வன்னியில் 69 சதவீத சிறுவர்கள் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்: பிராந்திய சுகாதார பிரிவு அலுவலகம்

வன்னி பிராந்தியத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர், 5 வயதுக்கும் குறைவான 2 சதவீதமான சிறுவர்களே போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டிருந்தனர். எனினும் தற்போது இந்த எண்ணிக்கை 69 சதவீதமாக மாற்றமடைந்துள்ளதாக முல்லைத்தீவு சுகாதார காரியாலயம் தெரிவித்துள்ளது.

பாலூட்டும் தாய்மாரும், எடைகுறைவு மற்றும் போசனையின்மையால், தமது குழந்தைகளுக்கு பாலூட்ட முடியாத நிலையில் இருக்கின்றனர்.

உணவு விநியோகத் தடங்கல்களினால், ஒரு மாதக் குழந்தைகளுக்கு மாத்திரமே பால் மா வழங்கப்படுகிறது.வளர்ந்த குழந்தைகள், தேநீருடன் தமது வயிறுகளை நிரப்பிக் கொள்கின்றனர்.

அத்துடன் கொல்லப்பட்ட தாய்மார்களின் குழந்தைகளை உறவினர்கள் வைத்தியசாலைகளுக்கு அழைத்து வருகின்ற போதும் அங்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களை குழந்தைகளால் உண்ண முடியாத நிலையும் குறித்த குழந்தைகளுக்கு உறவினர்களால் உணவுகளை ஊட்டமுடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் உயிர்களை பாதுகாத்து கொள்ளும் பொருட்டே குறைந்த அளவிலான குழந்தைகளுக்கு உணவுப்பொருட்கள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் கடந்த 2 மாதகாலமாக எந்தவிதமான மரக்கறிகளையும் காணவேயில்லை. வெறும் அரிசியால் சமைக்கப்பட்ட பிட்டு அல்லது சோற்றினையே இவர்கள் உண்டு வருகின்றனர்.தமிழர் புனர்வாழ்வு கழகத்தினால் அவர்களுக்கு கஞ்சி வழங்கப்படுகிறது.

அவர்களுக்கு மாதாந்தம் 5000 மெட்ரிக் தொன் உணவு தேவைப்படும் நிலையிலும், 1000 மெட்ரிக் தொன் உணவுப் பொருட்களே அனுப்பி வைக்கப்படுகின்றன.

இதற்கிடையில், அதிகரித்துள்ள மழை வீழ்ச்சி, பாரிய சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்தியுள்ளன.

Comments