வன்னி மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்: பிரித்தானிய அமைச்சர் வலியுறுத்தல்

வன்னியில் போரின் பிடியில் சிக்கியுள்ள மக்களின் நிலை தொடர்பாகவே தாம் அதிகளவில் அக்கறைப்படுவதாகத் தெரிவித்திருக்கும் பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய நாடுகளின் விவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட், மக்கள் இந்த ஆபத்தான நிலைமையில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியிருக்கின்றார்.

வன்னியில் இடம்பெறும் தாக்குதல்களில் நாளாந்தம் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படுவது தொடர்பாக நம்பகரமான தகவல்கள் கிடைத்த வண்ணம் உள்ளன.

'பாதுகாப்பு வலயம்' எனப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் கூட இவ்வாறு அப்பாவிகள் கொல்லப்படுகின்றனர் எனத் தெரிவித்திருக்கும் அவர், இவ்வாறு அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படுவதைத் தவிர்ப்பதற்கு போர் நிறுத்தம் செய்யப்படுவது அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை வன்னியின் தற்போதைய நிலைமை தொடர்பாகவும், இந்த மனிதாபிமானப் பிரச்சினையைக் கையாள்வதில் பிரித்தானிய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளையும் விளக்கி உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த உரையில் அவர் மேலும் தெரிவித்ததாவது:

வடபகுதியில் சிறிலங்கா அரச படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெறும் போரின் பிடியில் சிக்கியுள்ள மக்களின் நிலை தொடர்பாகவே நாம் அதிகளவு கவனத்தைச் செலுத்த வேண்டியவர்களாகவுள்ளோம். இந்த ஆபத்தான இடத்தில் இருந்து பாதுகாப்பான இடத்துக்கு அவர்கள் மாற்றப்படுவது அவசியம்.

தை மாதத்தில் இருந்து இடம்பெயர்ந்தவர்களில் 60 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் போர் இடம்பெறும் பகுதிகளில் இருந்து வெளியேறி அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் வந்திருக்கின்றார்கள். கடந்த ஒரு வார காலப் பகுதியில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் இவ்வாறு வெளியேறியிருக்கின்றார்கள்.

இருந்தபோதிலும் போர்ப் பகுதியில் மேலும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இருப்பதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் கடந்த 18 மாத காலத்தில் பல தடவைகள் இடம்பெயர்ந்திருப்பதுடன், தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் போரினால் அச்சத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர்.

பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்ட பகுதிகள் உட்பட போர்ப் பகுதிகளில் நாளாந்தம் பொதுமக்கள் கொல்லப்படுவது தொடர்பான நம்பகரமான தகவல்கள் கிடைத்துக் கொண்டேயிருக்கின்றன.

பொதுமக்கள் கொல்லப்படுவதை நாம் வன்மையாகக் கண்டிப்பதுடன், பொதுமக்களுக்குப் பாதிப்புக்கள் ஏற்படாமல் இருப்பதை உறுதிப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரை நாம் கேட்டுக்கொள்கின்றோம்.

அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களின் கீழ் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்ற தமது கடமைப்பாட்டை சிறிலங்கா அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் மதித்து நடந்துகொள்ள வேண்டும்.

போர் நிறுத்தத்தினை செய்துகொள்ள வேண்டும் என பிரதமர் ஜனவரி 14 ஆம் நாள் கோரிக்கை விடுத்திருந்தார். அன்று முதல் நானும் பல்வேறு சந்தர்ப்பங்களில் இதே கோரிக்கையை முன்வைத்திருந்தேன். இப்போதும் மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தத்தினைச் செய்துகொள்ள வேண்டும் என்ற கோரிக்கையையே நாம் முன்வைக்கின்றோம்.

மனிதாபிமானப் பிரச்சினையில் ஒரு முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கும், பிரச்சினைக்கு உறுதியான ஒரு தீர்வைக்காண்பதற்காகவுமே சிறிலங்காவுக்கான சிறப்புத் தூதுவர் ஒருவரை எமது பிரதமர் நியமித்தார். இந்தத் தூதுவருடன் தமது அரசாங்கம் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளும் என சிறிலங்கா அரச தலைவர் முதலில் உறுதியளித்திருந்த போதிலும், அந்த நியமனத்தை சிறிலங்கா அரசாங்கம் தொடர்ச்சியாக நிராகரித்து வருவது எமக்குப் பெரும் அதிருப்தியைத்தான் ஏற்படுத்தியிருக்கின்றது.

இந்தத் தீர்மானத்தை மீளபரிசீலனை செய்யுமாறு சிறிலங்கா அரசாங்கத்தை நாம் தொடர்ந்தும் கேட்டுக்கொள்கின்றோம்.

Comments