ஐ.நா. பாதுகாப்புச் சபை விவாதம்: சிறிலங்காவின் வெற்றி பெறாத முயற்சியும் மெக்சிக்கோவின் திட்டவட்டமான முடிவும்

வன்னியில் உருவாகியிருக்கும் மனிதாபிமானப் பிரச்சினைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் விவாதிப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் தோல்வியடைந்திருப்பதாகத் தெரிகின்றது.

இது தொடர்பில் திரிவுபடுத்தப்பட்ட செய்திகளை சிறிலங்கா அரசு வெளியிட்டதும் அனைத்துலக சமூகத்துக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றது.

பாதுகாப்புச் சபையின் அடுத்த கூட்டத் தொடரில் வன்னி நிலை தொடர்பாக விவாதிப்பதற்கு நிகழ்ச்சி நிரலில் நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகள் பலவற்றின் கோரிக்கையைத் தொடர்ந்தே நிகழ்ச்சி நிரலில் இப்பிரச்சினை சேர்க்கப்பட்டது.

இது தொடர்பான செய்தி வெளியானதையடுத்து நிகழ்ச்சி நிரலில் இருந்து அதனை நீக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்காக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோகன்னவை அவசரமாக மெக்சிக்கோவுக்கு அனுப்பிவைத்தார் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச.

வன்னி நிலை தொடர்பாக விவாதிக்கப்பட வேண்டும் என பாதுகாப்புச் சபையில் அழுத்தம் கொடுத்த ஒரு நாடாக மட்டுமன்றி, பாதுகாப்புச் சபையின் புதிய தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட நாடாகவும் மெக்சிக்கோ இருப்பதால்தான் மெக்சிக்கோவைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியது சிறிலங்கா.

இதன் மூலம் பாதுகாப்புச் சபையின் நிகழ்ச்சி நிரல் இருந்து வன்னி நிலை தொடர்பான விவாதத்தை நீக்கிவிட முடியும் என சிறிலங்கா நம்பியது.

மெக்சிக்கோ நகருக்குச் சென்ற பாலித கோகன்ன, அந்நாட்டின் உதவிப் பிரதமர் கொமிஸ் றொப்லிடுவுடன் இந்தப் பிரச்சினை தொடர்பாக விரிவான பேச்சுக்களை நடத்தினார்.

அந்நாட்டு வெளிவிவகாரத்துறையின் முக்கிய அதிகாரிகைளையும் அவர் சந்தித்தார். இதன்பின்னர் பேச்சுக்களின் பெறுபேறுகள் தொடர்பாக கூட்டறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.

பதிலாக பாலித கோகன்னதான் ஊடகவியலாளர்களிடம் கருத்துக்களை வெளியிட்டார். "ஐ.நா. பாதுகாப்புச் சபையின் கூட்டத் தொடருக்கான நிகழ்ச்சி நிரலில் சிறிலங்கா விவகாரம் தொடர்பாக ஆராய்வதற்காக அதனைச் சேர்த்துக்கொள்ளும் எண்ணம் எதுவும் தமக்கு இல்லை என மெக்சிக்கோ அமைச்சர் உறுதியளித்திருக்கின்றார்" என்பதுதான் பாலித கோகன்ன தெரிவித்த கருத்து.

இதனைவிட வன்னி நிலைமை தொடர்பாக வெளியாகியுள்ள செய்திகள் பிரச்சார நோக்கத்துடன் உருவாக்கப்பட்டவை என்பதை மெக்சிக்கோ பதில் பிரதமரும் மற்றும் அதிகாரிகளும் ஏற்றுக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்த அவர், இந்த விவகாரம் பாதுகாப்புச் சபைக்குக் கொண்டுவரப்படும் என அஞ்ச வேண்டியதில்லை என்ற விதமாகவும் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

அதாவது, தான் நடத்திய பேச்சுக்களைத் தொடர்ந்து மெக்சிக்கோவின் முன்னைய நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதுதான் அவரது கருத்தின் சாராம்சமாக இருந்தது.

விடுதலைப் புலிகளின் பிரச்சாரத்தால் தவறான பாதையில் செல்லவிருந்த பாதுகாப்புச் சபையை சரியான பாதைக்குக் கொண்டுவந்துவிட்டது போல அவர் பெருமையாக செய்திகளை வெளியிட்டுக்கொண்டிருந்தார்.

இருந்தபோதிலும் மெக்சிக்கோவின் நிலைப்பாட்டில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்பதை ஐ.நா.வுக்கான மெக்சிக்கோவின் தூதுவர் ஹீலர் தெளிவுபடுத்தியிருக்கின்றார்.

"இது சரியான அறிக்கை அல்ல" என பாலித கோகன்னவின் அறிக்கை தொடர்பாக ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட ஹீலர், "சிறிலங்காவின் விவகாரத்தைப் பொறுத்தவரையில் அது பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான பொறுப்புடன் சம்பந்தப்பட்டது என்பதில் நாம் மிகவும் தெளிவாக இருக்கின்றோம்" எனவும் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கின்றார்.

R2P என சுருக்கமாக இராஜதந்திர மட்டத்தில் குறிப்பிடப்படும் "பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான பொறுப்பு" (Responsibility to Protect) என்பது ஐ.நா. பொதுச் சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கோட்பாடாகும்.

ஒரு நாடானது தனது குடிமக்களைப் பாதுகாக்கத் தவறும் சந்தர்ப்பங்களில் அனைத்துலக சமூகம் அதில் தலையிட்டு அந்த மக்களைப் பாதுகாப்பதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள முடியும் என்பதுதான் இதன் அர்த்தமாகும்.

மெக்சிக்கோ அதிகாரிகளுக்கும் சிறிலங்காவின் வெளிவிவகாரச் செயலாளர் பாலித கோகன்னவுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுக்கள் தொடர்பாக பாலித கோகன்ன வெளியிட்ட தகவல் தவறானது என்பதை மெக்சிக்கோ இப்போது உறுதிப்படுத்திவிட்டது.

இந்த விடயத்தில் மட்டுமன்றி அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சர் ஹிலறி கிளிண்டன் மற்றும் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஆகியோர் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் நடத்திய பேச்சுக்கள் தொடர்பான செய்திகளையும் சிறிலங்கா தரப்பு திரிவுபடுத்தியே வெளியிட்டதாக அனைத்துலக ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இந்நிலையில் பாதுகாப்புச் சபையில் வன்னியின் மனிதாபிமானப் பிரச்சினை விவாதிக்கப்படப் போவது உறுதியாகியிருக்கின்றது.

இந்நிலைமைகளைச் சமாளிப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாகத்தான் இரண்டு நாள் தாக்குதல் தவிர்ப்பு என்ற அறிவித்தலை சிறிலங்கா அரசு வெளியிட்டது. அந்த அறிவித்தல் கூட சிறிலங்கா அரசு எதிர்பார்த்ததைப்போல அனைத்துலகின் ஆதரவு அதற்குப் பெற்றுக்கெடுக்கவில்லை.

அதேவேளையில் அனைத்துலக ரீதியாக புலம்பெயர்ந்த தமிழர்கள் மேற்கொண்டுவரும் போராட்டங்கள் ஐ.நா.வில் கூட எதிரொலிக்கும் நிலை தோன்றியிருக்கின்றது.

இந்நிலையில் பாதுகாப்புச் சபை இவ்விடயம் தொடர்பாக நடத்தப்போகும் விவாதம் சிறிலங்கா அரசுக்கு நெருக்கடியைக் கொடுப்பதாக அமையலாம்.

Comments