அவலமும்அபத்த நாடகங்களும்

இலங்கை இனப்பிரச்சினையை ஒட்டி அவ்வப்போது கட்டவிழும் பல்வேறு அபத்த நாடகங்களின் இரண்டு காட் சிகள் நேற்றுமுன்தினம் அரங்கேறியிருக்கின்றன.

ஒன்று இலங்கைத் தமிழரின் தேசிய இனப்பிரச்சினையை வைத்து அவ்வப்போது அரசியல் சித்துவிளையாட்டுளை நடத்திவரும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அரங் கேற்றிய சாகும்வரை உண்ணாவிரதம் என்ற நாடகம்.

அடுத்தது முல்லைத்தீவில் பாதுகாப்பு வலயப் பிரதேசங்கள் மீது விமான மற்றும் கனரக ஆயுதங்களின் பிர யோகம் நிறுத்தப்படுவதான கொழும்பின் அறிவிப்பு.
சாகும்வரையான உண்ணாவிரதத்தை பெரும் எடுப்பு ஆரவாரத்துடன் காலையில் ஆரம்பித்து நண்பகலி லேயே அதனை முடித்துக்கொண்ட கலைஞரின் "திரு விளையாடல்" கண்டு, தற்போதைய அவலம் தரும் வேத னையில் சிக்கிக் கலங்கி நிற்கும் தமிழினம் அந்தத் துன் பத்துக்கு மத்தியிலும் எள்ளி நகையாடிச் சிரிக்கின்றது.

"உலகத் தமிழினத்தின் தலைவர்" என்று தமக்குத்தாமே மகுடம் சூட்டிக் கொண்ட கலைஞர் கருணாநிதி, தமது தள்ளாத வயதிலும் பதவி ஆசை காரணமாக ஈழத் தமிழரை நட்டாற்றில் கைவிட்டு, "உலகத் தமிழினத் துரோகி" என்ற நாமத்தைத் தாமே வரித்துக்கொண்டுவிட்ட நிலையில்அந்தப் பட்டத்தைத் தவிர்த்துக் கொள்வதற்காக மாயாஜால எத்தனங்களில் எல்லாம் ஈடுபடுகின்றார். அதன் ஓர் அத்தியாயமே உண்ணாவிரத நாடகம் என்ற இந்தப் பூச்சுற்றல் வேலை.

"ஈழத் தமிழருக்கு ஒரே தீர்வு தமிழ் ஈழம்தான். அதை எப்படியும் பெற்றுக்கொடுப்பேன்!" என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா சூளுரைத்து, ஒரேநாளில் உலகத் தமிழர்கள் மனதில் எல்லாம் உயர்ந்துவிட்ட நிலைமை கண்டு அதிர்ந்துபோன கலைஞர் கருணாநிதி, அதனால் இனி நடக்கப்போகும் இந்தி யப் பொதுத் தேர்தலில் தமக்கு நேரப்போகும் தோல்வி உறுதியான சூழலில், அதைத் தவிர்க்கும் முயற்சியாக அவர் அரங்கேற்றிய நாடகம்தான் இந்த உண்ணாவிரத "ஸ்டண்ட்" என்பது தமிழக மக்களுக்கு மட்டுமல்ல, உலகத் தமிழர்கள் அனைவருக்குமே தெரிந்த விடயம்தான்.

முல்லைத்தீவில் பொதுமக்கள் தங்கியுள்ள பிர தேசங்கள் மீது விமான, கனரக ஆயுதங்களைப் பயன் படுத்துவதில்லை என்ற அறிவிப்பை விடுத்து, அடுத்த இரண்டு வாரங்களுக்காவது இந்தியப் பொதுத்தேர்தல் வாக்களிப்பு முடிவடையும் வரையாவது அதை நடை முறைப்படுத்துவது என்ற இணக்கத்துக்கு கொழும்பு வந்திருப்பது பற்றிய தகவல் புதுடில்லிக்கும் சென் னைக்கும் ஞாயிறு மாலையே தெரிவிக்கப்பட்டுவிட் டது என்கின்றன கொழும்பின் உள்வீட்டுத் தகவல்கள்.

இதனை அறிந்துகொண்ட தமிழக முதல்வர் உடன டியாக அடுத்தநாள் திங்கட்கிழமை காலையில் யுத்த நிறுத்தம் கோரி சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கும் நாடகத்தை ஆரம்பித்து, மத்தியானத்துடன் அதை முடித்து வைத்திருக்கின்றார்!

கலைஞர் உட்பட தமிழகத் தலைவர்கள் அனைவரும் வற்புறுத்தியது யுத்தநிறுத்தத்தை. ஆனால் தான் அறி வித்திருப்பது யுத்த நிறுத்தம் அல்ல, கனரக ஆயுதப் பாவனை நிறுத்தம் மட்டுமே என்பதைக் கொழும்பு திட்டவட்டமாகவும், தெளிவாகவும் வெளிப்படுத்திய பின்னரும், அதை யுத்த நிறுத்தமாக காங்கிரஸ் கட்சி யைச் சேர்ந்த அமைச்சர் சிதம்பரம் அர்த்தப்படுத்தி வியாக் கியானம் செய்ய, ஏதோ காலையில் தாம் ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டத்தினால் இலங்கையில் யுத்த நிறுத்தம் மத்தியானத்தில் நடைமுறைக்கு வந்துவிட்டது போல காதில் பூச்சுற்றியிருக்கின்றார் தமிழக முதல்வர்.

அடுத்தது கனரக ஆயுதப் பாவனை நிறுத்தம் பற் றிய கொழும்பின் அறிவிப்பு நாடகம்.

முல்லைத்தீவில் பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கில் இப்போது சிக்குண்டுள்ள பிரதேசத்துக்கு "பாதுகாப்பு வலயம்" (Safety Zone) என்றும் "தாக்குதலற்ற பிர தேசம்" (No Fire Zone) என்றும் நாமம் சூட்டப்பட்டது.

ஆனால் இப்பிரதேசங்கள் மீது இனி விமான அல்லது கனரக ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்தப்பட மாட்டாது என்று அறிவித்ததன் மூலம், இதுவரை அப் பிரதேசங்கள் மீது அத்தகைய தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்பதை ஒப்புக்கொள்ளாமலேயே ஒப்புக்கொண்டு விட்டது இலங்கை அரசு.

ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களுக் கான ஆணையாளர் நாயகம் சேர் ஜோன் @ஹாம்ஸ் சுட்டிக்காட்டியமை போல, இவ்விடயத்தில் இதுபோன்ற பல வாக்குறுதிகள் ஏற்கனவே அளிக்கப்பட்டு, அவை எல்லாம் மீறப்பட்டுவிட்டன. அந்த மாதிரி இல்லாமல் இப்போதைய அறிவிப்பாவது செயலில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே எல்லோரினதும் எதிர் பார்ப்பும் விருப்பமுமாகும்.

இலங்கையில் தமிழர்கள் எதிர்கொள்ளும் பேரவலம் சகிக்கமுடியாத எல்லையையும் தாண்டியுள்ள நிலை யில், தமிழகத்துக்கு அப்பாலும் இவ்விவகாரம் பெரும்சீற்ற அலைகளை ஏற்படுத்தி நிற்கின்றது என்பது வெளிப்படை.

இராணுவத் தீர்வில் மூச்சுடன் நிற்கும் கொழும்புக்கு, அதற்காக உதவி, ஒத்தாசை வழங்கி, முண்டு கொடுத்து நிற்கும் பாகிஸ்தான், சீனா, இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகள் தவிர்ந்த சர்வதேச உலகு குறிப்பாக மேற் குலகு கொழும்பின் இராணுவத் தீர்வுத்திட்ட முயற்சி களுக்கு எதிராக இராஜதந்திர சீற்றம் கொண்டு நிற்பதும் வெளிப்படையானது.

தனது யுத்தத் தீவிர நடவடிக்கைகள் அந்தத்தை எட் டிக்கொண்டிருப்பதாகக் கருதும் கொழும்பு, அதைப் பூர்த்தி செய்து முடிப்பதற்கான கால அவகாசத்தைத் தான் பெறும் வகையில் மேற்குலகின் சீற்றத்தைக் கட்டுப்படுத்தி வைக்க அவாவுகின்றது.அதற்கான அவகாசத்தைப் பெறுவதற்கு இந்தக் கனரக ஆயுதப் பாவனை நிறுத்தம் என்ற தந்திரோபாய அறிவிப்பு உதவும் என நினைக்கின்றது கொழும்பு.

இந்த அறிவிப்பாவது செயலில் நடைமுறைப்படுத்தப் படுமா, களத்தில் பேரவலப்படும் ஈழத் தமிழர்களுக்கு அதனால் மீட்சி கிட்டுமா என்பதுதான் உலகம் வாழ் தமிழர்களின் ஏக்கம் நிறைந்த எதிர்பார்ப்பாகும்.

Comments