இது குறித்து தெரியவருவதாவது:-
இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி பல்வேறு பெண்கள் அமைப்பை சேர்ந்த 100 பெண்கள் சென்னையில் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டனர். பொது இடத்தில் உண்ணா விரதம் இருக்க அவர்களுக்கு அனுமதி தராததால் ம.தி.மு.க. அலுவலக வளாகத்தில் உண்ணாவிரதம் இருந்தனர்.
10-வது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் பெண்களில் மிகவும் சோர்வுடன் காணப்பட்ட 5 பேரை கமிஷனர் ரவிக்குமார் தலைமையில் சென்ற 100-க்கும் மேற்பட்ட பொலிஸார் இன்று அதிகாலை 5.45 மணியளவில் கைது செய்து வானில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
கைது செய்யப்பட்ட லோகநாயகி, ஜெயமணி, சுமதி, சித்ரா தேவி, தங்கமணி ஆகிய 5 பெண்களுக்கும் பொலிஸார் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுபற்றி போராட்ட குழு தலைவி போராசிரியை சரஸ்வதி கூறியதாவது:-
உண்ணாவிரதம் இருந்த பெண்களிடம் பொலிஸார் நடந்து கொண்ட விதம் முறையல்ல. மனித உரிமைக்கும் பெண்கள் உரிமைக்கும் எதிராக அவர்கள் நடந்து கொண்டனர்.
நாங்கள் தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் உண்ணாவிரதம் இருந்து வருகிறோம். உண்ணாவிரத பந்தலில் தூங்கிக் கொண்டிருந்த பெண்களின் போர்வையை விலக்கி பார்த்து 5 பேரை தேடி கைது செய்தது கண்டிக்கத்தக்கது.
பொலிஸார் அத்துமீறி நுழைந்ததற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். எங்களது போராட்டத்தை திசை திருப்பும் முயற்சியாக இதனை கருதுகிறோம். சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் நாங்கள் போராட்டத்தை கைவிடப் போவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
கைதான 5 பெண்கள் ஆஸ்பத்திரியிலும் உண்ணாவிரதத்தை தொடர்ந்து மேற்கொள்கிறார்கள்.
Comments