ஏற்கனவே இரண்டு நாட்கள் போர் நிறுத்தம் என அறிவித்துவிட்டு அக்காலப் பகுதியில் மக்கள் வதிவிடங்களை நோக்கி பாரியளவில் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியிருந்த சிறிலங்கா படையினர், இன்று புதன்கிழமை அதிகாலை முதல் தரை வழியாக பாரிய தாக்குதலினை மேற்கொண்டுள்ளனர்.
தரைவழித் தாக்குதலுக்கு வசதியாக பெருமளவு இராணுவ வாகனங்களும் ஆயுதங்களும் கடந்த இரண்டு நாட்களாக பாதுகாப்பு வலயப் பகுதிகளை நோக்கி நகர்த்தப்பட்டன.
இரண்டு நாள் தாக்குதல் நிறுத்தம் என்ற அறிவிப்பை இதற்கு வசதியாகவே சிறிலங்கா படையினர் பயன்படுத்தியிருந்தார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.
இதன் தொடர்ச்சியாக இன்று அதிகாலை மாத்தளன் தொடக்கம் வலைஞர்மடம் உள்ளடங்கலான பகுதிகளை நோக்கி மிகச் செறிவான எறிகணைத் தாக்குதல்கள், பீரங்கித் தாக்குதல்கள், தாங்கிகளின் தாக்குதல்களுடன் மற்றும் கனரக துப்பாக்கித் தாக்குதல்களையும் சிறிலங்கா படையினர் நடத்தி வருகின்றனர்.
படையினரின் எறிகணைகள் மக்கள் வாழும் பகுதிகளில் மிகவும் செறிவாக வீழ்ந்து வருவதால் பொதுமக்கள் தரப்பில் பாரிய உயிரிழப்புக்கள் ஏற்படக்கூடிய பேரபாயம் உருவாகியிருப்பதாக புதினத்தின் வன்னிச் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புக்களின் விபரங்கள் உடனடியாகத் தெரியவரவில்லை.
Comments