கடந்த 03.02.2009 ஆம் நாள் சென்னை மேடவாக்கம் காயிதே மில்லத் கல்லூரியில், தமிழ்த்துறைத் தலைவவர் பேரா. சே.மு. முகமது தலைமையில் தமிழ் மன்றம் தொடக்கவிழா நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேரா. சுப. வீரபாண்டியன் நிறைவுரை ஆற்றினார். அந்நிறைவுரையின் ஒரு பகுதி வருமாறு:
ஒரு காலிக் குவளையின் பயன்பாடு, அதிலிருக்கும் வெற்றிடத்தைப் பொறுத்தே அமையும். நிரம்பி இருக்கும் குவளையால் எந்தப் பயனும் இல்லை. அதில் எதையும் ஊற்றமுடியாது; ஊற்றினால் கீழே வழியும். மாணவர்களின் பயன்பாடும் அப்படித்தான். மாணவர்கள் என்பவர்கள் நிரப்பப்படாத குவளை; எழுதப்படாத பலகை; கட்டப்படாத செங்கல். குவளையை எப்படி நிரப்புவது? எதனால் நிரப்புவது?
‘நேற்று’ என்பது முடிந்த நிலை. ‘நாளை’ என்பது தெரியாத நிலை. ‘இன்று’ என்பதுதான் இங்கு முக்கியம். மூடத்தனங்களுக்கு முடிவு கட்டுவோம் என்று பேசிய மாணவர்கள், இங்கே வாஸ்து சாஸ்திரங்கள், சோதிடங்களைப்பற்றி எல்லாம் மிக அருமையாகப் பேசினார்கள். நாம் இன்றும் பார்க்கிறோம், காலையில் எழுந்து நாளிதழைப் பார்ப்பவர்களில் பலர் தினப்பலன்களைப் பார்ப்பார்கள். அதில் ஒரு திருப்தி அவர்களுக்கு. ராசி பலனில் 12 ராசிகளின் பெயர்கள் இருக்கும். ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு பலன். துன்பமில்லாத மனிதன் யாரும் இருக்கமாட்டான். ஆகவே அதுபற்றி இரண்டு மூன்று வரிகளைப் போட்டுவிட்டு, இறுதியில் ‘திருப்தியான நாள்’ ‘திருப்திகரமான வாரம்’ ‘மகிழ்ச்சியான நாள்’ ‘மகிழ்ச்சிகரமான வாரம்’ - இப்படி முடிக்கப்பட்டிருக்கும். அதே ராசி பலன்களை மறுநாளோ அல்லது அதற்கடுத்த நாளோ பார்த்தால், அதே செய்திகள் அப்படியே வேறு வேறு ராசியின் பெயர்களுக்கு இடம் மாறி இருக்கும். இப்படிப்பட்ட மூடத்தனங்களைச் சுட்டிக்காட்டிய மாணவர்கள் ‘இன்னுமா உறக்கம்’ என்று நெகிழவைக்கும் கவிதைகளையும் பாடினார்கள். ஈழ மக்களின் துடிப்பும், உணர்வும் இன்று மாணவர்களிடையே ஓர் எழுச்சியைத் தருகிறது என்பதை, இன்னுமா உறக்கம் கவிதைகளில் பார்க்கிறேன். இன்று உங்களைப் போல, அன்று நாங்கள் மாணவர்கள். அன்று இந்தியைத் திணித்தார்கள். அதற்கு எதிராக எழுந்தது மாணவர்களின் எழுச்சி. இன்று ஈழத்தில் தமிழினமே அழிந்து கொண்டு இருக்கிறது. இதற்காகவும் இன்று மாணவர்கள் தம் எதிர்ப்பை எழுச்சியுடன் காட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.
உங்களுக்கெல்லாம் தெரியும். சுப்பிரமணியசாமி உயர்நீதிமன்றத்திற்கு வந்த போது அவர் மீது முட்டை வீசப்பட்டது. என்ன ஆயிற்று? தேசமே பதறிப்போய் விட்டது. பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டன. தலையங்கங்கள் தீட்டின. தொலைக்காட்சி ஊடகங்கள் எல்லாம் பெரிய அளவில் அதைக் காட்டின. அதை விசாரிக்க 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் அமைக்கப்பட்டுள்ளது. முட்டை வீசியதற்கா 5 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் விசாரணை? வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் பகத்சிங் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார். பகத்சிங்கின் அமைப்பைச் சேர்ந்த ஜெயபால் வர்மா அப்ரூவராக மாறி அதே நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு நிறுத்தப்படுகிறான். அப்போது, அந்த நீதிமன்றத்தில் நீதிபதி முன்பாகவே, அப்ரூவர் ஜெயபால் வர்மா மீது தன்காலில் கிடந்த செருப்பை எடுத்து வீசுகிறார் பகத்சிங்கின் நண்பர். நீதிபதி அதிர்ச்சியானாலும் கூட நீதிமன்றத்தில் தன் எதிரே செருப்பு வீசியவனுக்கு அவர்கொடுத்த கூடுதல் தண்டனை இரண்டுமாதம் சிறை, அவ்வளவுதான்.
நீங்கள் எல்லோரும் பார்த்திருப்பீர்கள் தொலைக்காட்சியில். ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின் போது, அமெரிக்க வல்லரசின் அதிபர் ஜார்ஜ் புஷ் மீது ஓர் ஈராக் பத்திரிகையாளர் தன் இரண்டு காலணிகளையும் வீசி எறிகிறார். அப்படி இருக்க இந்த சுப்பிரமணியசாமி மீது முட்டையை வீசியதற்காக 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் அமைக்கப்பட்டது வியப்பாக அல்லவா இருக்கிறது. முட்டை வீசியதால் சாமியின் உயிர் போய்விட்டதா என்ன? இதைப் பெரிதுபடுத்திச் செய்தி வெளியிடும் ஊடகங்கள், உயிரைப் பணயமாக வைத்து ஈழத்துயரைத் துடைக்கக் கோரி உண்ணாநிலை இருக்கும் மாணவர்களின் எழுச்சியை, போராட்டத்தை பெரிய அளவில் வெளியிடுகின்றனவா என்றால் இல்லை!
இங்கே பக்கத்தில் எஸ்.ஆர்.எம் கல்லூரி மாணவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கிறார்கள். ஐந்தாம் நாளாக உண்ணாநிலையைத் தொடர்கிறார்கள். அவர்கள் தண்ணீர் கூட அருந்தாமல் தெருவில் துவண்டுபோய்க் கிடக்கிறார்கள். திருச்சி, செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் இதே போல உண்ணாநிலை இருந்தார்கள். உண்ணாமல் இருந்து உயிரை மாய்த்துக் கொள்வதில் நான் உடன்பாடுடையவன் அல்ல. ஆனால், சாகும்வரை அதுவும் நீர்கூட அருந்தாமல் உண்ணாநிலை இருப்பது என்பது சாதாரணமானது அல்ல.
ஒரு செய்தியைச் சொல்கிறேன். அன்று 64 நாட்கள் உணவு உண்ணாமல் உண்ணாநிலை இருந்து உயிர்நீத்தான் ஜதீந்திரநாத்தாஸ். தமிழ்நாட்டிற்குத் ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்ட வேண்டி 50 நாட்களுக்குமேல் உண்ணாநிலை இருந்து உயிர்நீத்தார் சங்கரலிங்கனார். அதேபோல் ஈழத்தில் திலீபன். அவரும் ஒரு மருத்துவக்கல்லூரி மாணவர்தான். ஈழமக்களுக்காக, ஈழ மண்ணுக்காக 1987 செப்டம்பர் 15 ஆம் நாள் தொடங்கி செப்டம்பர் 26 வரை 11 நாட்கள் உண்ணாமல், நீரும் அருந்தாமல் உயிர் விட்டவன் திலீபன். திலீபன் 6 அடி உயரமுள்ள நல்ல உடல்வாகுள்ளவன். உண்ணாவிரதம் என்றால் தண்ணீர் மட்டும் குடித்துக் கொண்டு உணவு உண்ணாமல் இருப்பது. ஆனால் தண்ணீரும் அற்றுத் தொண்டை வரண்டு, நாக்குத் தடித்து நாடி ஒடுங்கி, வதங்கி வாழ்க்கையின் இறுதிக்குச் செல்வது என்பது வேறு. காந்திகூடத் தண்ணீர் குடித்துத்தான் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார். ஆனால் திலீபன், அதுவும் இல்லாமல் இருந்ததால் 6 அடி உயரமான அவரின் உருவம் குறுகி, உடல் மெலிந்து மரணத்தைத் தழுவி இருக்கிற செய்தி உள்ளத்தை உறைய வைக்கும் செய்தியல்லவா!
அதுபோலத்தான் இங்கே எஸ்.ஆர்.எம் கல்லூரி மாணவர்களும், செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர்களும் துவண்டு கிடந்தார்கள். தண்ணீர்கூட அவர்கள் குடிக்கவில்லை. தண்ணீர் குடிக்கவில்லை என்றால், சிறுநீரகம் பாதிக்கும். உண்ணாநிலை முடிந்தபிறகும் கூட சிறுநீரகப் பாதிப்பை சரிசெய்வதற்கு நெடுநாள் ஆகும். அப்படி ஒரு நிலை வேண்டாம் என்று அந்த மாணவச் செல்வங்களை என்போன்றோர் கேட்டுக்கொண்டும் கூட அந்தச் செல்வங்கள் தன் இனத்திற்காக, தன் இன மக்கள் கொல்லப்படுவதைத் தடுப்பதற்காகத் தொடர்ந்து தங்களது உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
அங்கே ஈழத்தில் நடைபெறும் தமிழ்மக்கள் மீதான இனப்படுகொலை பற்றி எல்லோருக்கும் தெரியும். அதில் இன்னொரு செய்தி இருக்கிறது. வியட்நாம் மீது அமெரிக்கா வீசிய குண்டு கிளஸ்ட்டர் பாம் அதாவது கொத்தணிக் குண்டுகள் எனப்படும். அந்தக் குண்டுகள் விழுந்தவுடன் வெடிக்கும். சிலகுண்டுகள் 6 மாதமோ ஓர் ஆண்டுக்குப் பிறகோ கூட வெடிக்கும்.
மூன்று ஆண்டுகள் கழித்தும் கூட வெடித்ததாகச் செய்தி இருக்கிறது. மேலும் அங்கே பாஸ்பரஸ் குண்டுகள் வீசப்படுகின்றன. அந்தக் குண்டுகள் விழுந்தவுடன் தீப்பற்றி எரியும். மரம் செடி கொடிகள் கூட எரிந்து கருகும். மனிதர்களின் உடல் பற்றி எரிந்து தோல் சுருங்கிக் கருகும்.
அப்படிப்பட்ட குண்டுகளை ஈழத்தில் மக்கள் மீது வீசுகிறது சிங்கள இராணுவம். ஏடு இல்லாமல், ஓடும் இல்லாமல் மரத்தடிப் பள்ளிகளில் படிக்கும் சின்னஞ்சிறு குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள், ஆண்கள், பெண்கள் என்று அனைவருமே அந்தக் குண்டுகளால் எரிந்து சிதைந்துவிடும் கொடுமை இப்பொழுதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
அத்தகைய இன அழிப்புக்கு எதிராக ஓர் எழுச்சியை, ஓர் அசைவை மாணவர்களாகிய நீங்கள் இன்று உருவாக்கிக் கொண்டு இருக்கிறீர்கள். வாழ்த்தி விடைபெறுகிறேன்.
சுப.வீரபாண்டியன்

Comments