நான்கு முனைத் தாக்குதலுக்குள் 'மக்கள் பாதுகாப்பு வலயம்': இரத்தக் களரியைப் பார்த்துக்கொண்டிருக்கும் அனைத்துலக சமூகம்
விடுதலைப் புலிகளின் முக்கிய கோட்டையாகக் கருதப்பட்ட புதுக்குடியிருப்புக்கு கிழக்கே உள்ள ஆனந்தபுரம், பச்சைப்புல்மோட்டை ஆகிய பகுதிகளில் கடந்த வாரத்தில் இடம்பெற்ற மிகவும் கொடூரமான மோதல்களைத் தொடர்ந்து 'மக்கள் பாதுகாப்பு வலயம்' என அறிவிக்கப்பட்ட பகுதிகளைச் சுற்றிவளைத்துக்கொண்டுள்ள சிறிலங்கா இராணுவத்தின் ஐந்து படையணிகள் அதன் மீது நான்கு முனைகளில் கடும் தாக்குதலை தொடங்கியிருக்கின்றது.
சுமார் மூன்று லட்சம் மக்கள் இருப்பதாகக் கருதப்படும் பாதுகாப்பு வலயத்தின் மீதான தாக்குதலைத் தவிர்க்குமாறு ஐ.நா. சபை உட்பட இணைத் தலைமை நாடுகள், அமெரிக்கா, பிரித்தானியா, கனடா என உலகம் முழுவதிலும் இருந்தும் கோரிக்கைகள் விடுக்கப்பட்ட நிலைமையில் அவை அனைத்தையும் புறக்கணித்துவிட்டு இந்தத் தாக்குதலை சிறிலங்கா படையினர் நேற்று முன்நாள் வெள்ளிக்கிழமை தொடங்கியிருப்பதாக படை நடவடிக்கைகளுக்கான தலைமையகம் அறிவித்திருக்கின்றது.
நான்கு முனைகளில் படையினர் தாக்குதல் நடவடிக்கைகளை தொடங்கியிருப்பதாகவும் கடும் மழைக்கு மத்தியிலும் தீவிரமான மோதல்கள் இடம்பெற்று வருவதாகவும் களமுனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
'பாதுகாப்பு வலய' பகுதியில் போர் நடைபெறாத நிலையிலேயே இந்தப் பகுதி மீது படையினர் தொடர்ச்சியாக எறிகணைத் தாக்குதலை நடத்தி வந்திருக்கின்றனர்.
நாளாந்தம் 50 முதல் 60 போர் வரையில் கொல்லப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பாதுகாப்பு வலயத்தின் மீது தாக்குதலை நடத்தி அதற்குள் பிரவேசிப்பதற்கு படையினர் முற்பட்டுள்ள இந்நிலையில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 800ஐ தாண்டிச் சென்றுள்ளது.
கடந்த வியாழக்கிழமை 350 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ள அதேவேளையில், நேற்று முன்நாளும் சுமார் 300 பேர் கொல்லப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள், 'பாதுகாப்பு வலய' பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கின்றனர் என்ற செய்தியை தெளிவாகக் காட்டியிருக்கின்றது.
முல்லைத்தீவின் கடற்கரைப் பகுதியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 12 மைல் நீளமான பகுதியே சிறிலங்கா அரசாங்கத்தினால் மக்கள் பாதுகாப்பு வலயமாக மூன்று மாதங்களுக்கு முன்னர் பிரகடனம் செய்யப்பட்டது.
புதுமாத்தளன், அம்பலவன்பொக்கனை, வலைஞர்மடம், கரைய முள்ளிவாய்க்கால், வெள்ள முள்ளிவாய்க்கால் போன்ற பகுதிகள் இதற்குள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
போர் சூனியப் பகுதியாக இந்தப் பகுதியை அரசாங்கம் அறிவித்ததை நம்பி பெருந்தொகையான பொதுமக்கள் இதற்குள் வந்த போதிலும், தொடர்ச்சியான எறிகணைத்தாக்குதல்களால் இந்தப் பாதுகாப்பு வலயம் கடந்த மூன்று மாத காலமாக இரத்தக்களரியாகவே காணப்படுகின்றது.
இப்பகுதியில் செயற்படும் மருத்துவமனைகளில் இருந்து கிடைத்துள்ள தகவல்களின்படி ஜனவரி மாதத்துக்குப் பின்னரான கடந்த சுமார் மூன்றரை மாத காலப்பகுதியில் இங்கு சுமார் 5 ஆயிரம் அப்பாவித் தமிழர்கள் கோரமாகக் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
மேலும் 8 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்திருக்கின்றனர். இதில் பலர் உடல் ஊனமடைந்து எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கியிருக்கின்றனர்.
மக்கள் வாழ்வதற்குத் தேவையான எந்தவித அடிப்படை வசதிகளையும் கொண்டிராத இந்தக் கடற்கரைப் பகுதியில் எறிகணைத் தாக்குதல்களில் இருந்து தப்பித்துக்கொள்வதற்குத் தேவையான பதுங்குகுழிகளைக் கூட அமைக்க போதிய வசதிகள் இல்லை. படுகாயமடைந்தவர்களைப் பாதுகாக்க தேவையான மருந்துகளோ அல்லது மருத்துவமனை வசதிகளோ இல்லை.
இந்நிலையில் பாதுகாப்பு வலயத்தை நான்கு முனைகளில் சுற்றிவளைத்து சிறிலங்கா படையினர் தாக்குதலை நடத்தத் தொடங்கியிருப்பது பாரிய ஒரு மனிதப் பேரவலத்துக்கு வழிவகுப்பதாக அமையும் என அனைத்துலக ரீதியாக ஒலிக்கும் குரல்களையிட்டு எந்தவகையிலும் கவனத்தைச் செலுத்துவதற்கு மகிந்த ராஜபக்ச அரசு தயாராக இல்லை என்பது தெரிகின்றது.
மகிந்த அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் எதிர்வரும் 14 ஆம் நாள் பிறக்கவிருக்கும் புத்தாண்டுக்கு முன்னதாக நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட வேண்டும்.
புத்தாண்டு பிறக்கும்போது நாடு ஓரே குடையின்கீழ் கொண்டுவரப்பட்டிருக்கும் என ஆளும் கட்சியின் பிரமுகர்கள் தெரிவித்து வருகின்றனா்.
அத்துடன், இம்மாத இறுதியில் நடைபெறவிருக்கும் மேல்மாகாண சபைத் தேர்தலின் வெற்றிக்கும் போர்முனைச் செய்திகளைத்தான் அரசாங்கம் பெரிதாக நம்பியிருக்கின்றது.
இந்நிலையில்தான் சிறிலரங்காவின் பலம் வாய்ந்த படைப்பிரிவுகளாகக் கருதப்படும் 53, 55, 58 மற்றும் 59 ஆவது படைப்பிரிவுகளுடன் இணைந்து 8 ஆவது சிறப்பு படைப்பிரிவும் இந்த பாரிய தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு வலயத்தின் கிழக்குப் பகுதி முழுமையாகக் கடலால் சூழப்பட்டுள்ளது. இந்தப் பகுதியிலும் பாதுகாப்புக்காக கடற்படைக் கப்பல்கள் பெருமளவுக்கு நிறுத்தப்பட்டுள்ளன.
பாதுகாப்பு வலயத்தின் வடக்குப் பகுதியில் 55 ஆவது படைப் பிரிவும், மேற்கில் நந்திக் கடலை அடுத்துள்ள பகுதிகளில் 55, 58 ஆவது படைப்பிரிவுகளுடன் 8 ஆவது சிறப்பு படைப்பிரிவும், பாதுகாப்பு வலயத்தின் தென்பகுதியில் 59 ஆவது படைப் பிரிவும் நிறுத்தப்பட்டுள்ளன.
பெருமளவு படையினர் இப்பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள அதேவேளையில், பாரிய கனரக ஆயுதங்கள், தாங்கிகள், பல்குழல் தாங்கிகள் என பெருமளவு ஆயுதங்களும் இராணுவ வாகனங்களும் இந்தப் பகுதியை நோக்கி நகர்த்தப்பட்டு தாக்குதல் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டிருப்பதால் பாரிய அனர்த்தங்களுக்கு வாய்புள்ளதாக மனிதாபிமான அமைப்புக்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றன.
தற்போதுள்ள நிலையில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் மட்டும்தான் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட வசதிகளுடன் இப்பகுதியில் செயற்பட்டு வருவதால் உருவாகக்கூடிய அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கும் அவர்கள் முழுமையாகத் தயாரில்லை என்றுதான் கூற வேண்டும்.
செஞ்சிலுவைச் சங்கத்தின் பணியாளர்களில் இருவர் அண்மைக்காலங்களில் 'பாதுகாப்பு வலய' பகுதியில் மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தமை கவனிக்கத்தக்கது.
இந்நிலையில் அனைத்துலகத்தில் இருந்து வரக்கூடிய பாரிய கண்டனங்களைச் சமாளிப்பதற்கான ஒரு முயற்சியாக தனது இந்த இராணுவ நடவடிக்கையை ஒரு பாரிய மனிதாபிமான நடவடிக்கையாகக் காட்டிக்கொள்வதற்கே சிறிலங்கா அரசாங்கம் முற்படுகின்றது.
மக்களை மீட்பதற்கான மிகப்பெரிய மனிதாபிமான நடவடிக்கை தொடங்கியிருக்கின்றது என்றே இது தொடர்பாக நேற்று முன்நாள் வெளியிட்ட அறிக்கையில் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்திருக்கின்றது.
படையினர் மேற்கொண்டிருக்கும் மனிதாபிமான நடவடிக்கையின் இறுதிக்கட்டம் தொடங்கிவிட்டது எனவும் பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களை விடுவிப்பதற்கான தாக்குதல் நடவடிக்கையை படையினர் தொடங்கியுள்ளனர் எனவும் பாதுகாப்பு அமைச்சின் நேற்று முன்நாள் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பாதுகாப்பு வலயத்தின் மேற்குப் பகுதியில் உள்ள அம்பலவன்பொக்கனைக்கு அருகில் சென்றுள்ள 58 ஆவது படைப்பிரிவினர் அம்பலவன்பொக்களைக்குள் பிரவேசிப்பதற்கான பாரிய தாக்குதல் நடவடிக்கை ஒன்றை நேற்று முன்நாள் வெள்ளிக்கிழமை அதிகாலையில் தொடங்கிய போது விடுதலைப் புலிகள் கடுமையான எதிர்த் தாக்குதலை நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று முன்நாள் அதிகாலை முதல் இப்பகுதியில் கடும் மோதல் இடம்பெற்ற போதிலும், படையினரால் மேற்கொண்டு முன்னேற முடியவில்லை என களமுனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விடுதலைப் புலிகளின் கடுமையான முறியடிப்புத் தாக்குதல்களால் படையினர் தரப்பில் பாரிய உயிரழப்புக்கள் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளையில் விடுதலைப் புலிகள் தரப்பிலும் பலர் கொல்லப்பட்டிருப்பதாக இராணுவத் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் புத்தாண்டு பிறப்பதற்கு முன்னர் இப்பகுதியையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விட வேண்டும் என சிறிலங்கா அரசாங்கம் சபதம் எடுத்திருப்பதால் அடுத்து வரும் நாட்களில் தாக்குதல்கள் மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கலாம்.
அப்பாவிப் பொதுமக்கள் இதில் கொல்லப்படுவார்கள் எனபதைத் தெரிந்திருந்தும் ஒன்றுமே செய்ய முடியாமல் அனைத்துலக சமூகம் இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கப்போகின்றதா என்பதுதான் இன்று எழும் கேள்வி!.
புலம்பெயர்ந்த தமிழர்கள் மேற்கொண்டு வரும் போராட்டங்கள் மேற்குலக நாடுகளின் மனச்சாட்சியை பெருமளவுக்குத் தொட்டிருக்கின்ற போதிலும் அவர்கள் எதனையும் செய்ய முடியாதவர்களாகவே இருக்கின்றனர்.
Comments