சோனியா காந்தி வெளியிட்டது கருணாநிதி எழுதிக் கொடுத்த கடிதம்: வைகோ

இலங்கை பிரச்சனை தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி வெளியிட்ட கடிதம், கருணாநிதி எழுதிக் கொடுத்தது என்று குற்றம் சாட்டியுள்ள ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மத்தியில் ஆட்சியமைக்கப் போவது யார் என்பதை அதிமுக தீர்மானிக்கும் என்றார்.

சென்னை தீவுத்திடலில் நடந்த அதிமுக கூட்டணிக் கட்சிகள் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது:

இந்தியாவில் இனி எந்த கட்சியும் ஏகபோக உரிமை கொண்டாட முடியாது. இந்தியாவில் ஒரு கட்சி ஆட்சி என்பதே இனி கிடையாது. மாநில கட்சிகள் இந்தியாவின் அரசியல் அதிகாரத்தை தீர்மானிக்கும் கட்டம் வந்துவிட்டது. மத்தியில் ஆட்சி அமைக்கப் போவது யார் என்பதை அ,தி.மு.க. தீர்மானிக்கும்.

இலங்கையில் போர் நிறுத்தம் செய்ததாக ராஜபக்ச மக்களை ஏமாற்றினார். இலங்கையில் தொடர்ந்து தமிழர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.

இலங்கையில் தமிழர்களை கொல்லும்படி ஆயுதம் கொடுத்தது இந்திய அரசு, வட்டியில்லா கடன் கொடுத்தது. இந்திய அரசு. இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் என்று அ.தி.மு.க ஆட்சி காலத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இந்த தீர்மானத்தை மத்திய அரசு குப்பை தொட்டியில் தூக்கி வீசிவிட்டது. இந்த நிமிடம் வரை மத்திய அரசு இலங்கை அரசிடம் போர் நிறுத்தம் செய்யும்படி இந்திய அரசு கேட்கவே இல்லை.

திருமங்கலம் இடைதேர்தலில் பயன்படுத்தியது போல் ஒரு ஓட்டுக்கு 2 ஆயிரம் 4 ஆயிரம் கொடுத்து வெற்றி பெற்றுவிடலாம் என்று நினைக்கிறார்கள். அவர்கள் கொடுக்க நினைப்பது பணம்; ஆனால் விழுவது தமிழர்களின் பிணம். பணமா? அல்லது பிணமா? என்பதை தமிழக மக்கள் தீர்மானிக்க வேண்டும்.

தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட தி.மு.க கூட்டணி கட்சிகளுக்கு டெபாசிட் கிடைக்கக்கூடாது. காங்கிரஸ் இனி ஒருபோதும் டெல்லியில் ஆட்சிக்கு வரப்போவது இல்லை. இலங்கை தமிழர்களுக்கு துரோகம் செய்யலாம் என்ற எண்ணம் இனி எவருக்கும் வரக்கூடாது. இவ்வாறு வைகோ பேசினார்.

Comments