சென்னையில் 8வது நாளாகத் தொடரும் இனப்படுகொலைக்கு எதிரான பெண்கள் அமைப்பின் உண்ணாவிரதப் போராட்டம்

இலங்கையில் நடைபெற்று வரும் போரை நிறுத்த கொங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிவிப்பு வெளியிடக்கோரி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் 8வது நாளாக உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பெண்களில் ஒருவர் நேற்று கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

'தமிழீழ படுகொலைக்கு எதிரான பெண்கள்' அமைப்பினர் தொடர்ந்து 8வது நாளாக இன்று திங்கட்கிழமையும் உண்ணாநிலைப் போராட்டம் நடத்திவருகின்றனர். இந்தப் போராட்டம் சென்னை எழும்பூரில் உள்ள வைகோவின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகமான தாயகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.




இலங்கையில் நடைபெற்று வரும் போரினால் பெருமளவிலான குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என தொடர்ந்து சிங்களப் படையினரால் கொல்லப்பட்டு வருகின்றனர். இதனைக் கண்டித்தும், அங்கு நடைபெற்று வரும் போரை தடுத்து நிறுத்தும் விதமாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி போர் நிறுத்தம் ஏற்படுத்த அறிவிப்பு வெளியிடக்கோரி இந்த உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்று வருகின்றது.

இந்தப் போராட்டத்திற்குப் பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து 8வது நாளாக இன்றும் உண்ணாநிலைப் போராட்டம் நடைபெறுகின்றது. இதில் திருச்சியைச் சேர்ந்த ஜெயமணி என்ற பெண்ணின் உடல்நிலை இன்று மிகவும் மோசமடைந்து கவலைக்கிடமான நிலையில் இருந்ததால் அவரை சென்னை பொதுமருத்துவமனையில் நேற்று மாலை அனுமதித்தனர். அவருக்கு மருத்துவர்கள் சிசிக்சை அளித்தனர். இருப்பினும் மருத்துவமனையிலும் தொடர்ந்து உண்ணாநிலைப் போராட்டத்தை ஜெயமணி நடத்தி வருகின்றார்.



இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்களில் பழனியம்மாள், செல்வி, லோகநாயகி, சாந்தி ஆகியோரின் உடல்நிலையும் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இருப்பினும் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் கலந்து கொண்டு வருகின்றனர்.

போர் நிறுத்தத்தை சோனியா காந்தி அறிவிக்காமல் தமிழகத்திற்கு வருகை தந்தால் அவருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்துவோம் என்று பெண்கள் அமைப்பினர் எச்சரித்துள்ளனர். இந்தப் போராட்டத்தில் பல்வேறு பெண்கள் அமைப்பினர் கலந்து கொண்டு வருகின்றனர்.

இனப்படுகொலைக்கு எதிரான பெண்கள் அமைப்பினருடன் நீங்கள் தொடர்பு கொண்டு பேசவிரும்பினால் இதோ அவர்களின் பெயர் மற்றும் கைத்தொலைபேசி இலக்கங்கள்

திருமதி சரஸ்வதி விடுதலை ராஜேந்திரன் - +0 11 91 90945 57748

திருமதி பாண்டிமாதேவி - + 0 11 91 94440 65666

திருமதி ஷீலு - +0 11 91 94440 15851

அவர்களின் போராட்டத்திற்கு உங்களின் ஆதரவை வழங்குங்கள்.

Comments