தமிழ்நாட்டில் தஞ்சமடைந்தவர்களில் நால்வர் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டம்

தமிழ்நாடு செங்கல்பட்டிலுள்ள ஈழத்தமிழர் சிறப்பு முகாமிலுள்ள 4 பேர் கடந்த 30-03-2009 முதல் சாகும்வரை உண்ணாநிலை மேற்கொண்டுள்ளனர்.

செங்கல்பட்டில் ஈழ அகதிகள் சிறப்பு முகாம் ஒன்று உள்ளது. தமிழகத்தில் ஏதேனும் வழக்கில் சிக்கியிருக்கக் கூடிய ஈழ அகதிகள், வழக்கிலிருந்து ஒட்டு மொத்தமாக விடுதலை ஆனாலோ அல்லது பிணை விடுதலைப் பெற்றாலோ அவர்கள் சிறப்பு முகாம் என்ற பெயரில் உள்ள சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

அவர்கள் வெளி உலகத்தினருடன் தொடர்பு கொள்ளவோ, வெளியே செல்லவோ முடியாது. வழக்கறிஞர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் மட்டுமே அவர்களை சந்திக்க இயலும். முழுமையாக உளவுத்துறை மற்றும் காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இப்படியான சிறப்பு முகாம்கள் தமிழகத்தில் பல இடங்களில் உள்ளன.

செங்கல்பட்டில் உள்ள சிறப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளவர்களில் நால்வர் சில மனித உரிமை கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 3 நாட்களாக பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களின் பெயர்கள் வருமாறு :
நாகேந்திரன் (வயது 44) த - பெ மார்டின்
பாரிஸ் ராஜ் (வயது 24) த - பெ தேவராஜா
சுரேஸ் (வயது 29) த - பெ ஜெபமாலை
தயானந்தன் (வயது 52) த - பெ விநாயகமூர்த்தி

அவர்கள் கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்

1. வழக்கு முடிந்து வழக்கிலிருந்து விடுதலை பெற்றவர்களை தங்கள் நாடுகளுக்கு திரும்ப அனுமதிக்க வேண்டும்.

2. 47 பேர் மீதான வழக்குகளில் இன்று வரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் கடந்த 3 முதல் 5 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும்.

3. உடல்-மன நலமில்லாத 8 பேர் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை தமிழகத்தில் உள்ள திறந்த வெளி அகதிகள் முகாம்களில் உள்ள அவர்களது குடும்பத்தினருடன் சேர்த்து வைத்து அவர்கள் மருத்துவ சிகிச்சைப் பெற அனுமதிக்க வேண்டும்.

மேற்கண்ட மனித உரிமை கோரிக்கைகளை முன் வைத்து சாகும்வரை பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்களை, மூன்று நாட்களாகியும் எந்த அதிகாரியும் சந்திக்கவோ சிக்கலைத் தீர்க்கவோ முனையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments