யேர்மனி, சுவிஸ், தென்னாபிரிக்கா, நெதர்லாந்தில் தொடரும் உண்ணாநிலைப் போராட்டங்கள்; இத்தாலியில் கவனயீர்ப்பு போராட்டம்

யேர்மனி, சுவிற்சர்லாந்து, நெதர்லாந்து, தென்னாபிரிக்காவில் உண்ணாநிலைப் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதேவேளையில் இத்தாலியிலும் தமிழ் மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தினை நடத்தியுள்ளனர்.

யேர்மனியில்...

யேர்மனியில் டுசல்டோவ் நாடாளுமன்றத்தின் முன்பாக கடந்த செவ்வாய்க்கிழமை (14.07.09) தொடக்கம் பெண்கள், இளையோர் உள்ளிட்ட 14 தமிழர்கள் உண்ணாநிலைப் போராட்டத்தினை நடத்தி வருகின்றனர்.



மணிதெரேசா சூசைப்பிள்ளை (வயது 68)

சதீஸ்வரன் ஜெயநிதி (வயது 49)

கோபாலகிருஸ்ணன் இந்திரமணி (வயது 57)

சீத்தாராம் (வயது 29)

புவனேஸ்வரன் விஐிதா (வயது 29)

குகதாஸ் தேவன் (வயது 27)

புவனேஸ்வரன் நிவேதா (வயது 27)

சுதர்சன் சிவாநந்தன் (வயது 28)

ஜெயந்தி சூரியகுமார் (வயது 44)

றஞ்சினி செல்வமாணிக்கம் (வயது 44)

ஜெயந்தி கீதப்பொன்கலன் (வயது 45)

சரோஐினிதேவி தங்கரத்தினம் (வயது 57)

கங்கா சிவசுப்பிரமணியம் (வயது 27)

அலெக்ஸ் அலெக்ஸ்சான்றா

ஆகியோரே உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



- உடனடி போர்நிறுத்தம் ஏற்பட வேண்டும்

- அரச சார்பற்ற நிறுவனங்கள் போர் நடைபெறும் பிரதேசத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதபிமான உதவிகளை மேற்கொள்ள சிறிலங்கா அரசு அனுமதியளிக்க வேண்டும்

- வன்னியில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் மீண்டும் தாங்கள் வாழ்ந்த பகுதிகளுக்கு சென்று குடியேற சிறிலங்கா அரசு அனுமதியளிக்க வேண்டும்

- தமிழ்மக்கள் வகை தொகையின்றி கொல்லப்படுவது நிறுத்தப்பட வேண்டும்

ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்ற சிறிலங்கா அரசாங்கத்துக்கு யேர்மனிய அரசாங்கம் அழுத்தத்தினை பிரயயோகிக்க வேண்டும் என உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வேண்டிக்கொள்கின்றனர்.

இவர்களின் உண்ணாநிலைப் போராட்டத்துக்கு பெருமளவிலான மக்கள் திரண்டுவந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

யேர்மனியின் இரண்டு முக்கிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்த அமைச்சர்கள் தமது முழு ஆதரவினை உண்ணாநிலைப் போராட்டத்தினை நடத்திவருகின்றவர்களுக்கு தெரிவித்துள்ளதுடன் யேர்மனிய அரச தலைவருடன் பேச்சு நடத்தி தீர்வுகாண்பதாகவும் வாக்குறுதி அளித்திருக்கின்றனர்.

யேர்மனியில் இருந்து வெளிவரும் அச்சு ஊடகங்கள், தொலைக்காட்சிகள் என்பன உண்ணாநிலைப் போராட்டத்தினை நடத்தி வருகின்றவர்களை பேட்டி கண்டு அவர்களின் போராட்டத்திற்கான காரணத்தினை யேர்மனிய மக்களுக்கு வெளிப்படுத்தி வருகின்றனர்.

சுவிசில்...

சுவிற்சர்லாந்தில் கடந்த திங்கட்கிழமை (13.04.09) தொடக்கம் உண்ணாநிலைப் போராட்டம் நடத்திவரும் சுவிஸ் தமிழர் பேரவையின் இணைப்பாளர் கிருஸ்ணா அம்பலவாணர் தொடர்ந்தும் தனது உண்ணாநிலைப் போராட்டத்தினை நடத்தி வருகின்றார்.

நேற்று முன்நாள் காவல்துறையினரால் பலாத்காரமாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு மயக்க மருந்து கொடுத்து சேலைன் ஏற்றப்பட்டுட்டது.

இருந்தபோதும், அவர் தனது கோரிக்கைகள் நிறைவேற்றபடும் வரை நீரையோ, உணவினையோ வாயில் வைக்கமாட்டேன் என உறுதியாக இருக்கின்றார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளையில் கிருஸ்ணா அம்பலவாணரின் கோரிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக அரச தலைவர் செயலகத்தில் இருந்து அழைப்பு வந்திருப்பதாக சுவிஸ் தமிழர் பேரவையினர் தெரிவித்திருக்கின்றனர்.

தென்னாபிரிக்காவில்...

தென்னாபிரிக்காவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்நாள் நாடாளுமன்ற உறுப்பினர் மா.க.ஈழவேந்தன் தனது உண்ணாநிலைப் போராட்டத்தை 9 ஆவது நாளாகவும் தொடர்ந்து நடத்திவருகின்றார்.

தென்னாபிரிக்காவில் உள்ள டேர்பன் நகரில் அமைந்துள்ள அருட்பாக் கழகத்தில் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நடைபெறும் இந்த போராட்டத்தில் நேற்றைய நாள் பெருமளவிலான மக்கள் திரண்டுவந்து அவருக்கு தமது ஆதரவை தெரிவித்துள்ளனர்.



ஈழவேந்தனின் உடல்நிலை தற்போது பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவரது தோற்றத்தில் களைப்புத்தன்மையும் காணப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

பல சமூகத்தவர்களும் அவரைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்து வருவதுடன், இந்து மற்றும் கிறிஸ்தவ சமூகத்தினர் பலரும் அவரின் உடல் வலிமைக்காக சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் இருந்து பழ.நெடுமாறன் உள்ளிட்ட பல தமிழீழ ஆதரவாளர்கள் இவரின் உண்ணாநிலைப் போராட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கின்றனர்.

நேற்று ஈழவேந்தன் ஆற்றிய உரையின் போது,

தாயக விடுதலைப் போராட்டத்தின் இந்த முக்கியமான தருணத்தில், ஐரோப்பா, கனடா மற்றும் அவுஸ்திரேலியா தாயக உறவுகளுடன் இணைந்து இவ்வாறான போராட்டங்களில் ஈடுபட்டிருப்பது எமது போராட்டத்திற்கு மிகவும் சாதகமான விளைவுகளை எற்படுத்தும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

எனது உண்ணாநிலைப் போராட்ட முயற்சி பயனளிக்காமல் போகவில்லை. தென்னாபிரிக்க அரசியல் வட்டாரத்தில், தமிழ்த் தேசியப் பிரச்சினை எந்தவித தாமதமும் இல்லாமல் தீர்க்கப்படவேண்டும் என்ற கருத்துநிலை உருவாகியுள்ளது. நான் ஊடகங்களுக்கு, அவர்கள் கொடுத்த செய்தி முன்னுரிமைக்காக நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

நெதர்லாந்தில்...

நெதர்லாந்து டென் காக்கில் உள்ள நாடாளுமன்ற முன்றலில் 7 ஆவது நாளாக உண்ணாநிலைப் போராட்டம் நடத்திவரும் இரண்டு தமிழ்த் தாய்மார்களை நாடாளுமன்ற உறுப்பினர் ஈர்காங்க் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

நான்கு பிள்ளைகளின் தாயார்களான பிறேமினி ஜெஸ்லின், கஸ்தூரி இரவீந்திரன் ஆகியோருடனேயே இச்சந்திப்பு நடைபெற்றது.







உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்ற இடத்துக்கு நேற்று வருகை தந்த சோசலிச கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈர்காங்க் இரண்டு தாய்மார்களுடனும் உரையாடியதுடன் வன்னி மக்களின் தற்போதைய நிலமைகளை புரிந்துகொள்வதாகவும் தன்னால் முடிந்தவற்றை செய்வதாகவும் உறுதிமொழி வழங்கிச் சென்றார்.

இதேவேளையில் டென் காக் தொடருந்து நிலையத்தில் இருந்து நாடாளுமன்றம் வரை மாபெரும் 'உரிமைக்குரல்' பேரணி நாளை நடைபெறவுள்ளதாக நெதர்லாந்து தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் அறிவித்திருக்கின்றது.

இதில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டுக்குழுவினர் கேட்டுக்கொள்கின்றனர்.

இத்தாலியில்...

இத்தாலி பலெர்மோவில் நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தின் ஒரு நிகழ்வாக நேற்று பலெர்மோவில் உள்ள வெளிவிவகாரத்துறை அமைச்சின் அலுவலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

இதில் இத்தாலி வாழ் தமிழ் மக்கள் மிகவும் உணர்வுபூர்வமாக கலந்துகொண்டனர்.

இப்போராட்டத்தினை நடத்திய இளையோர்களை வெளிவிவகாரத்துறை அமைச்சின் அலுவலகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் அழைத்து சந்தித்து பேச்சு நடத்தியிருக்கின்றனர்.






Comments