களினால் மக்களின் 7 கூடாரங்கள் முற்றாக அழிந்து நாசமாகின.

காயமடைந்தவர்கள் முல்லைத்தீவு பொதுமருத்துவமனையினதும் நட்டாங்கண்டல் மருத்துவமனையினதும் சிகிச்சை நிலையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளையில் காயமடைந்தவர்களுக்கு 'திலீபன்' மருத்துவ சேவைப்பிரிவினரும் சிகிச்சைகளை வழங்கி வருகின்றனர்.

மாத்தளன் மருத்துவமனைக்குச் செல்லும் வீதி படையினரின் கடுமையான எறிகணைத் தாக்குதல்களுக்கு இலக்காகியிருப்பதானால் காயமடைந்தவர்களை கொண்டுசெல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக புதினத்தின் வன்னிச் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

Comments