"வவுனியா முகாம்களில் பாலியல் வன்முறைகள், கொலைகள், கீழ்தரமான விசாரணைகள்": ஜேர்மன் மனித உரிமைவாதி வெளியிடும் அதிர்ச்சித் தகவல்கள்
மனிதாபிமானப் பயணம் ஒன்றை மேற்கொண்டு அண்மையில் வவுனியா சென்றிருந்த இவர், முகாம்களில் உள்ளவர்களைத் தனிப்பட்ட முறையில் சந்தித்து தகவல்களை அறிந்துகொண்டுள்ளதுடன், இராணுவத்தின் ஆக்கிரமிப்புக்குள் கைதிகள் போல நடத்தப்படும் இந்தக் குடிமக்களுடைய மோசமான நிலைமை தொடர்பாக விபரித்துள்ளார்.
வன்னியில் போர்ப் பகுதிகளில் இருந்து வெளியேறி வவுனியாவுக்கு வந்த பொதுமக்கள் அடையாளம் காணப்பட்டு, வவுனியாவில் உள்ள முகாம்களில் சிறிலங்கா இராணுவத்தினராலும் துணை இராணுவப் படைகளாலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
"பெரும்பாலானவர்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். அல்லது சாதாரண ஒரு சம்பவம் போல சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்கள்" என தோமஸ் சீபேர்ட்டை ஆதாரம் காட்டி 'மெடிக்கோ இன்ரர்நசனல்' அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றது.
இந்த முகாம்களின் இருப்பை பல வருட காலத்துக்கு நீடிப்பதற்கு சிறிலங்கா இராணுவம் முற்பட்டிருப்பதாகவும் தோமஸ் தெரிவிக்கின்றார்.
இதேவேளையில் வன்னியில் உள்ள சுமார் 15 சதுர கிலோ மீற்றர் பரப்பைக்கொண்ட கடற்கரைப் பகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இருப்பதாக ஐ.நா. மதிப்பிட்டிருப்பதாகத் தெரிவிக்கும் தோமஸ், முற்றுகைக்குள் தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதலுக்கும் உள்ளாக்கப்படுவதாகக் குறிப்பிடுகின்றார்.
உடனடியாக போர் நிறுத்தத்தை பிரகடனம் செய்யத்தவறினால், படுகொலைகள் இடம்பெறக்கூடிய ஒரு நிலைமை காணப்படுவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
"இந்தப் பகுதியில் உள்ள மக்களுடைய உயிர்களைப் பாதுகாக்க வேண்டுமாயின் உடனடியாக போர் நிறுத்தம் ஒன்று பிரகடனப்படுத்த வேண்டும்" என வலியுறுத்தியிருக்கும் தோமஸ், ஜேர்மனியில் பிராங்போட்டில் இருந்து செயற்படும் 'மெடிக்கோ இன்ரர்நசனல்' என்ற அரசார்பற்ற அமைப்பில் பணிபுரிந்து வருகின்றார்.
Comments