இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி, சென்னையில் பெண்கள் நடத்தும் உண்ணாவிரத போராட்டம்: 3 பெண்கள் உடல்நிலை பாதிப்பு

இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி, சென்னையில் பெண்கள் நடத்தும் உண்ணாவிரத போராட்டம் நேற்று 4-வது நாளாக நீடித்தது. இதில், 3 பெண்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இனப்படுகொலை செய்யப்படும் அப்பாவி தமிழர்களை காக்க கோரியும், அங்கு போர் நிறுத்தம் செய்வதற்கு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பல்வேறு அமைப்பினர் போராடி வருகின்றனர்.

இந்த நிலையில், பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பெண்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் குதிக்க முடிவு செய்தனர்.

அதன்படி கடந்த 13-ந் தேதி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள் சென்னை வந்தனர். சென்னை வந்த அவர்கள் இலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்து இறந்த முத்துகுமார் உடல் வைக்கப்பட்டிருந்த கொளத்தூருக்கு சென்றனர். அங்கு 20- பெண்கள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.

அங்கு உண்ணாவிரதம் இருக்க போலீசார் அனுமதி மறுத்தனர். அதைத் தொடர்ந்து, ம.தி.மு.க. தலைமை அலுவலகமான தாயகத்தில் நேற்று முன்தினம் முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். இதற்கு ஆதரவு தெரிவித்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று வருகின்றனர்.

போராட்டம் தொடங்கி நேற்றுடன் 4-நாட்கள் ஆகிவிட்டது. இதனால், உண்ணாவிரதம் இருந்து வரும் 20 பெண்களும் சோர்வாக காணப்பட்டனர். இதில், சென்னையை சேர்ந்த கவிதா(வயது 30), தேனியை சேர்ந்த சித்ரா(40), காஞ்சீபுரத்தை சேர்ந்த சசிகலா( 30) ஆகிய 3 பேரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்க பட்டது. போராட்டம் தொடர்ந்து நீடிக்குமானால் பலரது நிலைமை மிகவும் மோசமாக வாய்ப்பு உள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் நேற்று மாலை 10-க்கும் மேற்பட்ட கலைஞர்களின் தாரை, தப்பட்டை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கலைஞர்கள் தாரை, தப்பட்டைகளை அடித்து உற்சாகப்படுத்தினர்.

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ நேரில் சந்தித்தார். அவர்களுக்கு சால்வைகளை அணிவித்து போராட்டத்திற்கு வாழ்த்துக்களையும், ஆதரவையும் தெரிவித்தார்.

உண்ணாவிரத போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் வக்கீல் பாண்டிமா தேவி கூறுகையில், " தற்போது உண்ணாவிரதம் இருந்து வரும் இடத்திற்கும் போலீசார் அனுமதி மறுக்குமானால், மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

சென்னைக்கு 20-ந் தேதி வரும் சோனியா காந்தியை சந்தித்து, இலங்கை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்பட வலியுறுத்துவோம். தினமும் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் எங்களை சந்தித்து வருகின்றனர். எங்களது போராட்டம் மேலும் தீவிரமாகும்''. என்றார்.

Comments