''கருணாநிதி உணரும்போது இனமே அழிந்திருக்கும்!''-விகடன்

ழத் தமிழர் நலன் காக்க உண்ணாவிரதம்என்று அக்டோபர் மாதம் உட்கார்ந்து, அது பூகம்பத்தைத் தாண்டிய பேரெழுச்சியாகத் தமிழகத்தில் பரவக் காரணமான கட்சி, இந்திய கம்யூனிஸ்ட். அதன் துணைச் செயலாளர்களில் ஒருவரான சி.மகேந்திரன் இந்த வார மேடையில் முழங்குகிறார்...

''களங்கம் கற்பிக்க முடியாத கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையிலான மூன்றாவது அணிதான் இன்றைய நிலையில் இந்திய மக்களுக்கு இருக்கிற ஒரே நம்பிக்கை!

மக்கள் முன்னால் இன்று வேறு இரண்டு அணிகள் இருக்கின்றன. ஒன்று, காங்கிரஸ் தலைமையிலான துரோகிகள் அணி. இன்னொன்று, பாரதிய ஜனதா தலைமையிலான விரோதிகள் அணி. துரோகத்தையும் விரோதத்தையும் வேரறுக்க வேண்டிய கட்டாயம் மக்களுக்கு இருக்கிறது.

'துரோக' காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சி இந்திய மக்களுக்கும், தன்னை ஆதரித்த கட்சிகளுக்கும் வெளிப்படையாகத் துரோகம் செய்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிகள் சேர்ந்து காங்கிரஸை ஆதரிக்கக் காரணம், மதவாத சக்திகள் கையில் நாடு போய் நாசமாகிவிடக் கூடாது என்பதால்தான்.

அப்போது இடதுசாரிகளுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் கொள்கை உடன்பாடு ஏற்பட்டது. தேசியக் குறைந்தபட்ச செயல்திட்டம் என்று அதற்குப் பெயர். ஊர் நியாயம் பேசும் காங்கிரஸ் அரசு அதை நிறைவேற்றியாக வேண்டும். ஆனால், செய்யவில்லை. இந்தியாவின் புகழ்பெற்ற பொதுத் துறை நிறுவனங்கள் அனைத்தையும் படிப்படியாகத் தனியாருக்குத் தாரைவார்க்க முடிவெடுத்தார்கள். அதைப் போராடித் தடுத்தோம்.

கடைசியாக அவர்கள் முயற்சித்தது அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தம். இதுவும் குறைந்தபட்ச செயல்திட்டத்துக்கு எதிரானதுதான். இதனால்தான் அவர்களுக்குக் கொடுத்த ஆதரவை கம்யூனிஸ்ட்டுகள் வாபஸ் வாங்கியாக வேண்டிய அவசியம் வந்தது. எங்களுக்கு வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. அமெரிக்க நலனுக்கு நமது தேசம் அடிமைஆகக் கூடாது.

காங்கிரஸ் கட்சி நேர்மையான கட்சி, மக்களுக்குத் துரோகம் இழைக்காத கட்சி என்றால், அப்போதே ராஜினாமா செய்துவிட்டு தேர்தலைச் சந்தித்திருக்க வேண்டும். அமெரிக்க அணுவிசைப் பெருமுதலாளிகளிடம் பெற்ற லஞ்சத்துக்காக, இந்த அரசை எப்படியாவது காப்பாற்றியாக வேண்டும் என்ற வஞ்சக எண்ணம் அந்தக் கட்சிக்கு வந்தது. பெருந்தொகைப் பணத்துக்காக, இந்தியாவின் சட்டதிட்டங்களை மீறி, நாடாளுமன்ற உறுப்பினர் களுக்கு வெளிப்படையாகக் கையூட்டு கொடுத்து, ஆட்சி யைத் தக்கவைத்துக்கொண்டது காங்கிரஸ். இதை விட மக்கள் துரோகம் வேறு என்ன?

'விரோத' பா.ஜ.க.

அடுத்து, மக்கள் முன்னால் வந்து நிற்கிறது விரோத எண்ணம் கொண்ட பாரதிய ஜனதா. இந்த நாட்டின் உயிரான கொள்கையே மதச்சார்பின்மைதான். பல் வேறு இனம், மொழி, மதம் கொண்ட மக்கள் வாழும் பரந்து விரிந்த தேசம் இது.

இந்த நாட்டை பிரிட்டிஷ் அரசாங்கம்தான் இணைத்தது. இங்கு மொழியால்வெறுப் புக்கொள்ளாத, இனத்தால் வெறியைத் தூண்டாத, மதத்தால் வேற்றுமையை விதைக்காத கட்சிதான் ஆட்சிக்கு வர வேண்டும். அப்படிப்பட்டவர் மத்திய அரசை அலங்கரித்தால்தான் நாட்டின் ஒற்றுமையைப் பாதுகாக்க முடியும்.

ஆனால், இந்தியாவில் அனைத்து வித மக்களிடமும் விரோதத்தை விதைப்பதையே வேலை யாகக்கொண்டு இருக்கும் கட்சி பாரதிய ஜனதா. பகைமை அரசியல்தான் அவர்களின் கொள்கை. வெறுப்பு விறுப்பு அரசியல்தான் அவர்களின் வழிமுறை. பாபர் மசூதியை இடித்ததில் ஆரம்பித்து, குஜராத் கலவ ரத்தில் தொடர்ந்தது அவர்களின் ரத்தவெறி அரசியல். ஒரிஸ்ஸா மாநிலத்தில் அருட்சகோதரிகளைப் பாலியல் பலாத்காரம் செய்தது வரை மதவாத வக்கிரம் தூவப் பட்டு வருகிறது. இப்படிப்பட்ட விரோத மனிதர்கள் கையில் நாடு போய்விடக் கூடாது என்பதில் மக்கள் தெளிவாக இருக்க வேண்டும்.

மக்கள் அணி

எனவேதான், இடதுசாரிகள் மாற்று அணியை ஆரம்பித்தோம். வகுப்பு வெறி அல்லாத, உலகமயமாக்கலை எதிர்க்கின்ற, சுயசார்புப் பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்ட கட்சிகள் இதில் ஐக்கியமாகி உள்ளன. இந்திய மக்களின் அரசியல் தேவைகளைப் பூர்த்திசெய்வது மட்டும்தான் இந்த அணியின் நோக்கம். மக்களின் விருப்பத்துக்காக உருவாகிய அணி இது. யாரோ சிலரின் விருப்பத்துக்காக உருவானதல்ல. இது தேர்தலுக்குப் பிறகு வலுவான அணியாக மாறும். இடதுசாரிகள்இருப்பதால், இந்த அணி அரசியல் வடிவம் பெற்று ஆட்சியை அமைக் கும். காங்கிரஸ், பாரதியஜனதாவுக்குச் சரியான மாற்று நாங்கள்தான்.

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியால் வலுவான அணியை அமைக்க முடியவில்லை. காங்கி ரஸூக்கும் இதே நிலைமைதான். கருணாநிதி மட்டும் தான் முட்டுக்கொடுத்துக்கொண்டு இருக்கிறார். ஈழத் தமிழர் நலன் காக்க மற்ற கட்சிகள் பேசுவதே கருணாநிதிக்குக் கசப்பாக இருக்கிறது. இங்குள்ள ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக நடக்கும் சதி அது என அவர் சொல்வது, ஈழத்தில் நடக்கும் கொடுமை களை மறைக்கும் சதி. அங்கு யாரும் சாகவில்லை, யாரும் கொல்லப்படவில்லை என்று அவர் நினைக் கிறாரா?

ஈழத்துக் கண்ணீர்

தமிழ்நாட்டு எல்லைக்குள் இருக்கும் ஆறரைக் கோடித் தமிழனும் வெளிநாட்டில் வாழும் பல லட்சம் தமிழனும் கருணாநிதியிடம் கெஞ்சிக் கூத்தாடிய பின்னரும், ஈழத்தில் நிரந்தரப் போர் நிறுத்தம் செய்ய நேர்மையான நடவடிக்கையை கருணாநிதி செய்யவில்லை.

தமிழகத்தின் அனைத்துக் கட்சிகள், சட்டமன்றக் கட்சிகள் அனைத்தும் இணைந்து முடிவெடுக்கும் அதிகாரத்தை கருணாநிதி கையில் கொடுத்தார்கள். அந்த அதிகாரத்தை வைத்து சிறு துரும்பைக்கூடத் தூக்கிப் போடத் தயாராகாத கருணாநிதி, தமிழர் நலனை காங்கிரஸ் கட்சிக்குக் காணிக்கை ஆக்கிவிட்டார். எங்கே ஈழத் தமிழர் பிரச்னையை வைத்து தமிழ் மக்கள் தங்களைத் தோற்கடித்துவிடுவார்களோ என்ற பயத்தின் காரணமாக கருணாநிதியும் சோனியாவும் லேசாக முணுமுணுக்கிறார்கள். இலங்கைப் பிரச்னை இன்று வரை தீராததற்குக் காரணமே இந்தியாதான். இவர்கள் இருப்பதால்தான், ஐ.நா. சபையும் தலையிட மறுக்கிறது.

'நீங்கள் இலங்கைக்குச் செல்லுங்கள், ராஜபக்ஷேவைக் கைது செய்யுங்கள்' என்றெல்லாம் கருணாநிதி பேசுவது அவரது இயலாமையைமறைக் கும் முயற்சி. தன் சறுக்கலை ஆத்திரம் கொண்ட வார்த்தைகளால் மறைக்கிறார். தன்னுடைய வழுக் கலைப் பூசி மெழுகுகிறார். தனது அரசியல் வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப் பெரிய பின்வாங்கல் இதுதான் என்பதை அவர் உணரும்போது இனமே அழிந்து முடிந்திருக்கும்.

வேதனைப் பட்டியல்

'கலர் டி.வி. கொடுத்தேன்... ஒரு ரூபாய் அரிசி போட்டேன்' என்று சாதனைப் பட்டியல் வாசிக் கிறார் கருணாநிதி. ஒரு ரூபாய்க்கு அரிசி வந்ததால், நாடு முழுவதும் மாவு மில்கள்தான் அதிகமாகி இருக்கின்றன. வாங்கிய அரிசியை வைத்து மாவு அரைக்கிறார்களே தவிர, சாப்பிடவில்லை. மற்ற பொருட்களின் விலை மூன்று மடங்கு அதிகமாகி இருக்கிறது. அரிசி விலையைக் குறைத்தால், வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகாது. அதே போல்தான் கலர் டி.வி-யும். டி.வி-யைக் கொடுத்தவர்களைப் பார்த்து மின்சாரம் கேட்கிறார்களே மக்கள்? அதற்கு தி.மு.க. என்ன பதில் சொல்லும்?

அனைத்துக்கும் மேலாக, பணத்தை வைத்துஜெயித்து விடலாம் என்று கணக்குப் போடுகிறது தி.மு.க! மக்களின் தலைவிதியை மன்னர்கள் நிர்ணயித்த கொடுமை பிரெஞ்சுப் புரட்சி மூலமாக மாற்றப்பட்டது. அதன் கொடைதான் ஜனநாயகம். அந்த ஜனநாயகம் வழங்கிய உரிமைதான் வாக்குச் சீட்டு. அதற்கு விளைபொருளைப் போல விலை நிர்ணயிக்கிறார்கள். இதுவரை மறைமுகமாக நடந்த பணப் பட்டுவாடா திருமங்கலத்தில் பகிரங்கமாக நடந் தது. இடைத் தேர்தலில் நடத்ததைப் பொதுத் தேர்தலிலும் அமல்படுத்த முயற்சிக்கிறார்கள். வாக்குச் சீட்டின் புனிதத் தைக் காக்க, கம்யூனிஸ்ட்டுகள் களப் பலியாகியாவது தடுப்பார்கள்!''

Comments