வலைஞர்மடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை சிறிலங்கா படையினர் நடத்திய கொத்துக்குண்டு எறிகணைத் தாக்குதலிலேயே உளநல மருத்துவர் சிவா மனோகரன் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மாத்தளன் பகுதியில் படையினர் நேற்று நடத்திய தாக்குதலில் சிக்கிய மக்களை முன்னிறுத்தி இன்று பாரிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இத்தாக்குதலின் போது படையினர் அகோர எறிகணை மற்றும் நச்சுப் புகைத்தாக்குதலையும், கனரக துப்பாக்கிச் சூட்டுத்தாக்குதல்களையும் நடத்தியுள்ளனர்.
இவ்வாறான தாக்குதல் ஒன்றினையே நேற்றைய நாளும் படையினர் நடத்தியிருந்தனர்.
இதனால் மக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு விடுதலைப் புலிகளால் பாரிய தாக்குதலை நடத்த முடியாத நிலையேற்பட்டதாக விடுதலைப் புலிகளின் வன்னி கட்டளை மையத்தை மேற்கோள் காட்டி புதினத்தின் வன்னி செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இதேவேளையில் படையினரின் இன்றைய தாக்குதலினால் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல முடியாத நிலையேற்பட்டதாக புதினத்தின் செய்தியாளர் கூறுகின்றார்.
மாத்தளன், பொக்கணை, இடைக்காடு, வலைஞர்மடம், இரட்டைவாய்க்கால், முள்ளிவாய்க்கால் பகுதிகள் மீதும் சிறிலங்கா படையினர் இன்று தொடர்ச்சியாக எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
சிறிலங்கா படையினரின் இவ்வாறான கண்மூடித்தனமான தாக்குதல்களினால் மக்கள் பெரும் இன்னல்களை எதிர்நோக்கினர். காப்பழிகளில் இருந்த மக்கள் வெளியேற முடியாது அவதிப்பட்டனர்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல முடியாத நிலையில் அந்த அந்த இடங்களில் படுத்திருந்தவாறு அவலக்குரல்களை எழுப்பினர்.
இதற்கிடையே, மக்கள் பாதுகாப்பு வலய பகுதியில் உணவுக்கு பெரும் நெருக்கடி நிலையேற்பட்டுள்ளது.
படையினரின் அகோரத் தாக்குதல்களினால் மக்கள் அச்சமடைந்து உணவுப்பொருட்களும் இல்லாத நிலையில் மிகவும் களைப்படைந்து காணப்படத்தாக புதினத்தின் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழீழ நிதித்துறை, 'மருதம்' நிறுவனம் ஆகியவற்றின் பணியாளர்கள் சீனி, தேயிலை ஆகியவற்றை இலவசமாக வழங்கி வருகின்றனர்.
Comments