வன்னியில் படுகொலையில் உச்சம்: பிரித்தானியப் பாராளுமன்றம் தமிழர்களால் முற்றுகை!

நீண்ட விடுப்பின் பின்னர் பிரித்தானியப் பாராளுமன்ற அமர்வுகள் இன்று ஆரம்பமாகின்றன. அவ்வேளையில் வன்னி நிலவரம் குறித்து ஒரு காத்திரமான முடிவை பிரித்தானியப் பாராளுமன்றம்
அறிவிக்கவேண்டும் என்பதோடு , கடந்த இருவார காலமாக உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்டுவரும் திரு. பரமேஸ்வரனுக்கு தக்க பதிலை அம்மன்று தரவேண்டும் என்பதனை வலியுறுத்துமுகமாக இன்று அதிகாலை லண்டன் பாராளுமன்ற சதுக்கத்தில் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடியுள்ளனர்.
திரு. பரமேஸ்வரன் அவர்களின் உடல்நிலை தொடர்ந்தும் மோசமாகி வருகின்றது. அதேவேளை வன்னியில் மக்கள் தொடர்ந்தும் மடிந்தவண்ணம் உள்ளனர். இதனால் பெரும் கவலை அடந்துள்ள மக்கள் பிரித்தானியாவின் பலபாகங்களில் இருந்தும் லண்டனை நோக்கி வந்து திரண்டுள்ளனர். மக்கள் தொகை அதிகரிக்கவே சதுக்கத்தின் மூடிவைக்கப்பட்ட பல பகுதிகளை காவல் துறையினர் திறந்து விட்டுள்ளனர்
வன்னியில் ஒரு பெரும் மனித அவலம் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது என்ற செய்தி தற்போது வந்துள்ளது. லண்டனில் திரு. பரமேஸ்வரன் அவர்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கவென கூடியிருந்த மக்கள் வன்னியின் செய்தியை அறிந்ததும் சொல்லொணாத் துயரடைந்ததோடு , பிரித்தானிய அரசு இவ் அழிவைத்தடுக்க தனக்கே உண்டான முழுப் பலத்தையும் பிரயோகிக்க வேண்டுமெனக் கூறி , வீதி மறியலில் தற்போது இறங்கி விட்டனர். இதனால் லண்டனின் மையப்பகுதி போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
வன்னியின் இச்செய்திகேட்டு கண்ணீர் விட்டு அழும் அம்மக்கள் லண்டனில் உள்ள அனைத்து தழிழரும் அங்கு வந்து தம்மோடு இணையுமாறு அழைக்கின்றனர். நிலைமையை நன்கு உணர்ந்த காவல் துறையினர் ஒருவகை மென் போக்கையே கடைப்பிடிக்கின்றனர். இதுவரை கலகமடக்கும் காவல் அணியினர் அழைக்கப்படவில்லை.

ஆனாலும் வன்னியின் தெருக்களில் எம் உறவுகளின் பிணங்கள் வீழ்வது தடுக்கப்படும் வரை தாம் லண்டன் வீதிகளில் அமர்ந்திருக்கப் போவதாக குறிப்பிடும் மக்கள் உறவுகள் அனைவரையும் அங்கு அழைக்கின்றனர்
அதே வேளை திரு. பரமேஸ்வரன் அவர்களை , இப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருமாறு பிரித்தானிய காவல் துறை உயர் அதிகாரிகள் அடங்களாக பல்வேறு தரப்பினரால் வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகின்றது. ஆனாலும் வன்னியில் போர்நிறுத்தம் ஒன்றிற்கான காத்திரமான உத்தரவாதம் ஒன்றைப் பெறாமல் தமது போராட்டத்தை கைவிடப்போவதில்லை என பரமேஸ்வரன் கூறிவிட்டார். பரமேஸ்வரன் தனது இறுதி ஆசையாக பிரித்தானியாவில் வாழும் மூன்று லட்சம் தழிழ் உறவுகளை தன் அருகே கூடுமாறு ஏலவே அழைத்திருந்தமை குறுப்பிடத்தக்கது.

அதேவேளை வீதிகளில் மக்கள் வெள்ளம் அதிகரிக்க தொடங்க தம்மை நோக்கி சர்வதேச ஊடகங்களும் , அரசியல் பிரமுகர்களும் வர ஆரம்பித்துள்ளதாக குறிப்பிடும் மக்கள் தாம் தொடர்ந்தும் விழித்திருந்து போராடப்போவதாகக் கூறுகின்றனர்.

Comments