மிகநுட்பமாக அழித்தொழிக்கப்படும் ஈழத் தமிழர்களும் வரலாற்றுக்கு பொறுப்புச் சொல்ல வேண்டிய தமிழக மக்களும்

1

தெற்காசிய நிலப்பரப்பினுள் மிக நுட்பமான ஒரு இன அழித்தொழிப்பொன்று அரங்கேறிவருகின்றது. சிறிலங்கா அரசு இந்திய அனுசரனையுடனும் ஆசியுடனும். ஈழத் தமிழ் மக்களை மெதுவாக அழிக்கும் முயற்சியில் மேலும் முன்னேறியிருக்கிறது. அரசுக்கும் அரசுக்கும் இடையிலான கூட்டுநலன்களை மிகவும் தந்திரோபாயமாக கையாண்டு வருகிறது சிங்களம். உலகின் பல வல்லாதிக்க சக்திகளின் துணையுடன் விடுதலைப்புலிகளை அழித்தொழிக்கும் இறுதி கட்டத்திற்கான தயாரிப்பில் இறங்கியிருக்கிறது. இந்திய மத்திய அரசின் பிராந்திய நலன்கள், காங்கிரஸ் கட்சியின் பிரத்தியேக புலி எதிர்ப்பு அரசியல் ஆகியவற்றைக் கொண்டு இந்தியாவினையும், செப்டம்பர் 11 இற்கு பிற்பட்ட பயங்கரவாத சுலோகத்தைக் கொண்டு மேற்கினையும் ஒரே நேரத்தில் கையாளும் தந்திரோபாயத்தை சிங்களம் மிகுந்த நேர்த்தியுடன் கையாண்டு வருகிறது.

இதில் சிங்களத்தின் பிரத்தியேக திறமை என்பதற்கு அப்பால் சிங்களம் ஒரு அரசாக இருப்பதும் அது பிராந்திய நலன்களை குறியாகக் கொண்டு போட்டிவாத அரசியலில் குதித்துள்ள அண்டைய நாடுகளின் காய்நகர்த்தல்களுக்கு வளைந்து கொடுப்பதுமே காரணமாகும். மேற்கு அழுத்தங்களை பிரயோகிக்க முயலும் போது அதிலிருந்து மீளும் வகையில் சீன, இந்திய மற்றும் பாக்கிஸ்தானுடன் தொடர்புகளை வலுப்படுத்திக் கொள்வதும் பின்னர் இந்தியாவை தனது நலன்களுக்கு ஏற்ப கையாளும் நோக்கில் சீன, பாக்கிஸ்தான் உறவுகளை வலுப்படுத்துவதுமாக கொழும்பு தனது ராஜதந்திர நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றது.

ஆனால் இதில் கொழும்பின் அரசியல் எப்போதும் இந்தியாவை சிங்கள நலன்களுக்கு ஏற்ப கையாளுவதிலேயே மையம் கொண்டுள்ளது. கொழும்பின் சிங்கள ஆளும் வர்க்கம் அவ்வாறு சிந்திப்பதற்கான பிரத்தியேக காரணம் என்னவென்றால், சிங்களம் என்னதான் சீன, பாக்கிஸ்தான் மற்றும் இதர பல அன்னிய சக்திகளுடன் உறவுகளை பேணிக் கொண்டாலும் அவைகள் இராணுவ உதவி மற்றும் பொருளாதார உதவிகளுடன் மட்டுப்படுமே ஒழிய விடுதலைப்புலிகளை அழித்தொழித்து தனக்கு சார்பானதொரு தலைமையை உருவாக்குதல் என்ற இலக்குடன் கொள்கையளவில் ஈடுபாடு காட்டப் போவதில்லை. இதனைக் கருத்தில் கொண்டுதான் எப்போதுமே சிங்களம் இந்தியாவை இலங்கை விடயத்தில் உள்நுழைப்பதில் தீவிரம் காட்டிவந்திருக்கிறது. அதில் வெற்றியும் பெற்றிருக்கிறது.

1987, இல் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவினால் தொடங்கிவைக்கப்பட்ட இந்த சிங்கள நகர்த்தல் காலத்திற்கு காலம் கொழும்பின் அதிகாரத்தை கைப்பற்றும் ஒவ்வொரு சிங்கள தலைமைகளினாலும் பேணப்பட்டும் மெருகுபடுத்தப்பட்டும் வருகின்றது. ஏனென்றால் இந்தியாவிற்கு மட்டும்தான், இலங்கையில் தமிழர் தாயகப் பகுதியில் தனக்கு சார்பானதொரு அரசியல் தலைமை இருக்க வேண்டுமென்ற இரகசிய நிகழ்ச்சிநிரலை கொண்டிருக்கிறது. இத்தனைக்கும் விடுதலைப்புலிகள் தெற்காசிய அரசியலில் பெருமளவு செல்வாக்கானதொரு தலையீட்டைச் செய்யக் கூடியவர்களுமல்ல. அவ்வாறனதொரு ஆற்றலும் புலிகளுக்கு இல்லை ஆனாலும் விடுதலைப்புலிகளை தமிழரின் அரசியல் அரங்கிலிருந்து எப்பாடுபட்டேனும் அகற்றிவிட வேண்டுமென்ற இரகசிய நிகழ்ச்சிநிரலையே இந்தியா தொடர்ந்தும் கைக்கொண்டு வருகின்றது. சாதகமான சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போதெல்லாம் அதனை நடைமுறைப்படுத்த அது தயங்கியதுமில்லை. குறிப்பாக ஆளும் காங்கிரஸ் இது விடயத்தில் மிகுந்த தீவிரத்தை காட்டிவருவதொன்றும் இரகசியமானதுமல்ல. இன்று மகிந்தவின் நிர்வாகம், தனது நிகழ்ச்சிநிரலை நகர்த்த சாத்திமான களம் என்று கருதிய, ஆளும் காங்கிரஸ் திரைமறைவில் இருந்தவாறு யுத்தத்தை நடாத்தி வருகின்றது.

இன்று ஈழத்தில் தமிழர் போராட்டத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் இன அழிப்பு யுத்தத்திற்குப் பின்னால் இந்தியா மிகவும் திட்டமிட்ட வகையில் செயற்பட்டுவருகிறது என்பது வெள்ளிடைமலையாவிட்ட ஒன்று. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை கொன்றொழிக்கும் வரை ஓய மாட்டேன் என்ற இறுமாப்புடன் இந்தியா செயலாற்றிவருகின்றது. இந்தியா ஏன் இவ்வாறு நடந்து கொள்கின்றது? இந்த கேள்விக்கு, கடந்த கால இந்திய அனுபவங்களை கோடிகாட்டி பல பதில்கள் நமது அரசியல் ஆய்வுச் சூழலில் முன்வைக்கப்படுகின்றது. பதில்கள் எதுவாக இருப்பினும் இந்தியாவை மீறி அழிவின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கும் ஈழத் தமிழ் மக்களை எந்தவொரு அன்னிய சக்தியும் காப்பாற்ற வரப்போவதில்லை என்பது நிச்சயம். இதனை நன்கு உணர்ந்து கொண்டே சிங்களம் இந்தியாவை பின்தளமாகக் கொண்டு தனது யுத்த நிகழ்ச்சிநிரலை நகர்த்தி வருகின்றது. இன்றைய சூழலில் இந்தியாவை கட்டுப்படுத்தக் கூடிய ஆற்றல் எவருக்கு இருக்கிறது? அது தமிழக மக்களுக்கு மட்டும்தான் இருக்கிறது. இது கட்சி, கொள்கை, மதம் என்ற அகநிலை சிக்கல்களை எல்லாம் கடந்ததாக இருக்க வேண்டும்.

இன்று இந்தியா தமிழக மக்களையும் தனது மக்கள் பிரிவாக உள்வாங்கிக் கொண்டுதான் அந்த மக்களின் தொப்புள்கொடி உறவுகளை அழித்தொழிக்கும் இனவெறி யுத்ததிற்கு சகல வகையான உதவிகளையும் வழங்கிவருகின்றது. இதன் மூலம் தமிழக மக்களை காலதிகால வரலாற்று பழிக்கு ஆளாக்கப் போகின்றது. தங்கள் உறவுகள் சின்னாபின்னப்பட்டு அழிந்து கொண்டிருக்கும் போது அவர்களின் உறவுகளான தமிழக மக்கள் தாம் பிரநிதித்துவப்படுத்தும் ஒரு அரசை தடுத்து நிறுத்த தவறிவிட்டனர் என்ற பழிதான் அது. தமிழர்கள் அல்லாத இந்திய மத்திய அரசின் கொள்கை வகுப்பாளர்களுக்கு ஈழத் தமிழர்களின் பிரச்சனை ஒருபோதும் விளங்கப்போவதில்லை. எந்த மக்களின் பிரச்சனை ஒருவருக்கு விளங்கவில்லையோ அந்த மக்கள் அழிவது பற்றியும் அவர்கள் கவலைப்படப் போவதில்லை ஆனால் தமிழக மக்கள் அவ்வாறு இருக்க முடியாது ஏனென்றால் அழிந்து கொண்டிருப்பது நீங்கள்.

- தாரகா (t.tharaga@yahoo.com)

Comments