2005 டிசம்பரில் பதவிக்கு வந்த ராஜபக்ச அரசால் ஒஸ்லோவில் இணைத் தலைமை நாடுகளுக்கு கையளிக்கப்பட்ட 5 ஆண்டுகளில் புலிகளை துடைத்தழிக்கும் திட்டமே புரஜக்ற் பிக்கன்.
பாதுகாப்பு அமைச்சுச் செயலர் கோதபாய ராஜபக்சவாலும் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவாலும் வடிவமைக்கப்பட்ட இந்த இராணுவத் திட்டத்தின் மூன்றாவது வருட நடவடிக்கை இவ்வாண்டு ஏப்ரல் 31ல் முடிவுக்கு வருகிறது. இந்த புரஜக்ற் பீக்கன் திட்டத்தின் பின்னால் இந்தியாவின் பங்களிப்பு இல்லையென்று சொல்வது அர்த்தமற்றவாதம்.
ஆனால் இவ்வாறான ஒரு திட்டம் இலங்கை அரசால் இணைத்தலைமை நாடுகளுக்குவழங்கப்பட்டு அவர்களின் ஆசீர்வாதம் பெறப்பட்டதா என பிரித்தானியாவில் உள்ள இலங்கைத் தூதரிடம் கேட்டபோது அவ்வாறான ஒரு திட்டம் பற்றி தான் அறிந்திருக்கவில்லை என அவர் தெரிவித்தார்.இந்தத் திட்டத்தை நிறைவேற்ற மகிந்த அரசு எவ்வித அரசியல் தலையீடும் ஏற்படுத்தப்பட மாட்டாது என்பதையும் இராணுவத்திற்கான முழுமையான ஒத்துழைப்பையும் உறுதிப்படுத்தியது. பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் கோதபாய ராஜபக்சவும் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் முடிவுகளை சுதந்திரமாக எடுக்க முடிந்தது. இந்தியாவின் இராணுவ ஒத்துழைப்பும் அவர்களுக்கு இருந்தது..
புரஜக்ற் பீக்கன் திட்டத்திற்கு ஆரம்பத்தில் இணைத் தலைமை நாடுகள் அச்சத்துடனேயே தங்கள் ஆதரவை வழங்கி இருந்தனர். குறித்த காலப்பகுதியில் ஒவ்வொரு இலக்கும் அடையப்பட வேண்டும் என்பதை இணைத்தலைமை நாடுகள் வலியுறுத்தி இருந்தன. இத்திட்டத்தின் முதலாவது ஆண்டின் வெற்றி இணைத் தலைமை நாடுகளுக்கு இலங்கை அரசாங்கத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி இருந்தது.
புரஜக்ற் பீக்கன் இராணுவத் திட்டப்படி புலிகளின் கரையோரக் கட்டுப்பாட்டுப் பகுதி 3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு அவற்றை ஒவ்வொன்றாகக் கைப்பற்ற தீர்மானிக்கப்பட்டது. அதன் படி ஒவ்வொரு பிரிவையும் கைப்பற்ற இலங்கை அரசு 12 மாதங்களாக மூன்று ஆண்டுகளுக்குள் புலிகளின் நிலப் பரப்பைக் கைப்பற்ற திட்டம் இட்டது.
01 மே 2006 - 30 ஏப்ரல் 2007 திருகோணமலையின் சம்பூர் முதல் மட்டக்களப்பின் பனிச்சங்கேணி வரையான கiயோரப் பகுதியையும் அதனோடு இணைந்த நிலப்பகுதிகளையும் கைப்பற்றுவது.
01 மே 2007 - 30 ஏப்ரல் 2008 மன்னார் முதல் பூனேரியன் வரையான கரையோரப் பகுதியையும் அதனோடு இணைந்த நிலப்பரப்பையும் கைப்பற்றுவது.
01 மே 2008 - 30 ஏப்ரல் 2009 ஆனையிறவு முதல் கொக்குத்தொடுவாய் வரையான கரையோரப் பகுதியையும் அதனோடு இணைந்த நிலப்பகுதியையும் கைப்பற்றுவது.
புலிகளின் கட்டுப்பாட்டை கைப்பற்றும் இந்த திட்டங்களின் படி புலிகளுக்கான ஆயுதங்கள் தரையிறக்கப்படும் விநியோக வழிகளை கட்டுப்படுத்த புரஜகற் பீக்கன் திட்டமிட்டது. அதன்படி அம்பாறை, சிலாவத்துறை, புல்மோட்டை மற்றும் பருத்தித்துறை ஆகிய பகுதிகள் இந்த மூன்றாண்டு திட்டத்தில் கைப்பற்றுவது முக்கிய இலக்குகளாக அமைந்தது.
01 மே 2009 - 30 ஏப்ரல் 2011 காலப் பகுதி புலிகளை களையெடுக்கும் காலப் பகுதியாக அமையும். தங்களுக்கான விநியோகங்கள் இல்லாத நிலையில் வன்னி காடுகளுக்குள் உள்ள புலிகளை களையெடுக்கும் காலப் பகுதியாக இது அமையும். ஏப்ரல் 2011க்கு அண்மையாகவே மகிந்த ராஜபக்ச அரசின் முதலாவது ஆட்சிக்காலம் நிறைவு பெற்று பொதுத் தேர்தல் இடம்பெற வேண்டிய காலப்பகுதியாகும்.
01 மே 2006 - 30 ஏப்ரல் 2007 வரையான முதலாவது ஆண்டு காலப்பகுதி இலங்கை அரசுக்கு மிகுந்த வெற்றியை ஏற்படுத்தியது. சம்பூரில் 25 ஏப்ரல் முதலாவது விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது. அப்பகுதி முழுமையும் 30 ஏப்ரல் 2007ல் இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. இணைத் தலைமை நாடுகள் இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகள் சில அரச சார்பற்ற நிறுவனங்களும் இலங்கை அரசைப் பாராட்டின. தூதரகங்கள் இராணுவ வெற்றிக்கு பாராட்டுச் செய்திகளை வெளியிட்டன. இந்த வெற்றியானது புரஜகற் பீக்கன் திட்டத்திற்கான ஆதரவை மேலும் பலப்படுத்தியது.
முதற்கட்டத்தை முடித்துக் கொண்ட புரஜக்ற் பீக்கன் 2வது கட்டம் மன்னார் - வவுனியா முனையில் 25 ஏப்ரல் 2007ல் ஆரம்பமாகியது. 24 ஏப்ரல் 2008ல் மது தேவாலயப் பகுதியையும் 08 மே 2008ல் அடம்பனையும் இராணுவம் கைப்பற்றியது. புலிகள் பெரும்பாலும் மக்களுடன் பின்வாங்கினர்.
புரஜக்ற் பீக்கன் மூன்றாவதும் இறுதியான புலிகளின் நிலப்பரப்பைக் கைப்பற்றும் யுத்தத்தில் ஜனவரி 3ல் புலிகளின் நிர்வாகத் தலைநகரான கிளிநொச்சி இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதுவரை சர்வதேச அபிப்பிராயங்கள் அனைத்தையும் இலங்கை அரசு தக்க வைத்துக் கொண்டது.அதிக உயிரிழப்புகளே ஜனவரி பிற்பகுதி வரையான புரஜக்ற் பீக்கன் நடவடிக்கைகளில் ஏற்பட்டது.
ஜனவரி பிற்பகுதி முதல் இந்த குறுகிய நிலப்பரப்பைக் கைப்பற்ற இராணுவம் தீவிரமான தாக்குதலை நடத்தியது.
தற்போது புலிகளின் பலத்த கோட்டையாக விளங்கிய புதுக்குடியிருப்பும் படைகளின் வசம் வீழ்ந்து உள்ளது. இரண்டு மூன்று கிராமங்கள் உள்ளடங்கிய 20க்கும் குறைவான கிலோமிற்றர் பரப்பளவே தற்போது புலிகளிடம் எஞ்சியுள்ளது.
புரஜக்ற் பீக்கன் திட்டத்தின் மூன்றாவது கட்டம் இந்தக் கடைசித் துண்டு நிலமும் இலங்கை அரச படைகளின் கட்டுப்பாட்டிற்குள் வருவதுடன் முற்றுப்பெறும். இது இன்னும் சில வாரங்களுக்குள் 30 ஏப்ரல் 2009ற்குள் சாத்தியமாகும் என்பது பெரும்பாலும் உறுதியாகி உள்ளது. இதன் போது பெப்ரவரி 2009ல் நோர்வே உட்பட இணைத் தலைமை நாடுகள் புலிகள் தங்கள் ஆயுதங்களை கைவிட்டு சரணடைய வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்திருந்தது. இவை புரஜக்ற் பீக்கன் நடவடிக்கைக்கு இணைத் தலைமை நாடுகள் அழித்த அங்கீகாரத்தை வெளிப்படையாகக் காட்டி உள்ளது.
ஆனால் அடுத்த சில தினங்கள் மிகவும் மோசமான அழிவுகளை ஏற்படுத்தும் என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது. பெரும்பாலும் வே பிரபாகரன் உட்பட விடுதலைப் புலிகளின் முக்கிய தலைமைகள் இப்பகுதிகளில் இருப்பதால் நடக்கப் போகும் யுத்தத்தில் மிகப்பெரும் மனித அவலம் ஏற்படும் அச்சம் ஏற்பட்டு உள்ளது.
பெரும்பாலும் இந்த யுத்தத்தை வென்றுள்ள இலங்கை அரசு எந்த ஒரு சமாதான முயற்சிக்கும் பேச்சுவார்த்தைக்கும் உடன்படாது என்பது தெட்டத் தெளிவாகி உள்ளது. புலிகளை அழிப்பதில் தமிழ் மக்கள் கொல்லப்படுவது சர்வதேச சமூகத்தின் எதிர்ப்பைக் கொண்டு வரும் என்பதைத் தவிர இலங்கை அரசு அப்பாவித் தமிழ் மக்களைப் பலி கொடுத்து தனது இலக்கை அடைவதில் எவ்வித தயக்கமும் காட்டாது.
ஜனவரி இறுதி முதல் மரண வதைக்குள் சிக்குண்டுள்ள வன்னி மக்களுக்கு அடுத்து வரும் நாட்கள் மிக மிகக் கொடுமையானதாக அமைய உள்ளது. புலிகளின் கட்டுப்பாட்டில்உள்ள இளம்பராயத்தினர் குறுகிய கட்டாய பயிற்சியின் பின் களமுனைக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.
இந்த அவலங்களைத் தடுத்து நிறுத்துவதற்கான காலங்கள் இழக்கப்பட்டுக் கொண்டே வருகின்றது. இனவாத அலையிலும் புலி ஆதரவு - புலி எதிர்ப்பு அலையிலும் மனிதம் அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
புரஜக்ற் பீக்கன் திட்டத்தை புலிகளும் நன்கு அறிந்தே இருந்தனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இந்திய ஆதரவுடன் இலங்கை அரசு புலிகள் மீது இராணுவ நடவடிக்கையொன்றை மேற்கொள்ள இருப்பதை கிழக்கு விடுவிக்கப்பட்டதன் பின்னர் அறிந்தே இருந்தனர்.
தமிழ் மக்களது நியாயமான அரசியல் போராட்டம் இன்று சிதைத்து தன்னழிவை நோக்கித் தள்ளப்பட்டு கொண்டிருக்கின்றதா?. அதற்கான விலையை ஒட்டுமொத்த இலங்கைத் தமிழ் சமூகமும் செலுத்த வேண்டியுள்ளது.
Comments