வன்னியில் விடுதலைப் புலிகளின் நிருவாகத்திலுள்ள பாதுகாப்பு வலயம் மீது சிறீலங்கா படையினர் தாக்குதல் நடத்த மேற்கொள்ளும் முனைப்பிற்கு எதிராக புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் கிளர்ந்தெழ வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மாத்தளன், பொக்கனை, வலைஞர்மடம், இரட்டை வாய்க்கால் போன்ற கிராமங்களை உள்ளடக்கிய பாதுகாப்பு வலயத்தில் பல இலட்சக்கணக்கான மக்கள் தங்கியிருப்பதால், படையினர் தாக்குதலைத் தொடுத்தால் இலட்சக்கணக்கில் மக்கள் உயிரிழக்க நேரிடும் எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.
பாதுகாப்பு வலயம் மீதான தாக்குதலுக்கு முன்னோடியாகவே, தமிழீழ விடுதலைப் புலிகள் இந்தப் பகுதிகளுக்குள் மக்களோடு மக்களாக ஊடுருவியிருப்பதாகவும், மக்களைக் காப்பாற்றும் நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இருப்பதாகவும் சிறீலங்கா படையினர் அனைத்துலகின் நாடிபிடிக்கும் முன்னோடி அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளனர்.
எதிர்வரும் 16ஆம் நாள் இந்திய பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையிலும், சிங்கள புத்தாண்டு நெருங்கி வருவதாலும், அதற்கு முன்னர் விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்க வேண்டும் என நினைக்கும் இந்திய, சிறீலங்கா அரசுகள் அடுத்த சில நாட்களில் பாதுகாப்பு வலயம் மீதான தாக்குதலை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளன.
இந்திய தேர்தலுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்க வேண்டும் என கொங்கிரஸ் கட்சி தலைமையிலான இந்திய அரசாங்கம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிறீலங்கா அரசுக்கு உத்தரவு பிறப்பித்திருந்ததாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன.
வன்னியில் சிறீலங்கா படையினர் மேற்கொள்ளும் தாக்குதலின் பின்னணியிலும், நேரடியாகவும் இந்திய அரசாங்கமும், படையினரும் முழு அளவில் இருப்பதாக, தமிழீழ ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் பழ.நெடுமாறனும், தமிழ் மக்களிற்கு சுய நிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்திவரும் ஒரேயொரு சிங்கள கட்சியான இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கரணாரத்னவும் ஆணித்தரமாக வலியுறுத்திக் கூறியிருந்தனர்.
இந்த நிலையில் சிறீலங்கா படையினரது தாக்குதல் முனைப்பு பற்றி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் கருத்து வெளியிட்டுள்ள பழ.நெடுமாறன், தாக்குதல் முனைப்பு உண்மையாக இருந்தால் பல்லாயிரக்கணக்கில் உயிரிழப்பு ஏற்பட நேரிடும் என்பதால், இதனைத் தடுத்து நிறுத்த உடனடியயான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், தமிழ்நாடு, மற்றும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு இது தொடர்பான தார்மீகக் கடமை இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
புலம்பெயர்ந்த தமிழர்கள் தாம் வாழும் நாடுகளின் அரசுகளுக்கு இந்தத் தகவலை உடனடியாகக் கொண்டு சென்று, சிறீலங்கா அரசு மீது அழுத்தம் பிரயோகிக்க அனைத்துலக சமூகத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் பழ.நெடுமாறன் அழைப்பு விடுத்துள்ளார்.
Comments