இடம்பெயர்ந்தவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள நிலை பொருத்தமானதாக இல்லை: ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பிரதிநிதி
நான்கு நாள் பயணத்தினை மேற்கொண்டு கொழும்பு வந்துள்ள ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பிரதிநிதி வவுனியா சென்று அங்கு இடம்பெயர்ந்த மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள முகாம்களைப் பார்வையிட்ட பின்னர் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய போதே இதனைத் தெரிவித்தார்.
மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீன், தேசிய சமாதான செயலகப் பணிப்பாளர் ரஜீவ விஜயசிங்க, வவுனியா அரசாங்க அதிபர் ஆகியோர் சகிதம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெயர்ந்தவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு நேரில் பயணம் செய்த ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பிரதிநிதி அங்குள்ள நிலைமைகளை நேரில் பார்வையிட்டார்.
இடம்பெயர்ந்தவர்களின் குறைகளையும் கேட்டறிந்து கொண்டார். அதன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டார்.
இடம்பெயர்ந்து பெரும் எண்ணிக்கையில் வரும் மக்களுடைய உடனடி நிவாரணத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஐ.நா. சபை உதவிகளைச் செய்து வருவதாகத் தெரிவித்த அவர், வன்னிப் பகுதியில் தொடரும் மோதல்களுக்கு மத்தியில் பெரும் எண்ணிக்கையான மக்கள் சிக்கிக் கொண்டுள்ளனர். பலர் காயமடைந்திருக்கின்றனர் எனவும் இது தமக்கு கவலையளிப்பதாகவும் தெரிவித்தார்.
அவர் மேலும் முக்கியமாகக் குறிப்பிட்டதாவது:
இதனைவிட பெரும் எண்ணிக்கையான மக்கள் இடம்பெயர்ந்து வந்து கொண்டிருக்கின்றனர். அவர்களைப் பொறுப்பேற்று நிலைமைகளை மதிப்பீடு செய்து அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டியிருக்கின்றது. அவர்களைப் பராமரிக்க வேண்டியிருக்கின்றது.
இது விடயத்தில் நிறைய சவால்கள் இருக்கின்றன. எனவே இந்தப் பகுதிகளுக்கு நேரில் பயணம் செய்து நிலைமைகளை மதிப்பிடுவதுடன் உரிய பரிந்துரைகளைச் செய்வதுமே எனது பிரதான நோக்கமாக இருக்கின்றது. இது தொடர்பாக அரசாங்கத்துடனும் பேசியுள்ளேன்.
வவுனியாவில் இடம்பெயர்ந்த மக்களுக்கான இடைத் தங்கல் முகாம்களுக்கும் பயணம் செய்தேன். இங்கு அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றது.
அதேவேளையில் இங்குள்ள நிலைமையானது இடம்பெயர்ந்த மக்களுக்குப் பொருத்தமானதாக இல்லை. இந்த விடயங்கள் குறித்தும் அரசாங்கத்துடன் நாம் பேச்சுக்களை நடத்திக்கொண்டிருக்கின்றோம். இது விடயத்தில் உரிய தீர்மானங்களும் பரிந்துரைகளும் மேற்கொள்ளப்படும்.
இந்த மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஐ.நா. சுறுசுறுப்பாக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது எனவும் ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பிரதிநிதி தெரிவித்தார்.
Comments