இலங்கைத் தீவில் சிறிலங்கா அரசினால் முன்னெடுக்கப்படும் மனித அவலத்தை ஒபரா வின்ப்ரேயின் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றி அந்நிகழ்ச்சியில் வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு மாணவர்கள் சிலர் இந்த நடைப்பயணத்தினை கடந்த மாதம் 4 ஆம் நாள் தொடங்கியிருந்தனர்.
ஒபரா வின்ப்ரேயின் நிகழ்ச்சியில் நான் நிச்சயமாக பங்கெடுப்பேன். 1,000 கிலோ மீற்றருக்கு மேல் நடந்து வந்த எம்மைச் சந்தித்துக் கதைக்க முடியாது என்று நிச்சயமாகச் சொல்லமாட்டார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவர் ஒரு மனிதாபிமானத்தை மிகவும் நேசிக்கும் சிறந்த பெண்மணி. நாம் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்பார் என்பதில் எமக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு" இவ்வாறு சிக்காக்கோவிற்கான நடைபயணத்தில் ஈடுபட்டிருக்கும் கண்ணன் சிறீகாந்தா தெரிவித்தார்.
கடந்த மாதம் 4 ஆம் நாள் ரொறன்ரோவில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்னாள் ஐந்து மாணவர்களால் தொடங்கப்பட்ட இப் பயணம், ஒன்ராறியோ மாகாணத்தில் கடுங் குளிரையும் தாங்கிக்கொண்டு 33 நாட்களாகத் தொடர்ந்து நடைபெறுகின்றது.
நடைபயணத்தின் போது பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் உள்ளுர் முக்கிய பிரமுகர்கள் ஆகியோரைச் சந்தித்து அவர்களிற்கு இலங்கைத் தீவின் தற்போதைய நிலை தொடர்பாக தகவல்களை வழங்குகின்றனர். தங்களது பயணம் தொடர்பாக மர்லன் ராஜா விபரிக்கையில்,
நாங்கள் நடக்காது தூங்காது இருக்கும் போதும் பலதரப்பட்ட வேலைகளைச் செய்ய வேண்டியுள்ளது. எமது இணையத்தளத்தை தொடர்ந்து தகவல்களை தரவேற்றிப் பராமரிப்பது, ஊடகங்கள் மற்றும் பொது மக்களிடம் இருந்து வரும் மின்னஞ்சல்களுக்கு பதிலளிப்பது, அத்துடன் ஹார்ப்போ கலையகத்தில் உள்ள தனிப்பட்டவர்களுடன் தொடர்பு கொள்வது போன்று பலவற்றைச் செய்கிறோம் என்று தெரிவித்தார்.
இதுவரை 600 கிலோ மீற்றர்களுக்கு மேல் நடந்துள்ளோம். எமது இலக்கை அடைய இன்னும் கிட்டத்தட்ட 450 கிலோ மீற்றரளவில் நடக்க வேண்டியுள்ளது.
எனினும் இன்றைய ஈழத்தின் சூழ்நிலையை கவனத்திற்கொண்டு எவ்வளவு விரைவாகச் செல்ல முடியுமோ அவ்வளவு விரைவாக சிக்காக்கோ நகரிற்குச் செல்ல எண்ணியுள்ளோம். தேவையேற்படும் போது 24 மணிநேரமும் நடப்பதற்குத் தயாராகவுள்ளோம் என்று நடைபயணத்தில் ஈடுபட்டுள்ளவர்களில் ஒருவரான கிரிஸ் பாலசிங்கம் தெரிவித்தார்.
ஒரு நாளில் 16 மணித்தியாலங்கள் நடப்பதற்குத் திட்டமிட்டுள்ள இம் மாணவர்கள் இதன் மூலம் 60 தொடக்கம் 80 கிலோ மீற்றர்கள் நடப்பதற்கு எண்ணியுள்ளார்கள். ஏற்கனவே அரைவாசிக்கு மேற்பட்ட தூரத்தைக் கடந்துள்ள இவர்கள், மற்றையவர்களைச் சந்தித்துக் கருத்துச் சொல்வதை விடுத்துத் தனியே நடப்பதில் மட்டும் கவனமெடுப்பின் 10 நாட்களில் இலக்கை அடையமுடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இப்பயணத்தில் உள்ள கண்ணன் சிறீகாந்தா கருத்துத் தெரிவிக்கையில்,
தமிழ் மக்கள் சமாதானம் பற்றிப் பேசும் போது அது செவிடன் காதில் ஊதிய சங்குபோல் அனைத்துலக சமூகம் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் ஒபரா வின்ப்ரேயின் நிகழ்வின் ஊடாக நாம் விடுக்கவுள்ள வேண்டுகோளினை அடிவானில் தெரிவும் நம்பிக்கை நட்சத்திர ஒளியாகக் காண்கின்றனர் என்றார்.
இப் பயணம் வெற்றிபெற உலகு எல்லாம் பரந்து வாழும் தமிழ் மக்களின் ஒன்றுபட்ட ஆதரவினை இம் மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கீழே உள்ள இணைப்பின் ஊடாக உலகு எங்கும் வாழும் தமிழர்கள் மற்றும் தமிழர்கள் அல்லாத அனைவரையும் ஒபரா வின்ப்ரேயிற்கு மின்னஞ்சல் அனுப்புமாறு இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் இருந்து இதுவரை எவ்வித உறுதி மொழியும் கிடைக்காத இந்நிலையில், அனைவரும் மின்னஞ்சல் மூலம் இவர்களது குரல்களின் ஊடாக இலங்கைத் தீவில் நிலவும் மனித அவலத்தை உலகிற்கு கொண்டுவர சந்தர்ப்பம் வழங்க வேண்டும் ஒன்று ஒபரா வின்ப்ரேயிற்கு மின்னஞ்சல் அனுப்புமாறு அனைவரையும் வேண்டுகின்றனர்.
மின்னஞ்சலில் நடைப்பயணம் மேற்கொள்ளும் பின்வரும் மாணவர்களின் பெயர்களையும் இணைக்கவும்:
கண்ணன் சிறீகாந்தா (Kannan Sreekantha)
கிறிஸ் பாலசிங்கம் (Kris Balasingam)
மார்லன் இராஜா (Marlan Raja)
இறமணன் திருக்கேதீஸ்வரநாதன் (Ramanan Thirukketheeswaranathan)
விஜய் சிவநேஸ்வரன் (Vijay Sivaneswaran)
மின்னஞ்சல் இணைய இணைப்பு: https://www.oprah.com/ord/plugform.jsp?plugId=216
Comments