கடந்த இரு நாட்களில் பாதுகாப்பு வலயத்தில் இருந்து வெளியேறியதாகச் சொல்லப்படும் 45 ஆயிரம் தமிழர்கள் எங்கே?

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பு வலயத்தின் மீது சிறிலங்கா படையினர் நடத்திய பாரிய தாக்குதல்களைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களிலும் 56 ஆயிரம் பேர் அங்கிருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்திருப்பதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்ற போதிலும், சுமார் 10 ஆயிரம் பேர் மட்டுமே நலன்புரி முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். ஏனைய சுமார் 45 ஆயிரம் பேருக்கும் என்ன நடந்தது என்ற கேள்வி இப்போது எழுப்பப்படுகின்றது.

பாதுகாப்பு வலயத்தின் மீது பல முனைகளில் சிறிலங்கா படையினர் நேற்று முன்நாள் திங்கட்கிழமை அதிகாலை தொடுத்த பாரிய தாக்குதலையடுத்து அங்கிருக்க முடியாத பெரும் தொகையானவர்கள் புதுமாத்தளன் மற்றும் அம்பலவன்பொக்கணை போன்ற பகுதிகளில் இருந்து வெளியேறி இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துள்ளனர்.

கடல்வழியாக வெளியேறிய சுமார் 3 ஆயிரம் பேர் படகுகள் மூலமாக பருத்தித்துறையைச் சென்றடைந்திருக்கின்றனர். இவர்கள் பின்னர் அங்கிருந்து இராணுவத்தினரால் கொண்டு செல்லப்பட்டு தென்மராட்சிப் பகுதியில் உள்ள நலன்புரி முகாம்களில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளின் மத்தியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளையில் நந்திக் கடலைத்தாண்டி புதுக்குடியிருப்பு கிழக்குப் பகுதியால் தரைவழியாக வெளியேறியவர்கள் படையினரால் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு இடம்பெற்ற கடுமையான விசாரணைகளையடுத்து வவுனியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றனர்.

கடந்த இரண்டு நாட்களில் இவ்வாறு வெளியேறியவர்களில் சுமார் 6 ஆயிரத்து 500 பேர் மட்டுமே வவுனியாவுக்குக் கொண்டுவரப்பட்டு ஓமந்தைப் பகுதியில் உள்ள முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு கொண்டுவரப்பட்டவர்களில் பலர் படுகாயமடைந்த நிலையில் காணப்பட்டனர். வெளித்தொடர்புகள் எதுவும் அற்ற நிலையிலேயே இவர்கள் வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்துக்கு சென்ற சுமார் 3 ஆயிரம் பேரையும், வவுனியாவுக்கு வந்த சுமார் 6 ஆயிரத்து 500 பேரையும் தவிர்த்தால் அரசாங்கம் தெரிவித்த 56 ஆயிரம் பேரில் மீதியாகவுள்ள சுமார் 45 ஆயிரம் பேருக்கு என்ன நடந்தது எனக் கேள்வி எழுப்பியிருக்கின்றார் மனித உரிமைவாதி ஒருவர்.

இவ்வாறு வந்தவர்களில் பெரும் தொகையானவர்கள் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் உள்ள இராணுவ முகாம்களில் வைக்கப்பட்டு கடுமையான விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த இடைத்தங்கல் இடைத்தங்கள் முகாம்கள்தான் வன்னியில் இருந்து வரும் மக்களை 'வடிகட்டும்' முகாம்களாகவும் இருப்பதால் இந்த முகாம்களில் பாரியளவிலான சித்திரவதைகளும், மனித உரிமைகள் மீறல்களும் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக மனித உரிமைவாதிகள் பெரும் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற பகுதிகளில் உள்ள இடைத்தங்கல் முகாம்கள்தான் வன்னியில் இருந்து வருபவர்களை 'வடிகட்டு்ம்' முகாம்களாகவும் செயற்படுவதாக இராணுவ வட்டாரங்களும் தெரிவித்திருக்கின்றன.

இந்த முகாம்களில மனித உரிமை மீறல்களில் அதிகளவில் இடம்பெறுவதால் அனைத்துலக கண்காணிப்பாளர்களை அந்த முகாம்களுக்கு அனுமதிக்க வேண்டும் என ஐ.நா. உட்பட பல அமைப்புக்களும் சிறிலங்கா அரசாங்கத்தை ஏற்கனவே கேட்டிருந்தன.

கிளிநொச்சியில் உள்ள மருத்துவமனைப் புதிய கட்டடம் கூட இவ்வாறான ஒரு சித்திரவதை முகாமாகச் செயற்பட்டு வருதாகவே சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

முற்றாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள இங்கு படையினரைத் தவிர வேறு எவரும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த மருத்துவமனைக் கட்டடத்தில் பெரும் தொகையான ஆண்களும், பெண்களும் தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்படுவதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சியில் இடம்பெறும் இந்த வடிகட்டல் நடவடிக்கையில் தப்பிப் பிழைப்பவர்கள் மட்டுமே வவுனியாவுக்கு அனுப்பிவைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மற்றவர்களுக்கு என்ன நடக்கின்றது என்பதை அறிந்துகொள்வதற்கான வாய்ப்புக்கள் எதுவும் இல்லை.

Comments