நடமாடும் சுதந்திரம் உறுதிப்படுத்தப்படும் என சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் கூறிவரும் நிலையில் தமது பணியாளர்கள் சிலர் முகாம்களில் நடமாடும் சுதந்திரம் வழங்கப்படாமல் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக ஐ.நா.வின் இணைப் பேச்சாளர் பர்ஙன் ஹக் தெரிவித்திருக்கின்றார்.
ஐ.நா.வின் பணியாளர்கள் சிறப்புரிமையுடன் செயற்படவேண்டும் என்ற கோட்பாட்டை மீறுவதாக இது அமையாதா என அவரிடம் ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பியபோது அதற்குப் பதிலளிக்க அவர் மறுத்துவிட்டார்.
அதேவேளையில் இச்சம்பவம் தொடர்பாக ஐ.நா. ஏன் தகவல் எதனையும் வெளியிடவில்லை என்ற கேள்விக்கும் அவர் பதிலளிக்கவில்லை.
சிறிலங்கா விவகாரத்தில் ஐ.நா. கையாளும் இந்த அணுகுமுறை ஆச்சரியப்பட வைப்பதாகத் தெரிவித்த மேற்கு நாடுகளின் ஊடகவியலாளர்கள், இதேபோல பாகிஸ்தானில் ஐ.நா. பணியாளர்கள் தடுத்து வைக்கப்பட்டபோது அவர்களுடைய பெயர் விபரங்களை வெளியிட்ட ஐ.நா., அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என பலமாகக் குரல் எழுப்பியதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதேவேளையில் யுனிசெஃப்பின் பணிப்பாளர் ஆன் வெளிமானின் பேச்சாளர் இது தொடர்பான செய்திகளை வெளிப்படுத்திய 'இன்னர் சிட்டி பிறஸ்' இணையத்தளத்துக்கு இது தொடர்பான விளக்கம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.
நேற்று முன்நாள் அவர் அனுப்பிவைத்துள்ள அந்தப் பதிலில் முக்கியமாகத் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
"முகாம்களில் யுனிசெஃப் பணியாளர்கள் இருப்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும். முகாம்களுக்குச் சென்று அவர்களுடன் எம்மால் தொடர்பு கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.
யுனிசெஃப்பும், ஐ.நா. அமைப்பில் உள்ள சகாக்களும் தமது நிலைமை தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளனர். பாதிக்கப்பட்ட பணியாளர்களின் பெயர் விபரங்களை நாம் வெளிப்படுத்த மாட்டோம்." என அவர் தெரிவித்திருக்கின்றார்.
இதேவேளையில் ஐ.நா. மனிதாபிமான விவகாரங்களுக்கான பேச்சாளர் சிறீபனி பங்கர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
"வன்னி பாதுகாப்பு வலயப் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் வெளியேறியுள்ளனர். அவர்களில் சில ஐ.நா. மற்றும் அரச சார்பற்ற நிறுவன பணியாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் இருப்பதை நாம் அறிவோம். அவர்கள் இப்போது இடம்பெயர்ந்தவர்கள் தங்கியுள்ள முகாம்களில் உள்ளனர்.
அவர்கள் தமது உதவிப் பணிகளை மீள தொடங்கக்கூடியவாறு அவர்களுடைய நடமாடும் சுதந்திரத்தை உறுதிப்படுத்துமாறு சிறிலங்கா அரசாங்கத்தை திரும்பத் திரும்பக் கேட்டிருக்கின்றோம். அதனை நிறைவேற்றுவதாக சிறிலங்கா அரசாங்கமும் திரும்பத் திரும்ப உறுதியளித்திருக்கின்றது. ஆனால் பணியாளர்கள் தற்போதும் முகாம்களிலேயே இருக்கின்றார்கள்." என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்குப் பொறுப்பான பணிப்பாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ் சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொண்ட போது இது தொடர்பாக அவருக்குச் சுட்டிக்காட்டப்பட்டதாக 'இன்னர் சிட்டி பிறஸ்' கொழும்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
இது தொடர்பாக ஜோன் ஹோம்ஸ் தொடர்ந்தும் மெளனம் சாதிப்பது தொடர்பாக ஐ.நா.வின் உள்ளுர் பணியாளர்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Comments